நன்றி, மன்னிக்கவும் என பல செய்திகள் எனக்கு வருகின்றன! - 29 பட இயக்குநர் ரத்ன குமார் உருக்கம்!
ஓடிடியில் வெளியான 29 படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குநர் ரத்ன குமார் உருக்கம்...
29 திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு அந்தப் படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குநர் ரத்ன குமார் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ போன்ற படங்களில் வில்லனாக நடித்த நடிகர் விது நாயகனாக நடித்து வெளியான படம் “29”. இப்படத்தை, இயக்குநர் ரத்ன குமார் இயக்கியிருந்தார்.
அடையாள நெருக்கடியால் அவதிப்படும் 29 வயதாகும் இளைஞர் ஒருவரின் காதல் கதையாக உருவான இப்படத்தில் நடிகை பிரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படம் மே 8 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான “29” படத்தைப் பார்த்த பலரும் இப்படத்தின் கதையைத் தங்களின் வாழ்க்கையுடன் தொடர்பு கொள்ள முடிவதாகக் கூறி பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், 29 படம் ஓடிடியில் வெளியான பிறகு கிடைத்துள்ள பாராட்டுகளுக்கு இயக்குநர் ரத்ன குமார் இன்று (ஜூன் 13) நன்றி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“ஓடிடியில் வெளியான பிறகு கிடைத்த அமோக வரவேற்புக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது; அன்பால் உருகுகிறது. கடந்த சில நாள்களாக “நன்றி” மற்றும் “மன்னிக்கவும்” எனக் கூறும் பல செய்திகள் எனக்கு வருகின்றன. இப்படம் அவர்களுக்கு அளித்த உணர்விற்காக நன்றியும், திரையரங்கில் பார்க்கத் தவறியதற்காக வருத்தமும் தெரிவிக்கின்றனர்.
உங்கள் அன்பான வார்த்தைகளால் என்னை அரவணைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி. இப்படம் தங்களுக்கு ஒருவிதமான மன ஆறுதலைத் தந்ததாகப் பலர் கூறினர். உண்மையைச் சொல்லப்போனால், இப்படத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பே எனக்கு ஆறுதல் அளித்தது. அதேவேளையில், விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு, எனது அடுத்தடுத்த படைப்புகளில் இன்னும் சிறப்பாகச் செயல்படுவேன்” எனக் கூறியுள்ளார்.
Director Rathna Kumar has shared an emotional post regarding the reception the film '29' has received since its OTT release.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.