திரைத்துறையில் மட்டும் ஏன் பாலின பாகுபாடு? மியா ஜார்ஜ் கேள்வி!
மலையாள நடிகை மியா ஜார்ஜ் திரையுலகில் இருக்கும் பாகுபாடு குறித்து பேசியிருப்பதாவது...

மலையாள நடிகை மியா ஜார்ஜ் காஸ்மிக் சாம்சன் திரைப்படத்தின் புரமோஷன் விழாவில், “திரைத்துறையில் மட்டும் ஏன் இவ்வளவு பாலின பாகுபாடு இருக்கிறது” எனப் பேசியுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த மியா ஜார்ஜ் தமிழில் அமர காவியம் என்ற படத்தில் அறிமுகமானார். இன்று நேற்று நாளை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர் வெற்றிவேல், கோப்ரா, தி ரோட் படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக மலையாளத்தில் துடக்கம் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அபிஜித் ஜோசப் இயக்கத்தில் சந்தீப் பிரதீப் நாயகனாக நடித்துள்ள காஸ்மிக் சாம்சன் திரைப்படம் இன்று (நவ.27) வெளியாகியது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக மாதருபூமிக்கு அளித்த நேர்காணலில் நடிகை மியா ஜார்ஜ் பேசியிருப்பதாவது:
நடிகைகள் திருமணம் செய்து கொண்டால், மீண்டும் நடிக்க வரமாட்டார்கள் என திரைத்துறையினர் நினைத்துக் கொள்கிறார்கள். நாங்கள் திரும்ப வர தயாராக இருக்கிறோமா என யாரும் கேட்பதில்லை. எங்களுக்குக் குழந்தைப் பிறந்துவிடுவதால் நாங்கள் வரமாட்டோம் என அவர்களாகவே நினைக்கிறார்கள். என்னைப் பற்றி ஏன் இப்படி நினைக்கிறார்கள் எனக் கேட்கத் தோன்றும். ஆனால், என்னால் எல்லோரிடமும் கேட்கமுடிவதில்லை.
நான் நடிக்க வேண்டுமா இல்லையா என்பதை பிறர் முடிவெடுக்க வேண்டியதில்லை. பேருகால விடுப்புக்குப் பிறகு ஆசிரியைகளை யாரும் இப்படி கேள்வி கேட்பதில்லை. அதேபோலத்தான் எல்லா துறைகளிலும் இருக்கின்றன. ஆனால், திரைத்துறையில் மட்டும் ஏன் பாகுபாடு? திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொண்டாலே நடிக்க மாட்டோம் என நினைக்கிறார்கள்.
இந்தத் துறையில் மட்டுமே எங்களது முடிவை பிறர் எடுக்கிறார்கள். நடிக்க மாட்டேன் என எங்கேயும் கூறியதில்லை. நானும் தயாராக இருக்கிறேன் என திரைத்துறையினருக்குப் புரியவைக்க முயற்சிக்கிறேன் என்றார்.