20 ஆண்டுகாலக் காதலைக் கொண்டாடும் சூர்யா - ஜோதிகா!
நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி 20 ஆண்டுகால காதலைக் கொண்டாடும் விதமாக திருமண உறுதிமொழி புதுப்பித்தல் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி 20 ஆண்டுகால காதலைக் கொண்டாடும் விதமாக திருமண உறுதிமொழி புதுப்பித்தல் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்விலும் ரசிகர்கள் உள்பட பலருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றனர்.
சினிமா நட்சத்திரங்கள் பலரின் மேல் எழும் கிசுகிசுப்பு, விவாகரத்து வதந்திகள் போன்றவை என்றும் இருவரின் மீதும் இருந்ததில்லை.
Advertisement
Advertisement
காரணம், தனிப்பட்ட வாழ்விலும் சூர்யா மிக நேர்த்தியானவர் என ஜோதிகா அடிக்கடி குறிப்பிடுவார். ஜோதிகா குறித்து சூர்யாவும் பெருமிதமாகப் பேசுவார். நடிப்பைத் தாண்டி சமூக செயல்பாடுகளிலும் இருவரும் ஒருமித்த கருத்துகளை வைத்திருப்பதால் அனைவரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளனர்.
இருவரும் கடைசியாக சில்லென்று ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். திருமணத்திற்கு பின் பல ஆண்டுகளுக்குப் பின் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, அவ்வப்போது தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
சூர்யா - ஜோதிகா இணையின் திருமண பந்தம் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், அதுதொடர்பாக 'தொடர்ச்சி’ (The Sequel) என்ற பெயரில் திருமண உறுதிமொழி புதுப்பித்தல் காணொலி ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.
அதில், “எங்களின் 20 ஆண்டு கால காதலையும் சண்டைகளையும் கொண்டாடும் ஒரு திருமண உறுதிமொழி ஏற்பு. இது நிச்சயமாக ஒரு குறைகளற்ற திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் அல்ல.
இது எங்களின் குறைகள், விட்டுக்கொடுத்தல், புரிதல்கள், தியாகங்கள் மற்றும் சுயநலமின்றி ஒருவரையொருவர் நேசித்ததன் கொண்டாட்டம். இது எங்களுக்கான கொண்டாட்டம். நாங்கள் ஒருவருக்காக ஒருவர் மாறியதன் கொண்டாட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நிஜத்திற்கு வெகுதூரம் இருப்பதாக நினைத்த ஒரு கனவு, இப்போது என் வாழ்நாள் முழுவதும் நான் ரசித்து வாழும் நிஜமாக மாறியிருக்கிறது. என்ன ஒரு முரண்?” எனத் குறிப்பிட்டுள்ள ஜோதிகா, அதனுடன் தனது திருமண வாழ்க்கையின் புதிய உறுதிமொழி பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அதில், “இவையே எனது உறுதிமொழிகள்.
நான் ஒரு மகிழ்ச்சியான நபராக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். ஏனெனில், வாழ்வின் நேர்மறையான பக்கங்களை மட்டுமே பார்ப்பதற்கு நான் தேர்ந்தெடுக்கிறேன்.
நான் வாழ்க்கையைக் கொண்டாடுவேன் என்று உறுதியளிக்கிறேன். ஏனெனில் யாரை நீங்கள் காதலிக்கிறீர்களோ, அவர் தன்னை விட உங்களை மதிக்கையில் இந்த வாழ்க்கையே ஒரு வரமாகிகிறது.
நான் எப்போதும் குறை கூறமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். - மிகப் பரந்த வானத்திற்குக் கூட பூமியைத் தொடும் பாக்கியம் இல்லாதபோது நான் ஏன் குறை கூற வேண்டும்? நம்மைச் சுற்றி இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அரைகுறையானவையே. அந்த இடைவெளிகளை நாம் எவ்வாறு நிரப்புகிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது.
நான் என்றும் நன்றியோடு இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். - ஏனெனில் ஒவ்வொரு நாள் காலையும் என்னைப் பாதுகாக்கும் மனிதனின் கரங்களில் நான் விழிக்கிறேன். என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும், நான் வாழ்வதற்கு ஒரு காரணத்தையும் தந்த என் அழகான குழந்தைகளுக்காகவும் நன்றியோடு இருப்பேன்.
நான் ஆரோக்கியமாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். — ஏனெனில் நாம் சேர்க்கும் உண்மையான ஒரே சொத்து அதுமட்டுமே. மிகவும் ஆடம்பரமான செங்கல் வீடுகளில்கூட எப்போதும் விரிசல்களும், கறையான்களும், பழுதுபார்க்க வேண்டியதும் இருக்கவே செய்யும்.
நான் ஒரு சிறந்த தாயாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். — நான் சமைப்பதால், சுத்தம் செய்வதால் அல்லது உதவுவதால் மட்டுமல்ல. மாறாக என் புன்னகையால். தன் தாய் தந்தையின் வாழ்க்கையைத் தானும் வாழ வேண்டும் என்று என் குழந்தைகளை நினைக்க வைக்கத் தூண்டும் அந்தப் புன்னகையால்!
என்னுடைய சூர்யா, உனக்கு எப்போதும் குறைபாடுகள் கொண்ட அரைகுறையான மனைவியாகவே இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்! — உன்னோடு சண்டை போட்டு, பின் சமாதானமாகி, ஒவ்வொரு முறையும் உன்னோடு இன்னும் அதிக நெருக்கமாக இருக்கவே சண்டையிடும் மனைவியாக!
அனைத்திற்கும் மேலாக நம் இருவரின் நட்பைப் போற்றிப் பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கிறேன்! — ஏனெனில் உங்களுக்கு சமமானவராக, இன்னொரு மனசாட்சியாக, அரட்டை அடிக்கும் தோழராக மற்றும் சிறந்த நண்பராக இருக்கும் ஒருவர், உங்களின் கணவராகவும் உங்கள் குழந்தைகளின் தந்தையாகவும் சிறப்பான ஒரே மனிதருக்குள் அமைவது மிகவும் அரிதானது.
எனவே, நமது அடுத்த 20 ஆண்டுகளுக்கு வாழ்த்துகள் — குறைகளைக் கொண்ட நாம், நிறைவான புரிதலுடன்!” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜோதிகாவின் நெகிழ்ச்சியான இந்தப் பதிவு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
Suriya and Jyothika celebrate 20 years of love!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.