FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

காதல் ஹீரோ டூ மாஸ் ஹீரோவான விஜய்! பாக்ஸிங் சாம்பியன் பத்ரி!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... நடிகர் விஜய் அதிரடி மாஸ் ஹீரோவாக நடித்த 'பத்ரி' திரைப்படம் பற்றி...

Updated On : 20 ஜூன் 2026, 11:47 am IST
பத்ரி - X
பகிர்:

குஷி, பிரியமானவளே, ஃபிரண்ட்ஸ் என காதல் படங்களில் நடித்து வந்த விஜய், அதிரடியாக ஒரு மாஸ் திரைக்கதையுடன் கிக் பாக்ஸராக நடித்த படம்தான் 'பத்ரி'.

இயக்குநர் அருண் பிரசாத் தெலுங்கில் நடிகர் பவன் கல்யாணை வைத்து 'தம்முடு' என்ற படத்தை இயக்கினார். இதன் தமிழ் ரீமேக் வடிவமே விஜய்யின் 'பத்ரி'.

எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாத ஒரு கல்லூரி மாணவராக, தினமும் அப்பா(கிட்டி எனும் ராஜா கிருஷ்ணமூர்த்தி)வின் வசவுகளை வாங்கும் ஒரு மகன், தனக்காகப் பரிதாபம் கொள்ளும் அண்ணனுக்கு (ரியாஸ் கான்) தம்பியாக நடித்திருக்கும் விஜய்(பத்ரி)க்கு, தனக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் ஓர் அழகான தோழி(பூமிகா)யும் இருக்கிறார்.

Advertisement

Advertisement

ஒரு சாதாரண அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவன் விஜய் (பத்ரி), வசதிமிக்க மாடர்ன் கல்லூரி பெண்ணை (மோனல்) 'கரெக்ட்' செய்ய முயல்கிறார். இதனிடையே, தோழி பூமிகா (ஜானு), விஜய்யிடம் ஒருதலைக் காதல் கொள்கிறார். அண்ணன் கிக் பாக்ஸிங்கில் 'சாம்பியன்' ஆக வேண்டும் என்பதே கனவாக இருந்து வரும் நிலையில், அது நிறைவேற முடியாமல் போகவே அண்ணனின் கனவை நனவாக்க, தான் களத்தில் இறங்குகிறார் விஜய். கிக் பாக்ஸிங்கில் 'சாம்பியன்' ஆனாரா? தான் காதலித்த பெண்ணைக் கைப்பிடித்தாரா? அல்லது தன்னைக் காதலித்த பெண்ணைக் கரம் பிடித்தாரா? என்பதுதான் இப்படத்தின் கதை.

பத்ரி எனும் பத்ரிநாத மூர்த்தியாக விஜய், கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் அட்டகாசங்களும் சரி, பெண்ணின் பின்னால் சுற்றும் இளைஞனாகவும் சரி, அப்பா, அண்ணனின் கனவை நிறைவேற்றும் கிக் பாக்ஸராகவும் சரி சிறப்பாக நடித்திருப்பார். எந்த காலத்திலும் பொறுப்பில்லாமல் சுற்றி வரும் மகனை அப்பாவுக்குப் பிடிக்காது. மகனும் அதை கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் தனக்குப் பிடித்ததை மட்டுமே செய்துகொண்டிருப்பார். அப்படியான கேரக்டர்தான் விஜய். எப்படியாவது மோனலை (மமதி) காதலித்துவிட வேண்டும் என்று பல பொய்களை அடுக்கி, அதற்காகப் பல விதங்களில் மெனக்கெட்டு இறுதியில் அனைத்தும் சீட்டுக்கட்டுபோல ஒரு கணத்தில் சரிந்துவிடுகிறது. இயல்பு வாழ்க்கையையே அப்போதுதான் புரிந்துகொள்கிறார் விஜய்.

ஒருவன் எளிதாக கெட்டவன் ஆகிவிடலாம், ஆனால் கெட்டவனாக இருந்து நல்லவனாவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுபோலவே நல்லது செய்ய நினைத்தாலும் கெட்ட பெயர் வாங்கும் விஜய், அண்ணனுக்காகவும் தன்னை நல்லவனாக பொறுப்புள்ளவனாக நிரூபிக்கவும் ஒரு முடிவை எடுக்கிறார்.

கிக் - பாக்ஸிங் போட்டியில் அண்ணன் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில், தான் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அண்ணன் பயின்ற அதே பயிற்சியாளரிடம் செல்ல, அவர் பயிற்சி கொடுக்க மறுக்க, பின்னர் ஒருநாள் இரவு முழுவதும் மழையில் நனைந்து காத்திருந்து தன்னை நிரூபிக்கிறார் விஜய்.

பின்னர் பயிற்சியாளரிடம் கிக்- பாக்ஸிங் கற்றுக்கொண்டு இறுதியில் போட்டியில் ஜெயிக்கும் இடத்தில் மாஸ் காட்டுகிறார். காதல் படங்கள், பெரிதாக சண்டைக் காட்சிகளில் நடிக்காத விஜய் இந்த படத்தின் மூலமாக அதிரடி ஹீரோவானார் என்று சொல்லலாம். இந்த படத்தில் பாக்ஸராக நடிக்க, அவர் உண்மையிலேயே நிறைய பயிற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

பூமிகா 'அழகு தேவதையாக' படம் முழுவதும் தோன்றுகிறார். பூமிகாவுக்கு இது முதல் படம், விஜய்யுடன் சேர்ந்து நடித்த ஒரே படமும் இதுவே. மலேசியா வாசுதேவனின் மகளாக வருவார். விஜய்க்கு தோழியாகவும், காதலியாகவும், தன் முதல் படம் என்று இல்லாமல், தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருப்பார். அவர், காதலுடன் விஜய்யை அணுகும் காட்சிகள் குறிப்பிட வேண்டியது.

பணம் அல்லது உதவி கேட்டு அடிக்கடி தன்னிடம் வரும் விஜய்க்கு அனைத்து வகையிலும் உதவுகிறார் பூமிகா. ஒருகட்டத்தில் அது 'அவன் காதலிக்கும் பெண்ணிற்காகத்தான்' என்று உடைந்து நிற்கும்போது உண்மையில் அவர் மீது பரிதாபம் ஏற்படும் விதத்தில் நடித்திருப்பார்.

விஜய் ஒரு பணக்கார வீட்டுப் பையன் அல்ல என்று தெரிந்து மோனல் விட்டுச் சென்ற பின்னர் உடைந்து நிற்கும் விஜய், பின்னர் அப்பாவிடம் தன்னை நிரூபிக்க பாக்ஸிங் சாம்பியன் ஆவதும் பூமிகாவின் காதலை ஏற்றுக்கொள்வதுடன் படம் முடிகிறது. பாசத்திலும் சரி, ஹீரோயிசத்திலும் சரி விஜய் நேர்த்தியாக நடித்திருப்பார்.

பூமிகாவின் காதல் முன்னதாகவே விஜய்க்கு தெரிய வந்தாலும், போட்டியில் ஜெயித்த பிறகு அனைவரின் முன்னிலையிலும் பூமிகாவிடம் காதலைச் சொல்லி வாழ்க்கையிலும் ஜெயிக்கும் காட்சி 'எவர்க்ரீன்' ஆகவே இருக்கும்.

விஜய்யின் நண்பர் சஞ்சீவும் இப்படத்தில் அவரின் நண்பனாகவே நடித்திருப்பார். விவேக், தாமு என காமெடி நட்சத்திர பட்டாளமும் இப்படத்தில் குறைவில்லாமல் இருக்கும்.

பாடல்கள்

விஜய் படம் என்றாலே பாடல்கள் ஹிட்தான். இந்த படத்திலும் 'கிங் ஆப் சென்னை' என்று ஒரு மாஸ் பாடல் உண்டு. அந்த படத்தில் விஜய் காணும் கனவுதான் அந்த மாஸ் பாடல். இன்று அந்த கனவே நிஜமாகிவிட்டது எனலாம் (சென்னை மட்டுமல்ல... தமிழ்நாட்டின் 'கிங்' ஆகியிருக்கிறார் விஜய்)

'கலகலக்குது... கலகலக்குது...' பாடல் இன்றும் திருமண விழாக்களில் போடப்படும் டாப் லிஸ்டில் இருக்கிறது.

ஏஞ்சல் வந்தாலே..., காதல் சொல்வது உதடுகள் அல்ல.... என்னோட லைலா... என மெலோடி காதல் பாடல்களும் 90'ஸ் சாங்ஸ் என இன்றும் ரசிக்கத்தக்கவை.

இந்த படத்தில் ஒரு வசனம் வரும், "பயங்கரமா நடிக்குற, பேசாம நீ அரசியலுக்கு போயி தலைவன் ஆயிடலாம், நான் மந்திரி ஆயிடுறேன்" னு விஜய்யின் சித்தப்பா கதாபாத்திரத்தில் வரும் அனுமோகன் சொல்வார். அப்போது என்ன நினைத்து அந்த வசனம் வைத்தார்களோ தெரியவில்லை, இன்று அது உண்மையாயிற்று...

அதேபோல இந்த படத்தில் பல ஆண்டுகளாக பாக்ஸிங் சாம்பியன் ஆக வேண்டும் என்று கடுமையான பயிற்சி செய்வார் ரியாஸ் கான். ஆனால் அண்ணனை ரௌடிகள் அடித்ததால் அவர் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நேரத்தில், ஓரிரு வாரங்கள் மட்டுமே பயிற்சி பெற்று விஜய் சாம்பியன் ஆகிவிடுவார் - சினிமா ஹீரோயிசம்!

ஆனால், இப்போது அரசியலிலும் பல ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளை, கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் தோற்கடித்து ஆட்சிக்கும் வந்துள்ளார் நடிகர் (முதல்வர்) விஜய்.

இன்று விஜய் படம் டிவியில் ஒளிபரப்பினால் 'முதலமைச்சர் படம்' என்று சொல்லுமளவுக்கு நடிகர் விஜய், முதல்வர் ஜோசப் விஜய்யாக மாறினாலும் மக்கள் மனதில் ஓர் இடத்தை எப்போதும் தக்க வைத்திருக்கிறார்!

summary

Badri: Actor Vijay acted as college student turns to Kickboxing champion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments