உள்நாட்டு "கறுப்புப் பணம்'
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை மீட்கவேண்டும் என்ற குரல் சமீப காலமாக ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம், வெளிநாடுகளில் உள்ளதைப்போல, 2 மட
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை மீட்கவேண்டும் என்ற குரல் சமீப காலமாக ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
அதேநேரம், வெளிநாடுகளில் உள்ளதைப்போல, 2 மடங்கு கறுப்புப் பணம் உள்நாட்டில் தாராளமாக உலா வருவதுபற்றி யாரும் பெரிய அளவில் பிரச்னை எழுப்பாதது வியப்பாக இருக்கிறது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், தனியார் நிறுவன முதலாளிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் வருமான வரிப் படிவம் தாக்கல் செய்யும்போது முழு வருமானத்தையும் கணக்கில் காட்டுவதில்லை.
Advertisement
Advertisement
இப்படி கணக்கில் காட்டாமல் மறைக்கப்படும் கறுப்புப் பணத்தைப் பாதுகாப்பதற்காக சிலர் வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றனர். அப்படி முதலீடு செய்துள்ள தொகை சுமார் ரூ.75 லட்சம் கோடி என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுதவிர, ரூ.100 லட்சம் கோடி முதல் ரூ.150 லட்சம் கோடி உள்நாட்டில் புழங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என யோகாசன குரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, இந்திய முதலீட்டாளர்களின் விவரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, சில நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் சில நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், இவை எல்லாம் இனிமேல் செய்யக்கூடிய முதலீடு தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே உதவும். கடந்த காலங்களில் செய்யப்பட்ட முதலீடு தொடர்பான விவரங்களைப் பகிர்ந்துகொள்ள எந்த நாடும் முன்வராது.
எனவே, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பது கானல் நீராகத்தான் இருக்கும். கறுப்புப் பணம் உருவாகும் வழியைக் கண்டறிந்து அதை மூடுவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
சமூக ஆர்வலர்களும் வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்துவதற்கு பதில், இந்தியர்களின் கறுப்புப் பணம் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க ஆக்கப்பூர்மான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குரல் கொடுக்க வேண்டும்.
அடுத்தபடியாக, உள்நாட்டில் அனைத்துத் துறைகளிலுமே கறுப்புப் பணம் புழங்குகிறது.
குறிப்பாக நகர்ப்புற பெட்டிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், சில்லறை வர்த்தகப் பொருள்களின் முகவாண்மை நிறுவனங்கள், கட்டுமானப் பொருள் விநியோக நிறுவனங்கள், நகைக் கடைகள், திரைப்படத் துறை உள்ளிட்ட "அமைப்பு சாரா' துறைகளில் பெருமளவிலான கறுப்புப் பணம் புழங்குகிறது.
உதாரணமாக, நகரின் முக்கியப் பகுதியில் உள்ள சில பெட்டிக் கடை உரிமையாளர்கள் கூட தினசரி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகின்றனர். இதில் 10 முதல் 20 சதவீதம் வரை லாபம் கிடைக்கிறது.
பெட்டிக் கடையிலேயே இவ்வளவு வருமானம் என்றால், மற்ற வர்த்தக நிறுவனங்களின் வருமானத்தைக் கணக்கிட்டால் தலையே சுற்றும். இத்துறைகளில் புழங்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பற்றி வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. இதைக் கணக்கில் கொண்டுவர வருமான வரித் துறையும் முயற்சிப்பதில்லை.
அமைப்புசாரா தொழில் என்பதால் திரைப்படத் துறையிலும் பெருமளவு கறுப்புப் பணம் புழங்குகிறது. ஒரு கலைஞரின் உண்மையான சம்பளம் வெளியில் தெரிவதில்லை. அவர்களாக முன்வந்து ஒரு தொகையைச் சொல்கிறார்கள். அந்தத் தொகைக்கு மட்டும் வரி செலுத்துகிறார்கள். இதையெல்லாம் முறைப்படுத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்குக் கிடைக்கும்.
கறுப்புப் பணம் புழங்கும் மற்றொரு முக்கியத் துறை கல்வித் துறை. புற்றீசல்போல பெருகிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்காக லட்சக் கணக்கில் வசூல் வேட்டை நடத்துகின்றன.
தமிழகத்தில் உள்ள சில பொறியியல் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கு ரூ.10 லட்சம் வரையிலும், மருத்துவக் கல்லூரிகளில் ரூ.40 லட்சம் வரையிலும் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. அரசின் கட்டண நிர்ணயக் குழுக்களின் பரிந்துரைகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் முறையாக ரசீதும் வழங்கப்படுவதுமில்லை, கணக்கில் காட்டப்படுவதுமில்லை. இதனால், கல்லூரியாகத் தொடங்கப்படும் கல்வி நிறுவனம் ஓரு சில ஆண்டுகளில், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறிவிடுகிறது.
எந்த ஒரு நிறுவனமும் எதிர்பாராத வகையில் அபரிமிதமான வளர்ச்சியடையும்போது, முறையாக வருமான வரி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து வருமான வரித்துறை ஆய்வு நடத்துவதற்கு வகை செய்ய வேண்டும்.
இப்படி பல்வேறு துறைகளில் புழங்கும் கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி "ரியல் எஸ்டேட்' துறையின் மூலம் வெள்ளையடிக்கப்படுகிறது. அப்படி இருந்த போதிலும், இந்தத் துறையிலும் கறுப்புப் பணம் புழங்கத்தான் செய்கிறது.
உதாரணமாக, ரூ.1 கோடி சந்தை மதிப்புள்ள சொத்து, "வழிகாட்டு மதிப்புப்படி' ரூ.30 லட்சத்துக்குப் பதிவு செய்யப்படுகிறது. மீதம் உள்ள ரூ.70 லட்சம் கறுப்புப் பணமாகப் பரிமாறப்படுகிறது. இதனால் அரசுக்கு வரவேண்டிய முத்திரைத் தீர்வைக் கட்டணத்தில் இழப்பு ஏற்படுகிறது.
இன்றைய காலத்தில் எந்த ஒரு சொத்தும் அதன் உண்மையான "சந்தை மதிப்புப்படி' பதியப்படுவதில்லை.
இப்படி, ஒவ்வொரு சொத்துப் பரிமாற்றத்தையும் கணக்கில் கொண்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும். இதுபற்றி அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நடவடிக்கை இல்லை.
இப்படி உள்நாட்டிலேயே புழங்கும் பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, சராசரி மனிதனை பாதிக்கும் வகையில் எரிபொருள் விலையைக் உயர்த்தலாமா, உரம் மற்றும் உணவுப் பொருளுக்கான மானியத்தைக் குறைக்கலாமா என ஆலோசனை நடத்துவது கேலிக்கூத்தாக இருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.