FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இல்லறத்தில் தொடரட்டும் ஒற்றுமை

பல குடும்பங்களில் முரண்பாடுகளின் ஆணிவேராக இருப்பது கருத்து வேறுபாடுகள் மட்டுமல்ல, சொல்லப்படாத எதிர்பார்ப்புகளும்தான்.

50 வினாடிகள் முன்பு
திருமணம்
பகிர்:

திருமணம் என்பது இருவர் ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமல்ல; இரு மனங்கள், இரு குடும்பப் பின்னணிகள், இரு பழக்கவழக்கங்கள் இணைந்து ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கும் நெடும்பயணம். திருமணத்தைப் பாதுகாப்பது பெரிய தியாகங்களால் மட்டும் நிகழ்ந்துவிடுவதில்லை; அன்றாட வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் மதிக்கும் எளிய, சிறிய பழக்கங்களால்தான் அது நிலைத்து நிற்கிறது. அந்தப் பயணம் இனிமையாக அமைய அன்பு, புரிதல், மரியாதை, பொறுமை மற்றும் வெளிப்படையான உரையாடல் ஆகியவை தொடர்ந்து தேவைப்படுகின்றன.

தனது ஆன்மிக, அறிவுப் பயணத்தில் மனைவி லோகாம்பாளின் துணையும் பங்களிப்பும் முக்கியமானவை என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுள்ளார். அந்த நன்றியுணர்வை நினைவுகூரும் வகையில் மனவளக்கலை அமைப்புகளில் ஆகஸ்ட் 30 'மனைவி நல வேட்பு நாள்' எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் ஒருவர் செய்த பங்களிப்பை மற்றவர் இயல்பாக எடுத்துக்கொள்ளாமல், அதை உணர்ந்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதே இதன் முக்கியச் சிந்தனை.

இன்றைய குடும்ப வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து, இருவரின் உழைப்பையும் அங்கீகரிக்கும் உறவாகத் திருமணம் வளர வேண்டும். வீட்டுப் பணிகள், குழந்தை வளர்ப்பு, வருமானம் ஈட்டுதல், இரு தரப்பு முதியோரையும் கவனித்தல் போன்றவற்றை "யாருடைய வேலை?' என்று பிரிப்பதைவிட, "நமது கூட்டுப் பொறுப்பு' என்று அணுகும் மனப்பான்மை அவசியம். இங்கே "விட்டுக்கொடுத்தல்' என்பது ஒருவர் எப்போதும் அடங்கிப் போவதோ அல்லது தனது உரிமைகளை இழப்பதோ அல்ல; மாறாக, இருவருக்கும் முக்கியமான செயல்களில் ஆரோக்கியமான சமநிலையை உருவாக்கிக் கொள்வதே ஆகும்.

Advertisement

Advertisement

பல குடும்பங்களில் முரண்பாடுகளின் ஆணிவேராக இருப்பது கருத்து வேறுபாடுகள் மட்டுமல்ல, சொல்லப்படாத எதிர்பார்ப்புகளும்தான். பணம், குழந்தைகளின் எதிர்காலம், பெற்றோர் பராமரிப்பு, வீட்டு வேலைகள், தொழில் வளர்ச்சி, தனிப்பட்ட நேரம் ஆகியவற்றில் இருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். அவற்றை மனதில் வைத்துக்கொண்டு 'துணை தானாகப் புரிந்துகொள்ள வேண்டும்' என்று எதிர்பார்ப்பதைவிட, அமைதியாகப் பேசித் தெளிவுபடுத்திக் கொள்வது தேவையற்ற மனக் கசப்புகளைத் தவிர்க்கும்.

கருத்து வேறுபாடுகள் தம்பதியரின் இயல்பான அனுபவம்; ஆனால், அது பகையாக மாற வேண்டியதில்லை. தனிநபரைத் தாக்காமல், பிரச்னையை மட்டுமே மையப்படுத்திப் பேச வேண்டும். நீண்ட காலம் குறைகளை மனதில் சேர்த்து வைப்பது முரண்பாட்டைப் பெரிதாக்கும் என்பதால், அமைதியான ஒரு நேரத்தில் மனம் விட்டுப் பேசி, இயன்றவரை விரைவாகத் தீர்வு காண்பது நலம். அதேபோல், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது பலவீனமல்ல; அது முதிர்ச்சியின் அடையாளம். தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்டு, அதைத் திருத்திக் கொண்டு மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வது உறவை ஆழப்படுத்தும்.

நெருக்கமான உறவுகளும் பரஸ்பர ஆதரவும் மனிதர்களின் மன நலன் மற்றும் நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை. இதற்கென பெரிய ஏற்பாடுகள் தேவையில்லை; அன்றாடம் சிறிது நேரம் கைப்பேசியை ஒதுக்கி வைத்துவிட்டு மனம் திறந்து பேசுவதே போதுமானது. இருவரும் நல்ல நண்பர்களாக உரையாடுவதற்கான தனிப்பட்ட நேரம் தம்பதியருக்கு மிக அவசியம். மேலும், பொருளாதார முடிவுகளில் வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும்.

கணவன், மனைவி இருவரின் பெற்றோரையும் சமமாக மதித்து அன்பு செலுத்துவதும், அதேசமயம் தம்பதியின் தனிப்பட்ட முடிவுகளில் தேவையான ஆரோக்கியமான எல்லைகளைப் பேணிக் கொள்வதும் குடும்ப அமைதியைக் காக்கும். குடும்ப ஒற்றுமை என்ற பெயரில் தனி மனித சுதந்திரத்தை மறுக்காமல், இருவரின் தனிப்பட்ட விருப்பங்களையும் சுயமரியாதையையும் அங்கீகரிப்பதே முதிர்ந்த இல்லறம்.

அதேசமயம், திருமண உறவு வெறும் சட்டப்படியான ஒப்பந்தமாக மட்டுமே சுருங்கிவிடக் கூடாது. தேவையற்ற அச்சங்களும் மனத் தடைகளும் நீங்கி, உறவு தடையின்றி மலர, இருதரப்பு நம்பிக்கையும் ஆழமான புரிதலுமே முதன்மைத் தேவைகளாகும். ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து, பாதுகாப்பான உணர்வுடன் மனம் திறந்து பேசும்போது, உறவின் நெருக்கமும் இல்லறத்தின் இனிமையும் இயல்பாகவே வளர்கின்றன.

பெற்றோர் பரஸ்பரம் மரியாதையுடன் நடந்துகொள்வதும், முரண்பாடுகளை அமைதியாகக் கையாள்வதும் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த வாழ்க்கைப் பாடங்களாகும். அதேநேரம், தம்பதியரின் சச்சரவுகளில் குழந்தைகளை நடுவராக மாற்றவோ, ஒரு தரப்புக்கு ஆதரவாக இழுக்கவோ கூடாது. நவீன வாழ்வில், சமூக ஊடகங்களில் தெரியும் பிற குடும்பங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களுடன் தங்கள் வாழ்க்கையை ஒப்பிடாமல், எதார்த்தமான புரிதலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

தம்பதியரிடையேயான ஒவ்வொரு விவாதத்திலும் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை; தன் கருத்தை நிரூபிப்பதைவிட உறவைப் பாதுகாப்பதே மிகப் பெரிய வெற்றி; 'விவாதத்தில் யார் வென்றார்கள்?' என்பதைவிட 'நமது உறவு வென்றதா?' என்ற மனப்பான்மையே இல்லறத்தின் பலம். ஆண்டு முழுவதும் "நன்றி', 'மன்னிக்கவும்', 'நான் உனக்காக இருக்கிறேன்' என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் எளிய பழக்கங்களை வளர்ப்போம்.

குடும்பம் என்பது சுவர்களால் உருவாவதல்ல; தம்பதியரிடையேயான பரஸ்பர நம்பிக்கையால் கட்டமைக்கப்படுவது. அந்த நம்பிக்கையை தினமும் சிறு செயல்களால் போற்றிப் பாதுகாத்தால், குடும்ப நலனும் சமூக ஒற்றுமையும் இயல்பாகவே தழைத்தோங்கும்.

நாளை (ஆகஸ்ட் 30)

மனைவி நல வேட்பு நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments