ஏரிகள் பராமரிப்புக்கு முன்னுரிமை
மக்களின் குடிநீர், விவசாய பயன்பாட்டுக்கான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதுடன் மட்டுமின்றி பறவைகள், விலங்குகளின் குடிநீர் ஆதாரமாகவும் ஏரிகள் விளங்குகின்றன.
மக்களின் குடிநீர், விவசாய பயன்பாட்டுக்கான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதுடன் மட்டுமின்றி பறவைகள், விலங்குகளின் குடிநீர் ஆதாரமாகவும் ஏரிகள் விளங்குகின்றன. ஏரிகளில் போதிய நீரைத் தேக்கி வைப்பதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்த முடிகிறது.
எனவேதான் பழங்காலந்தொட்டு ஏரிகளை உருவாக்குவதிலும் அவற்றைப் பராமரிப்பதிலும் நம் முன்னோர் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தனர்.
பழங்காலத்தில் ஏரிகளைப் பராமரிக்கவும், மழைக் காலங்களில் ஏரிகள் நிரம்பி கரைகள் உடையாமல் இருப்பதைக் கண்காணிக்கவும் காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஏரிகளைத் தூர் வாருவது, கரையைப் பலப்படுத்துவது போன்ற பணிகளில் மக்களே தாமே ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இதை "குடிமராமத்து' என்று அழைத்தனர்.
Advertisement
Advertisement
பத்தாம் நூற்றாண்டில் ராஜாதித்த சோழ மன்னரால் வெட்டப்பட்ட சுமார் 15 கி.மீ. சுற்றளவு கொண்ட வீராணம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி ஆகும். உலகில் மனித ஆற்றலால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நீர்த்தேக்கம் என்ற பெருமை வாய்ந்த வீராணம் ஏரி, சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் நீர்ப்பாசனத் தேவையை நிறைவு செய்வதுடன், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாக உள்ளது.
நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான ஏரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகமும் ராஜஸ்தானும் திகழ்கின்றன. தமிழகத்தில் பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 39,202 ஏரிகள் உள்ளன. இதில் நீர்
வளத் துறை கட்டுப்பாட்டில் 13,710 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக, ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ளன.
1906-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னையில் மட்டும் சுமார் 474 ஏரிகள் இருந்துள்ளன. ஆனால், தற்போது உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 43 மட்டுமே. பெரும்பாலான ஏரிகள் தூர்க்கப்பட்டு, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் தொழிற்பேட்டைகள் என உருமாற்றம் பெற்றுவிட்டன. சென்னையின் மையப் பகுதியில் இருந்த முகப்பேர் ஏரி தூர்க்கப்பட்டு "முகப்பேர் ஏரி திட்டம்' என்ற பெயரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் ஏற்படுத்தப்பட்டதுதான் நகைமுரண்.
நிலத்தடி நீரை உயர்த்துவதில் ஏரிகளைப் போலவே முக்கியப் பங்காற்றுவதுடன், சுற்றுச்சூழல் சமநிலையை சதுப்பு நிலங்கள் நிலைநாட்டுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஒருசில சதுப்பு நிலங்
களில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பரப்பளவு 100 ஆண்டுகளுக்கு முன்னர் 15,000 ஏக்கராக இருந்த நிலையில், தற்போது 2,500 பரப்பளவாக குறைந்து போனது மழைக்காலங்களில் இச்சதுப்பு நிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பரப்பளவு குறைந்து போனதும் முக்கியக் காரணமாகும்.
ஏரிகளின் சுற்றுப்புறங்களில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள், நீர்ப்பரப்பில் காணப்படும் நெய்வேலி காட்டாமணி, ஆகாயத் தாமரை போன்றவற்றை காணும்போது ஏரிகள் பராமரிப்பில் நாம் போதிய விழிப்புணர்வு அடையவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் பருவமழை போதிய அளவு பெய்ததால் பல மாவட்டங்களில் 100% ஏரிகள் நிரம்பி இருந்தன. இதற்கு மாறாக, நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 46 சதவீதம் குறைவாகப் பெய்தது ஏரிகளின் நீர்மட்டத்தை வெகுவாகக் குறைத்து விட்டது. கூடுதலாக, வெப்பநிலை இயல்பு அதிகமாக இருப்பதால் நீர்நிலைகள் உள்ள நீர் ஆவியாகி நீர்மட்டம் மேலும் குறைந்துபோய் உள்ளது.
ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை மூலமே தமிழகம் அதிகபட்ச மழைநீரைப் பெறுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்தப் பருவமழை தரும் நீர், உபரி நீராக கடலில் சென்று கலக்காமல் இருக்க, ஏரிகளைத் தூர்வாரச் செய்வது அரசின் அவசியக் கடமையாகும்.
இதற்கு பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வர வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம், குறிச்சி கிராமத்தில் சுமார் 383 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் ஏரியை அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சில தொண்டு நிறுவனங்
களின் உதவியுடன் தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக அந்த ஏரியில் 93 கோடி லிட்டர் நீர் மட்டுமே சேமிக்க முடியும் என்ற நிலை மாறி தற்போது 542 கோடி லிட்டர் அளவு நீரைச் சேமிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் தேசிய ஏரிகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் "அமிர்த சரோவர்' திட்டத்தின்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ஏரிகளை உருவாக்குதல், பராமரித்தல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்கு முதலில் ரூ.914.52 கோடி செலவிடப்பட்டது. அடுத்தகட்டமாக 2024-ஆம் ஆண்டு ரூ.4,276 கோடி ஒதுக்கப்பட்டது. மழை நீரை ஏரிகளில் சேமிக்காது கடலில் கலக்க விட்டு, பின்னர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடுவதைக் காட்டிலும், ஏரிகள் பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்குவதே ஏற்கத்தக்கது.
தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை நெருங்கிவரும் சூழலில், வீடுகள், அரசு அலுவலகக் கட்டடங்களில் மழை நீரைச் சேமிப்பதுடன், ஏரிகளையும் நன்கு பராமரித்தால் விவசாயம் மற்றும் குடிநீருக்கான தேவையில் தன்னிறைவு அடைய முடியும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.