முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வாழ்க்கைப் பயணம்

புதிய உலகத்தை நமக்குக் கண்திறந்து காட்டும் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி...

Updated On : 15 ஜூன் 2026, 4:10 am IST
வாழ்க்கைப் பயணம்
பகிர்:

நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள். அவைதாம் இந்த சமுதாயத்தை நமக்குப் புதிதாக அறிமுகப்படுத்தியவை.

சிறு வயது பயணங்களின்போது பேருந்திலோ அல்லது புகைவண்டிகளிலோ எப்போதும் ஜன்னல் ஓரத்து இருக்கைக்குக் கடும் போட்டியிருக்கும். அதற்குக் காரணம், இந்தப் புதிய ஓடும் உலகத்தை ஒரு ஜன்னல் வழியாக முதன்முதலில் வேடிக்கை பார்க்க விரும்பியதுதான். அதிவிரைவுப் பயணங்களின்போது நாம் போகிற திசைக்கு எதிர்திசையில் மரங்கள், வீடுகள், பாலங்கள் என்று பார்க்கிற எல்லாமே கடந்து விரைந்து போகும். அந்த அதிசயம் நம்மைப் பரவசத்துக்குள்ளாக்கும். எத்தனையெத்தனையோ புதிய சிந்தனைகளை உருவாக்கும்.

கற்பனைகளை நம்முள் விதைக்கும். ஒவ்வொரு புதிய ஊர் வருகிறபோதும் அந்த ஊரின் பெயர் என்ன என்பதை வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், அறிவிப்புப் பலகைகள் இவற்றில் படிக்கத் தொடங்கி, காண்கிற ஒவ்வொரு விளம்பரப் பலகையையும் வாசித்து நம்முடைய மொழியறிவை வளர்த்துக் கொண்ட காலம் அது.

Advertisement

Advertisement

மலைகள், காடுகள், ஆறுகள் இவற்றையெல்லாம் கண்டு கண்டு கண்ணுக்குள் பசுமை கொலுவீற்றிருந்தது அந்தக் காலம். பரந்த வயல்வெளிகளினூடே நுழைந்து வருகிற ஈரக்காற்றை மண்வாசனையுடன் சேர்த்து அந்தப் பயணங்களில்தான் முழுமையாக அனுபவித்தோம். பலதரப்பட்ட மக்கள் சமூகத்தையும். அவர்களின் மொழிக்கூறுகளையும், நடை, உடை, பாவனைகளையும் கூர்ந்து கவனிக்கக் கற்றது இந்தப் பயணங்களின் மூலமாகத்தான்.

பயணத்தின்போது பகரப்படும் உரையாடல்களும் கதையாடல்களும் ஏட்டில் எழுதா இலக்கியங்களைப் போலவும் காற்றில் வந்த கருத்து மழையைப் போலவும் பெருமை மிக்கவை. நம்முடைய அறிவுக்கேற்ற அளவிலே பயணங்கள் நமக்கு அனுபவப் பாடங்களை நடத்தியிருக்கின்றன.

பொதுவான மோட்டார் வாகனச் சட்டங்களைப் பயணங்களின்போது வண்டிகளில் எழுதப்பட்டிருக்கும் அச்செழுத்துகளின் மூலமாகத்தான் கற்றுக் கொண்டோம். வகுப்பறையிலும் பாடநூல்களிலும் புத்தகங்கள் வழியாகப் பார்த்த திருக்குறளைப் பேருந்துப் பயணங்களில் அதிகம் படித்துத் தெரிந்து கொண்டோம். ஆனால், இவற்றையெல்லாம் நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறபோது அந்த உலகம் ஒரு பழைய உலகமாகத் தோன்றுகிறது.

இன்றைய நவீன காலத்தில் நம்முடைய குழந்தைகளுக்கு இந்தப் பயணத்தின் அற்புதங்கள் புரிவதில்லை. பெரும்பாலான பிள்ளைகள் ஜன்னலோரத்தை விரும்பினால் வெளியே வேடிக்கை பார்ப்பதற்கு விரும்புவதில்லை. இயன்றவரையிலும் தனி இருக்கை கிடைத்தால் நல்லது என்று கருதுகிறார்கள். இன்னும் பலர் எந்த இருக்கையானால் என்ன இருக்கவே இருக்கிறது கைப்பேசி என்று அதனுள்ளே மூழ்கிப் போகிறார்கள்.

எந்த ஊருக்குப் போகிறோம்?, இப்போது எந்த ஊரைக் கடந்து கொண்டிருக்கிறோம்?, எந்த வழியாகப் போகிறோம்?, எவ்வளவு நேரம் ஆகும்? என்கிற விவரங்களையெல்லாம் கைப்பேசி வழியாகவே அறிந்து கொள்ள முடிவதால் அவர்கள் நிமிர்ந்துகூடத் தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதில்லை.

இன்னும் சிலபேர் காதுகளையும்கூட அடைத்துக் கொண்டு வெளிச் சப்தங்களும் தன்னுள் வந்து விடாதபடி 'ரீல்ஸ்' உலகத்தில் மூழ்கி வேடிக்கையில் ஆழ்கிறார்கள். ஒரு முப்பதாண்டுகள் இடைவெளியில் நம்முடைய உலகம் இயந்திரமயமாக மாறியிருக்கிறது. கைப்பேசிகளின் வரவே இப்படியென்றால் இன்னும் இயந்திர மனிதர்களாகிய ரோபோக்கள் வந்துவிட்டால் என்னவாகும்? அந்தக் காலமும் வெகுதொலைவில்லை.

ஆனால், நாம்தான் இயற்கையிலிருந்து வெகுவாக விலகி அந்நியப்பட்டுப் போவோம். இந்த அந்நியம் இன்றைக்குத் தோன்றியதில்லை. மேலை நாடுகளில் 300 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. இந்த இயற்கைக்கு முரணான செயற்கை வாழ்வுக்கு எதிராகத் தன்னுடைய வாழ்க்கையை மாற்றி இந்த உலகையும் மாற்றிக் காட்டியவர் மகாத்மா காந்தி.

அதற்கு அடிப்படையாக அமைந்தவை அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த பயண அனுபவங்கள்தான். அவர் வாழ்க்கையின் எத்தனையோ பயண அனுபவங்களுக்கு மத்தியில் இரண்டு பயணங்கள் அவரை மனிதருள் மகாத்மாவாக ஆக்கிய பெருமைக்குரியவை.

முதலாவது பயணம் 1893 ஜுன் 7-ஆம் தேதி நிகழ்ந்தது. தென்னாப்பிரிக்காவில் டர்பனிலிருந்து பிரிட்டோரியாவுக்கு ரயிலில் பயணம் செய்தபோது, முதல் வகுப்புப் பயணச்சீட்டை அவர் பெற்றிருந்தும், வெள்ளையர் அல்லாதவர் என்ற ஒரே காரணத்துக்காக மகாத்மா காந்தி பீட்டர் மரிட்ஸ் பர்க் நிலையத்தில் தனது பெட்டியில் இருந்து வெளித்தள்ளப்பட்டார்.

வாழ்க்கையின் நிதர்சனத்தையும், போராட்டக் குணத்தையும் அவருக்குள் விதைத்தது இந்தப் பயண அனுபவம். அதன் வாயிலாகத்தான் பழங்காலப் போர்க் கொடுமைக்கு மாற்றான 'சத்தியாக்கிரகம்' என்னும் உயர்ந்த அறவழிப்போராட்டம் இந்த உலகுக்குக் கிடைத்தது. இந்தப் பயண அனுபவம் அவருள் அக மாற்றத்தைத் தந்தது. இரண்டாவது பயணம் 1921 செப்டம்பரில் நிகழ்ந்தது. இது தென்னாட்டை நோக்கி நிகழ்ந்த அவரது இரண்டாவது பயணமும்கூட. இந்தப் பயணம் அவருள் புற மாற்றத்தையும் திருஉரு மாற்றத்தையும் ஒருசேரத் தந்தது. இந்தப் பயணத்தில்தான் அவர் தனது பழமரபு உடையைக் களைந்தார். அந்தப் பயண நிகழ்வைக் காந்தியடிகள் விவரிக்கிறார்: சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் செல்லும் வழியில், எங்கள் பெட்டியில் சூழலைப் பற்றிச் சற்றும் கவலைப்படாத கூட்டத்தைக் கண்டேன்.

விதிவிலக்கின்றி அவர்கள் அனைவரும் வெளிநாட்டு ஆடம்பர உடைகளை அணிந்திருந்தனர். அவர்களில் சிலருடன் நான் உரையாடலில் ஈடுபட்டு, கதர் ஆடைக்கு மாறுமாறு வேண்டினேன். அவர்கள், 'கதர் வாங்க முடியாத அளவுக்கு நாங்கள் ஏழைகள், அது மிகவும் விலை உயர்ந்தது' என்று தலையசைத்தனர். அந்தக் கூற்றின் பின்னால் இருந்த உண்மையின் தாக்கத்தை நான் உணர்ந்தேன்.

நான் எனது பனியன், தொப்பி மற்றும் முழு வேட்டியை அணிந்திருந்தேன். அவர்கள் நான்கு அங்குல அகலமும் ஏறக்குறைய அதே அளவு நீளமும் கொண்ட தங்கள் லங்கோட்டியைத் தவிர வேறெதையும் அணியவில்லை. கட்டாய நிர்வாணத்தில் இருந்த லட்சக்கணக்கான ஆண்கள், தங்கள் அங்கங்களின் வழியே அப்பட்டமான இந்தச் சமுதாயத்தின் வறுமை என்னும் உண்மையை வெளிப்படுத்தினர்.

நானும் கண்ணியமாக இருக்க விரும்பினேன். என்னால் முடிந்த ஒவ்வொரு அங்குல ஆடையையும் களைந்து, அதன் மூலம் இன்னும் அதிகமாக என்னை ஆடையற்ற கூட்டத்துடன் இணைத்துக் கொள்வதைத் தவிர, வேறு என்ன பயனுள்ள ஆதரவை நான் அவர்களுக்குக் கொடுக்க முடியும்? மதுரைப் பயண அனுபவத்தைப் பெற்ற மறுநாள் காலையிலேயே நான் இதைச் செய்தேன்” என்று பதிவிடுகிறார். மதுரைக்கு அவர் மேற்கொண்ட ரயில் பயண நிகழ்வின் தாக்கமும் அதன்மூலம் ஏற்பட்ட எண்ண எழுச்சியும் அவருடன் வாழ்க்கை முழுவதுமே தொடர்ந்து பயணித்தது.

1921 செப்டம்பர் 22 அன்று மகாத்மா காந்தி ஓர் எளிய வேட்டியையும் மேல்துண்டையும் அணிவது என முடிவு செய்தார். அவர் மதுரையில் உள்ள மேற்கு மாசி வீதியில், தனது சீடர் ஒருவரின் 251-ஆம் எண் வீட்டின் மேல்மாடியில் தங்கியிருந்தார். அன்று காலையில் இராமநாதபுரம் புறப்பட்டு அங்கிருந்து திருநெல்வேலிக்குச் செல்வதாகப் பயணத் திட்டம் இருந்தது. அவர் அந்தப் பயணத்துக்காக அறையை விட்டு வெளியே வந்தபோது, ஒரு தமிழ்மரபு சுட்டுகிற 'உடுப்பவை இரண்டே' என்னும் எளிய தோற்றப் பொலிவுடன், ஒரு தனித்துவம் மிக்க நாகரிக வெளிப்பாட்டுடன் காட்சியளித்தார்! மதுரையிலிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தபோது, செல்லும் வழியெல்லாம் மக்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.

மகாத்மா காந்தியின் புதிய அரைக்கோவண உடை அவர்களை வியப்பிலும் அன்புக் கலப்பிலும் திளைக்கச் செய்தது. அந்தக் கோலத்தில் மகாத்மா காந்தி முதன்முதலில் பொதுவெளியில் தோன்றிய மதுரைமண், இப்போது, 'காந்தி மைதானம்' என்று அழைக்கப்படுகிறது. அவர்தம் திருவுருவ மாற்றத்தின் காரணமான எளிமையின் வெளிப்பாட்டை நமக்கு உணர்த்தும் விதமாக அவருடைய திருவுருவச் சிலை ஒன்றும் அங்கு இந்தப் பயணத்தின் சாட்சி கூறி நிற்கிறது.

'ஆள் பாதி ஆடை பாதி' என்னும் பழமொழிக்குப் புதிய மெய்ப்பொருள் கண்டுணர்த்தி மக்கள் மனத்திலே நிலைத்த இடம் பெற்றவர் மகாத்மா காந்தி. புத்தர்பிரான் அரச போகங்களை விடுத்து விட்டு நகர்வலம் வந்தபோதுதான் இந்த உலகத்தின் உண்மை நிலையை அறிய முடிந்தது. அதனால்தான் பண்டைய மன்னர்கள் மாறுவேடமணிந்து நகர்வலப் பயணம் மேற்கொண்டு இந்தச் சமுதாயத்தின் உண்மை முகத்தைக் காண விரும்பியிருக்கிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் நம்முடைய வாழ்க்கையே பயணம்தான். அதைத்தான் மகாத்மா காந்தியும் தன் வாழ்வின் மூலமாக நிறுவியுள்ளார். தனது வாழ்க்கையை ஒரு சத்தியப் பயணமாகவே மேற்கொண்ட அவர், அந்த வரலாற்றைச் 'சத்திய சோதனை' என்ற பெயரிலேயே பதிவிட்டார்.

'எனது வாழ்க்கையே நான் இந்த உலகத்துக்குத் தருகிற செய்தி' என்றும் குறிப்பிட்டார். பயணங்கள் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றும் தன்மையுடையவை- புதிய உலகத்தை நமக்குக் கண்திறந்து காட்டுபவை. நமக்கும் அத்தகைய நல்ல பயணங்கள் வாய்க்கட்டும்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.