FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பரந்தூர் தரும் பாடம்

மக்களாட்சி என்பது ஒரு சிலருக்கானது அல்ல. பெரும்பான்மையான மக்களுக்கானது என்பதே பரந்தூர் கூறும் பாடமாகும்.

4 செப்டம்பர் 2026, 4:47 am IST
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்.
பகிர்:

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. வளர்ந்துவரும் சென்னை மாநகரத்தின் தேவை, பயணிகள் வசதி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கவும், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான இடம் பெரிய அளவில் விவசாயிகளைப் பாதிக்காத, அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையில் அமைய வேண்டும். ஆனால், முந்தைய அரசு விவசாயிகளைப் பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும், குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து கடந்த 20.01.2025 அன்று தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் அங்கு சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

Advertisement

Advertisement

பின்னர், சென்னை பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் அமையவிருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்தார். தொழில் வளர்ச்சி மற்றும் அதில் விமான நிலையங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததுதான்.

எனினும், பரந்தூரில் இந்தத் திட்டம் அமையக்கூடாது என்பதும், அதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதும் போராடும் மக்களின் கோரிக்கையாக இருந்தது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காமல் விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த நிலையில், புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள், துறை வல்லுநர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும். ஏற்கெனவே உறுதியளித்தபடி பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் புதிய அரசால் கைவிடப்படுகிறது.

இதற்கிடையே சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள், துறை வல்லுநர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதற்கு சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களின் தொழில்நுட்பச் சாத்தியக் கூறுகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து அதன் வடமேற்குப் பகுதியில் ஆண்டுக்குக் கூடுதலாக 2 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் புதிதாக 5-ஆவது பயணிகள் முனையம் மற்றும் அதற்கான அணுகு சாலை, மேம்பாலம் அமைக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த விமான நிலையத்தில் நடந்துவரும் 3-ஆவது பயணிகள் முனையம் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, ஆண்டுக்கு 3.50 கோடி பயணிகளைக் கையாளக் கூடியதாக இருக்கும். அந்த முனையம் செயலாக்கத்துக்குப் பிறகு, ஆண்டுக்கு மொத்தம் 5.50 கோடி பயணிகளைக் கையாளக் கூடியதாக இந்த விமான நிலையம் அமையும்.

இதன்மூலம் சென்னை விமான நிலைய சேவைகள் மேம்படுத்தப்படுவதுடன், புதிய விமான நிலையம் அமையும் வரை பயணிகளின் போக்குவரத்துத் தேவை நிறைவு செய்யப்படும். இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பு கூறுகிறது.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விமான நிலையம் விரிவாக்கம் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதற்காக ஏழை, எளிய, விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் கிராமங்களையும் அழித்துத்தான் அதை அமைக்க வேண்டுமா? அந்த மக்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டாமா?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சுமார் 5,746 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களைக் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டது.

இதனால் தங்கள் வீடுகள், விளைநிலங்கள், நீர்நிலைகள் மற்றும் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்கள் வாழ்விடங்களை இழக்க நேரிடும் என்று அஞ்சினர். இதனால், ஏகனாபுரம் உள்ளிட்ட அந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக இரவும், பகலும் 1,000 நாள்களுக்கும் அதிகமாக பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வரைபடத்தில் ஏகனாபுரம் கிராமமே இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் அவர்கள் உறுதியுடன் நின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் திமுக ஆட்சியாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திர நாதன் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அறிக்கையை திமுக ஆட்சிக் காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தனர்.

மக்களின் விருப்பத்துக்கு மாறாக எந்தத் திட்டத்தையும் கொண்டு வர முடியாது என்பதை, மண்ணின் மக்கள் ஒன்றுபட்டால் அதிகாரத்தையே பணிய வைக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். இந்த அறிவிப்புடன் புதிய அரசின் பொறுப்பு முடிந்துவிடவில்லை.

விமான நிலையம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், வேறு திட்டங்களுக்குத் திருப்பி விடாமல் விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் விவசாயிகள், பொதுமக்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க பழைமையான கம்பன் கால்வாய் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து உள்ளிட்ட நீர்நிலைகள் பாதிக்கப்படும். சென்னை மாநகரின் மேற்குப் பகுதியில் இருந்து வரும் வெள்ள நீரால் எதிர்காலத்தில் சென்னை மாநகரமே வெள்ள பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் என்றும் கூறுகின்றனர்.

இவர்கள் போராட்டம் வெற்றியடைந்து விட்டாலும் அவர்கள் முன் பல கேள்விகள் எழுந்து நிற்கின்றன. இந்தத் திட்டத்துக்கு மொத்தம் 5,746 ஏக்கர் நிலம் தேவைப்பட்ட நிலையில், அதிகார அழுத்தம் காரணமாக நெருக்கடி தந்து அவர்கள் சுமார் 1,770 ஏக்கர் விவசாயம் மற்றும் குடியிருப்புப் பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பெரும்பாலான விவசாயிகள் எதிர்த்த நிலையில் கைவிடப்பட்ட இந்தத் திட்டத்துக்கான நிலத்தை இனி என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வரும் என்று நம்பி அன்றைய ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், மனை வணிக நிறுவனங்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளன. இவ்வாறு பலரும் நிலங்களை வாங்கிக் குவித்ததால் கடந்த சில ஆண்டுகளில் நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. இப்போது விமான நிலையம் இல்லை என்றதும் நிலங்களின் மதிப்பு சரிந்துள்ளது.

இதை ஈடுகட்ட அவர்கள் 'சிப்காட்' தொழிற்சாலை கொண்டுவர வேண்டும் என்று அரசிடம் முறையிடுகின்றனர். தமிழ்நாட்டில் தேவைக்கும் அதிகமாக 'சிப்காட்' உள்ளன. பல இடங்களில் சிப்காட்டுக்காக எடுக்கப்பட்ட நிலங்கள் பயனற்று விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சரே கூறியுள்ளார்.

'எங்க ஊரைக் காப்பாத்தணும் சாமி' என்று கண்ணீருடன் எல்லையம்மன் சந்நிதியில் நின்ற ஏகனாபுரம் மக்களின் கூட்டுப் பிரார்த்தனை இன்று பலித்திருக்கிறது என்று போராட்டக் குழுவினர் கூறியிருப்பது அவர்களது நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன் 1,000 நாள்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தி சாதனை புரிந்துள்ளனர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தனது அரசியல் பயணத்தை போராட்டக் களமான ஏகனாபுரம் மண்ணில் தொடங்கி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதன்மூலம் பரந்தூர் தமிழக வரைபடத்தில் அழிக்கப்பட முடியாத அடையாளமாக மாறியுள்ளது.

'இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது' என்று மகாத்மா காந்தி கூறினார். கிராமங்கள் என்பது விவசாயிகளும், வயல்வெளிகளும், நீர்நிலைகளும் நிறைந்ததாகும். இந்தச் சேற்று வயல்களில்தான் உண்ணும் உணவு உற்பத்தியாகிறது. இதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

நமது ஆட்சியாளர்கள் கிராமங்களை அழித்து நகரங்களாக மாற்றவே அதிகாரம் செய்கின்றனர். இந்த அதிகாரத்தை ஏழை, எளிய மக்களே அளித்தனர் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். தேர்தல் தோல்விக்குப் பிறகே காரணம் தேடுகின்றனர். சரியான காரணம் தெரியாமல் காரணம் தேடக் குழுக்களை நியமிக்கின்றனர்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு

என்று நாட்டுக்கு இலக்கணம் கூறுகிறது திருக்குறள். பசி, பிணி, பகை இல்லாத நாடே வளர்ச்சியடைந்த நாடாகும். மக்களாட்சி என்பது ஒரு சிலருக்கானது அல்ல. பெரும்பான்மையான மக்களுக்கானது என்பதே பரந்தூர் கூறும் பாடமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments