FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"சகோதர, சகோதரிகளே...!'

10 செப்டம்பர் 2026, 5:02 am IST
சுவாமி விவேகானந்தர்.
பகிர்:

த. தங்கமணி

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்தினார்.

"சகோதர, சகோதரிகளே...!' என்று தொடங்கிய இந்த உரையானது, இன்று வரை அனைவராலும் போற்றப்படக்கூடிய உலகப் புகழ்பெற்றது. இச்சொற்பொழிவின் நினைவாகவும் உலக அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாகவும் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் தேதி "உலக சகோதரத்துவ தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

முதன்முதலில் இந்திய மண்ணில் இருந்து சென்ற ஓர் ஆன்ம ஞானி விடுத்த உலக சகோதரத்துவத்துக்கான அழைப்பு இது. இந்த பூமியில் மனிதர் பலர், "தனது மதமே உண்மை; பிற மதங்கள் தவறானவை; அவை நிலைத்திருக்க உரிமையற்றவை' என்பது சமய வரலாற்றில் தொடர்ந்து வைக்கும் வாதமாகும். இவ்வாறான சுயமத மேட்டிமை வாதமும், பிற மதங்களை நிராகரிக்கும் போக்கும் மனிதகுலத்தை ரத்தக் களரியிலும், முரண்பாடுகளிலும் ஆழ்த்தும் என்பதை விவேகானந்தர் தம் சிகாகோ உரையில் ஆழமாக எச்சரித்தார்.

இது அவரது கருத்து என்பதைவிட சமயம் சார்ந்த அவரது தீர்க்க தரிசனம் என்பதே சாலப் பொருத்தமானது. அதனால்தான் உலகம் முழுவதும் சேர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடிய ஒரே சொற்பொழிவாக சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை அமைந்திருக்கிறது.

"நதிகள் யாவும் பல்வேறு வழிகளில் தோன்றி இறுதியில் ஒரே கடலில் சங்கமிப்பதுபோல, மனிதகுலம் பின்பற்றும் அனைத்து மார்க்கங்களும் ஒரே பரம்பொருளையே அடைகின்றன' என்ற இந்திய வேதாந்தக் கோட்பாட்டை சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ உரையின் வாயிலாக உலகிற்குப் புலப்படுத்தினார்.

அதனுடன் இந்திய ஆன்மிக மரபு பல்வேறு மதங்களையும், சிந்தனைப் பாதைகளையும் பெருமளவு மதித்து வருவதையும் அவர் பிரகடனம் செய்தார். பிறரை வெறுக்காமல் மதிப்பதும், வேறுபாடுகளுக்கு இடையே ஒற்றுமையைக் காண்பதும் இந்திய சமய இயலின் அடிப்படை என்பதையும் அவர் தம் உரையில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. வேதம் கூறும் அகிலமே ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்ற கோட்பாட்டை, நடைமுறை வாழ்வியல் ஒழுக்கமாக மாற்றியதே சிகாகோ உரையின் மையக் கருத்தாகும்.

சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரர். அவரது குரு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். குருவுக்குத் தம் சீடன் மீது அபரிமிதமான அன்பும், கருணையும் இருந்தது. மேலும், நரேந்திரரின் எதிர்காலப் பணி குறித்த தெளிவான திட்டமும் அவரிடம் காணப்பட்டது.

"நீ மற்ற ஆன்மிகவாதிகள்போல சுயநலமாக, தனிமனித விடுதலைக்காக பிறந்தவன் அல்ல. நீ பெரிய ஆலமரம். லட்சக்கணக்கான மக்களுக்கு நிழல் கொடுக்க வந்தவன்' என்று நரேந்திரரிடம் பரமஹம்சர் கூறினார்.

பலவிதமான பயிற்சிகளைப் பரிபூரணமாக கொடுத்த பிறகு, தான் சாதனைகளால் சேமித்து வைத்திருந்த ஆன்மிக சக்தி அனைத்தையும் நரேந்திரருக்கு அளித்தார் ஸ்ரீ ராம

கிருஷ்ண பரமஹம்சர்.

"தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு.'

என்பார் வள்ளுவர். "தான் வருந்தி உழைத்தீட்டிய செல்வம் அனைத்தும், தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்' என்பது இக்குறள் கூறும் கருத்து. இதற்குச் சான்றாக நின்றார் சுவாமி விவேகானந்தர் என்பது கூறப்படாமலே புரிய வேண்டிய செய்தி. கடவுளை தியானம் செய்வதைவிட, மனிதர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தியவரும் செலுத்தவும் சொன்ன மகான் அவர்.

சுமார் நான்காண்டு காலம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இந்தியாவின் ஆன்மிக அறிவுப் பெட்டகத்தை உலகுக்கான ஞானமாக வழங்கினார். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு மக்களின் வறுமையைப் போக்குவதற்கும், அறியாமையை நீக்குவதற்கும் திட்டங்கள் பல வகுத்தார்.

இவருடைய ஆன்மிக சேவைக்காக மேலைநாட்டவர்கள் அளித்த பொருளுதவியை இந்தியர்களுக்கு சேவைகளின் வழியாக வழங்கினார். மேலும், இந்தியாவின் உயரிய பண்பாடு, கலாசாரத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்று, நமது நாட்டின் பெருமையை உலகறியச் செய்ததில் பெரும்பங்கு சுவாமி விவேகானந்தருக்கு உண்டு.

சுவாமி விவேகானந்தர், "இந்தியாவின் தனிச்சிறப்பு முழு முதலான ஆன்மிகம். இந்தியர்கள் எதைச் செய்தாலும் ஆன்மிகமாகத்தான் செய்வார்கள். இந்தியர் வீட்டுக் குழந்தைகள் விளையாடுகிற விளையாட்டில்கூட ஆன்மிகம் இருக்கிறது.

ஆன்மிகம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஹிமாலயத்தில் உள்ள கங்கோத்ரியில் தொடங்கி, சுமார் 3,000 கி.மீ. கடந்து, வங்கக் கடலில் கலக்கும் கங்கையினுடைய பாதையை நாம் எப்படி மாற்ற முடியாதோ, அதைப்போல நம் நாட்டின் மையக் கருத்தையும் மாற்ற முடியாது. இந்தியா ஞான பூமி மட்டுமல்ல, புண்ணிய பூமி' என்று கூறினார்.

உலக சகோதரத்துவம் என்பது வெறும் ஒரு கோட்பாடு அல்ல. அது நமது குடும்பத்தில் தொடங்கி, கல்வி நிறுவனங்களில் வளர்ந்து, சமூகத்தில் விரிந்து, நாடுகளுக்கிடையே நல்லுறவாக மலர வேண்டிய ஒரு வாழ்வியல் நெறியாகும்.

"உலகம் முழுவதும் ஒரே குடும்பம்; மனிதகுலம் முழுவதும் சகோதரத்துவம்' என்பதே செப்டம்பர் 11 நமக்கு நினைவூட்டும் உயர்ந்த செய்தியாகும். "மதம், மொழி, இனம், நாடு போன்ற வேறுபாடுகளைத் தாண்டி, நாம் அனைவரும் ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள்' என்ற உணர்வு உருவாக வேண்டும் என்பதே சுவாமி விவேகானந்தரின் கனவு. சிகாகோவில் ஒலித்த அந்த சகோதரத்துவக் குரல் 1893-ஆம் ஆண்டில் மட்டுமே ஒலித்ததாக இருக்கக் கூடாது. அது ஒவ்வொரு தலைமுறையின் உள்ளத்திலும் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்.

மேலும் வெறுப்புக்குப் பதிலாக அன்பும், பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமையும், வன்முறைக்குப் பதிலாக அமைதியும் நிலவும் உலகை உருவாக்குவதே சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரைக்கு நாம் அளிக்கும் உண்மையான மரியாதையாகும்.

நாளை (செப்டம்பர் 11)

உலக சகோதரத்துவ தினம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments