FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐந்தொழிலைத் தழுவிய தேசிய இனம்!

கைவினைத் திறன், உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னதமான இந்த விழா, செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

19 செப்டம்பர் 2026, 6:22 am IST
பகிர்:

அண்மைக் காலங்களில் நம் நாட்டில் கொண்டாடப்படுகிற பெரும் விழாக்களில் ஒன்றாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது விசுவகர்மா ஜெயந்தியாகும். கைவினைத் திறன், உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னதமான இந்த விழா, செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தாம் செய்கிற தொழிலுக்கும், அந்தத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கருவிகளுக்கு வழிகாட்டிய விசுவகர்மக் கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைகிறது.

விசுவகர்மர் என்போர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தனித்தன்மை பெற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக, "விசுவகர்மா' என்றவுடனேயே அவரைத் தேவலோகச் சிற்பி என்றுதான் வரலாற்று நூல்கள் அடையாளம் காட்டுகின்றன. ஆனால், விசுவகர்மாவைச் சுயம்புவாகத் தோன்றியவர் என்றே வேத மந்திரங்கள் குறிப்பிடுகின்றன.

விசுவகர்மாவை "விசுவம் + கர்மா' என்று பிரித்துப் பொருள் கண்டால், "விசுவம்' - உலகம் என்றும், "கர்மா' (கர்மன்) என்றால் சிருஷ்டிப்பவன் அல்லது படைப்பவன் என்றும் பொருள்படும். எனவே, விசுவகர்மர் என்பவர் உலகில் உள்ள அனைத்தையும் படைப்பவர் என்றே நம் முன்னோர் குறிப்பிடுகின்றனர். பாரத நாட்டின் தொன்மை வாய்ந்த கலாசார மரபுகளில், இன்றளவும் வரலாற்றுப் பழைமையும் சிறப்பும் பெற்று விளங்குவது விசுவகர்ம மரபாகும். நம் நாட்டில் ஆழமாக வேரூன்றிய உச்ச நாகரிகக் கலாசாரப் பண்பாட்டுக்கு இந்த மரபின் பங்களிப்பு மிக மிக இன்றியமையாததாகும்.

Advertisement

Advertisement

சுமார் 1938-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா உழன்று கொண்டிருந்தபோது, இந்நாட்டின் கலை மரபுகள் பல வலுக்கட்டாயமாக ஒடுக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரத்தைச் சேர்ந்த விசுவகர்மர்களின் துணையுடன், ம. தெய்வசிகாமணி ஆச்சாரியர் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, நலிவுற்றும் ஒடுக்கப்பட்டும் இருந்த விசுவகர்ம சமூகம் அதிலிருந்து மீண்டெழுந்ததை வரலாற்று ஆய்வேடுகள் குறிப்பிடுகின்றன.

பழங்காலத்திலிருந்தே சாஸ்திர ஞானம், வானவியல், ஜோதிடம், மொழிப்புலமை, கலைமரபின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பெற்றவர்களாக விசுவகர்மர்கள் விளங்கினர். இவர்களுக்கென்று தொன்றுதொட்டு இயங்கிவரும் மடாலயங்கள், இன்றும் இம்மரபின் மாண்புகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றன.

"விசுவகர்மன் இன்றி எந்தவொரு நிகழ்வுமில்லை' என்று வரலாறு குறிப்பிடுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், நம் நாட்டை ஆட்சி செய்த பேரரசுகளைப் பற்றியும், அவர்களின் கலைச் சிறப்புகளையும் வரலாற்று ஆவணங்களாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு விசுவகர்ம சிற்பிகளையே சேரும். பண்டைய பாரத மண்ணின் வாழ்வியல், சமூகவியல் மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை ஒவ்வொரு தலைமுறையினரும் அறிந்துகொள்வதற்கு இவர்களுடைய கலைப் படைப்புகளே இன்றளவும் பெரும் வழிகாட்டியாக அமைந்துள்ளன.

விசுவகர்மனின் உருவ அமைப்பை ஆராய்ந்து பார்த்தால், அது அளப்பரிய வியப்பைத் தருகிறது. சாஸ்திரங்களிலும் இலக்கியங்களிலும் விசுவகர்மனைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாக இருப்பினும், அவரது உருவ அமைப்பைக் கிருஷ்ண யஜுர் வேத மந்திர முழக்கங்களில் ஒன்று "பஞ்சவக்த்ரம் ஜடாபாரம் தச பஞ்ச விலோசனம்...' என்ற சுலோகத்தின் வாயிலாக மிக எழிலுற வர்ணிக்கிறது. பழம்பெரும் வேத நூல்கள் வர்ணிக்கும் இந்த உருவ அமைப்பே, இன்றளவும் வழிபாட்டு மரபில் தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

விசுவகர்மர்கள் உலகில் உள்ள அனைத்து வகையான படைப்புகளையும், கீழ்க்காணும் ஐந்து மூலப் பொருள்களிலிருந்தே எதையும் உருவாக்கவல்ல பேராற்றலைப் பெற்றவர்களாவர்.

மனு- இரும்பைக் கொண்டு படைக்கின்ற திறனைக் கொண்டோர்; மயன்- மரத்தைக் கொண்டு படைப்போர்; சிற்பி- கருங்கல்லைக் கொண்டு வடிவமைப்போர்; துவஷ்டா- உலோகத்தைக் கொண்டு அமைப்போர்; விஸ்வக்ஞன்- தங்கத்தால் ஆபரணங்களை வடிவமைப்போர்.

மேற்குறிப்பிட்ட ஐந்து வகையான படைப்புத் தொழில்களைக் கையாளுகிற காரணத்தால், இவர்கள் புரிகிற தொழிலையே அடிப்படைக் காரணப் பெயராகக் கொண்டு "விசுவகர்மர்' என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் ஐந்தொழிலின் மூலக் கர்த்தாவாக விளங்குகின்ற விராட் விசுவகர்மனையே வணங்கியும் போற்றியும் வருகின்றனர்.

மேலும், "மாந்தைப்பள்ளு' எனும் அரிய தமிழ்நூல் ஒன்றில், "சீர்மேவும் புவனவெல்லாம் அந்தினம் பரவும் விசுவோர், ஏர்மேவும் ஐந்துமுகத்திற் பிறந்த கம்மியராள்' என்று விசுவகர்மனின் ஐந்து முகத்திலிருந்து தோன்றிய ஐவரைக் "கம்மியராள்' என்று அச்செய்யுள் குறிப்பிடுகிறது. கம்மியராளே நாளடைவில் கம்மாளர், கம்மர் என்றெல்லாம் மருவியிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலை, "மகதவினைஞரும் மராட்டக் கம்பரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞரும்...' என்று நம் நாட்டின் சிற்பக் கலைஞர்களைக் குறிப்பிடுகிறது.

மற்றொரு காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில்,"மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும் பொன்செய் கொல்லரும்...' என்று பலவாறாகப் போற்றிக் குறிப்பிடுகிறது.

மேற்கண்ட காப்பியங்கள் மட்டுமன்றி, பிங்கலம், சூடாமணி போன்ற நிகண்டுகளும் இவர்கள் ஆற்றிவருகின்ற ஐந்தொழிலின் அடிப்படையில் இவர்களைக் கம்மியர், கம்மர், கொல்லர், தச்சர், கைவினைஞர், மரவினைஞர், கற்கவி என்றெல்லாம் பலவாறாகச் சிறப்பித்துக் கூறுகின்றன.

பழங்காலத்தில் விஸ்வகர்ம சிற்பிகளை "பெருந்தச்சன்' என்று குறிப்பிடுவது மரபாகும். இது வெறும் மர வேலை, உலோக வேலை அல்லது கல் வேலை செய்கிற சிற்பிகளைக் குறிப்பதற்காக மட்டும் அன்று; மாறாக, கண்ணுக்குத் தெரியாத இறை ஆற்றலை, சிற்ப இலக்கணத்தின் அடிப்படையில் கண்ணுக்குப் புலப்படும், பலவிதமான அளவுகளுடன் கூடிய, ஸ்தூல வடிவத்தில் நிலைநிறுத்துபவர்கள் என்பதனாலேயே இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று வை. கணபதி ஸ்தபதி குறிப்பிடுவதுண்டு.

தஞ்சைப் பெரிய கோயிலை வடிவமைத்த தலைமைச் சிற்பியை "வீர சோழக் குஞ்சரமல்ல இராசராசப் பெருந்தச்சன்' எனக் குறிப்பிடுவதும் இந்த அடிப்படையில்தான். இன்றும் கேரளத்தில் பெரும்பாலான விசுவகர்மர்களைத் "தச்சன்' என்று சிறப்பித்து அழைப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வடஇந்தியாவில் இவ்வைந்து வகையான படைப்புத் தொழில்களையும் புரியும் விசுவகர்மர்களைப் "பாஞ்சால்', "சிற்பகார்' என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய பழம்பெரும் பின்னணியைக் கொண்ட விசுவகர்மர்கள், சிறிய ஆணி முதல் பிரம்மாண்டமான படைப்புகள் வரை அனைத்தையும் உருவாக்கியவர்களாவர். அதாவது, வீடுகளில் பயன்படுத்தும் சிறு பாத்திரங்கள் முதற்கொண்டு தொழிற்கருவிகளைச் செய்வது, சாதாரணக் குடியிருப்புகள் முதல் நாடு மற்றும் நகரங்களை நிர்மாணிப்பது, கோட்டைக் கொத்தளங்கள் முதல் போர்த் தளவாடங்களை உருவாக்குவது, நீர்நிலைகள் முதல் அனைத்து விதமான வாகனங்களை அமைப்பது என இப்பட்டியல் நீள்கிறது. மேலும், இந்தப் படைப்புப் பணியை வாழையடி வாழையாக அவர்கள் தங்கள் கடமையாகவும் உரிமையாகவும் செய்து வருகின்றனர். நாடெங்கிலும் இவர்களின் படைப்புகளில் விந்தைமிகு அழியாக் கலைச் சின்னங்கள் பலவற்றைக் காண முடிகிறது. பிரம்மாண்டமான கோயில்கள், நெடிதுயர்ந்த கூடகோபுரங்கள், பிரமிக்கத்தக்க மாட மாளிகைகள், கவின்மிகு தோரண வளைவுகள் போன்றவற்றை வடிவமைத்துக் காலத்தையும் விஞ்சிடும் வகையில் நிலைநிறுத்திக் காட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக, அஜந்தா, எல்லோரா மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க காசி விசுவநாதர் கோயில் போன்ற பிரமிக்கத்தக்க கலைப் படைப்புகள். அக்ஷர்தாம் போன்ற கலைநயம் மிளிரும் கோயில் அமைப்புகள்; பிரம்மாண்டமான புரி ஜெகந்நாதர் கோயில் போன்ற கலைவடிவங்கள்; விண்ணை முட்டும் தஞ்சைப் பெரிய கோயில், ஹம்பியில் அமைந்துள்ள விரூபாக்ஷர் கோயில், லேபாக்ஷியில் அமைந்துள்ள வீரபத்திரர் கோயில் போன்ற சிறப்புமிக்க கலைப் படைப்புகள்.

காலத்தைக் கடந்து நிற்கும் இதுபோன்ற கலைச்சின்னங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தைப் பழங்காலத்திலேயே நடைமுறைப்படுத்தியவர்கள் விசுவகர்மர்களே என்றால் அது மிகையாகாது. தொன்மைக்காலம் தொட்டு இவர்கள் பின்பற்றி வருகிற தொழில் நெறிமுறைகளும், கையாண்ட நுட்பங்களும் இன்றுவரை வியப்பைத் தாண்டிய ஒரு புதிராகவே இருந்து வருகின்றன.

இன்று நம்மிடையே காணப்படும் எண்ணற்ற கலைக் களஞ்சியங்களும் வடிவமைப்புகளும் பிராந்திய வாரியாக வெவ்வேறு அழகியலைப் பின்பற்றியிருந்தாலும், அவற்றின் நெறிமுறை, தொழில்நுட்பம், செய்முறை யாவும் ஒரே மூல இலக்கணக் கோட்பாட்டின் கீழ் அமைக்கப்பட்டிருப்பது விசுவகர்மர்களின் தனித்தன்மையை உணர்த்துகிறது.

வாழும் இத்தொன்மையான கலை மரபினரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக வை. கணபதி ஸ்தபதி தமது

"இந்திய நாட்டு விஞ்ஞான கலாசாரத்தில் விசுவகர்மர்' என்னும் நூலில், "விசுவகர்மர் என்போர் அகில பாரதத்தையும் தழுவிய ஒரு தேசிய இனம்' என்று மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுரையாளர்:

சிற்பக் கலை ஆராய்ச்சியாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments