மரபும் மாற்றமும்...
ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் சமத்துவப் பார்வை மட்டுமே திருமணத் தகராறுகளுக்கும் விவாகரத்துக்கும் நீடித்த தீர்வை தரும் என்பதைப் பற்றி...
உலகம் தோன்றிய காலம் தொட்டு ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ்தல் நடந்து கொண்டிருக்கிறது. நடந்தாக வேண்டிய கட்டாயமும் இருக்கிறது; ஏனெனில், இருவரின் சங்கமமே உலக இயக்கத்தின் அடிப்படை.
ஆண்- பெண் உறவில் சிக்கல்கள் எப்போது தோன்றின?, ஏன் தோன்றுகிறது என்ற வினாக்கள் இன்றைய தலைமுறைக்கான சவால். பாரத தேசத்தைப் பொருத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதற்கான பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக இந்த முறையைப் பின்பற்றி வருகிறோம்.
சில தசாப்தங்களுக்கு முன்பு வரை இதில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாதவர்கள் இருபக்கமும் இருந்தார்கள். அதில் ஆண்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள் என்பதும் உண்மை. ஆண்கள் இல்லாத குடும்பங்களில் பெண்கள், ஆணின் பொறுப்பையும் சேர்த்தே நிறைவேற்றும் வலிமை உடையவர்களாக இருந்தார்கள். ஆண்கள் தாயுமானவர்களாக வாழ்ந்த குடும்பங்களும் உண்டு. ஆனால், இவையெல்லாம் விதிவிலக்குகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன.
Advertisement
Advertisement
பொதுவில் சமூகத்தில் ஆண்களும் பெண்களும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டு குடும்பத்தையும் சமூகத்தையும் காப்பாற்றி வந்தனர். தற்போது நாட்டில் குடும்ப நல நீதிமன்றங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விவாகரத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிவேகமாக அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பெண்கள் தற்போது திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்கிறார்கள். ஏன் இத்தகைய மாற்றம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது? ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் புரிதலின்மை அதிகரிக்கிறதா? பெண்களும் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்திருப்பதால்தான் இருவருக்கும் இடையில் குடும்பத்தில் பிணக்குகள் கூடியிருக்கின்றன என வாதங்களை முன்வைக்கிறார்கள்; இதை ஏற்பதற்கில்லை.
கல்வி பன்னெடுங்காலமாகப் பெண்களுக்கு நன்முறையில் கிடைத்து வந்தது என்பதை ஆய்வுபூர்வமாகத் தரவுகளுடன் மகாத்மா காந்தியின் சீடர் தரம்பால் தன்னுடைய 'அழகிய மரம்' நூலில் பதிவு செய்திருக்கிறார். சில தசாப்தங்கள் பெண்களுக்குக் கல்விக்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், அது மட்டுமே இன்றைய சிக்கலுக்குக் காரணமாக முடியாது. பெண்கள் உழைக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள், அதனால் திருமணத்தைத் தவிர்க்கிறார்கள், விவாகரத்தை நாடுகிறார்கள் என்ற பொத்தாம் பொதுவான கருத்தும் ஏற்புடையதல்ல.
பின் எங்கே தோன்றுகின்றன குடும்பப் பிணக்குகள்? அதற்கான தீர்வு யாது? அண்மையில் தமிழகத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் குடும்ப நல நீதிமன்றத்திலிருந்து மேல்முறையீட்டுக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி. சுமதி இருவரும் புதுமையான கருத்தைப் பதிவு செய்துள்ளனர். இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால், இல்லத்தரசர்களும் இருக்க முடியும். இதுவும் புதிய இயல்பான சமூக நடைமுறையாக மாறட்டும். இது, திருமணம் மற்றும் குடும்பம் என்ற சமூக அமைப்பைப் பாதுகாக்க உதவும் என்பது அந்தக் கருத்து. நவீன மேற்கத்திய சமூகங்களைப் போலன்றி, பாரதிய கலாசாரத்தில், குடும்பமே சமூகத்தின் அடிப்படை அலகாகக் கருதப்படுகிறது. பாரம்பரியமாக, குடும்பத்துக்கு தேவையான பொருளாதார வளங்களை ஈட்டும் பொறுப்பு கணவரிடம் இருந்தது.
குடும்பம் மற்றும் வீட்டு நிர்வாக பொறுப்புகளை, மனைவி கவனித்து வந்தார். இவ்விரு பொறுப்புகளும் சமமான மரியாதைக்கு உரியவை என்று நமது பண்பாட்டில் குடும்ப அமைப்புக்கு உள்ள இடத்தைத் தெளிவுபடுத்தியுள்ளனர். அரை நுôற்றாண்டு காலமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பெண்களும் தொழில் மற்றும் பணி சார்ந்த வாழ்க்கையை நோக்கி நகர்கின்றனர். இம்மாற்றம் பல திருமண உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதைக் கவனிக்கிறோம். பெண்கள், பணி சார்ந்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதுவதால் திருமணத்தை முற்றிலும் தவிர்க்கும் நிலையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்த நிலையில், குடும்பம் என்னும் அமைப்பு காக்கப்பட வேண்டுமானால் கணவர்கள் வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஒருவேளை ஏற்றுக்கொண்டால் இந்தச் சூழலை சரி செய்ய முடியும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்து இன்றைய நிலையில் ஏற்புடையதா?, தீர்வைத் தருமா?. இல்லத்தின் தலைவர் என்ற பொருளில் இல்லக்கிழத்தி என்னும் சொல் தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இல்லத்தரசி என்னும் சொல்லைத் தற்போது பயன்படுத்துகிறோம்.
தொன்றுதொட்டு வந்த மரபின் அடிப்படையில் இந்தச் சொல் பயன்பாட்டில் உள்ளது. தற்போது பெண்கள் கல்வி மற்றும் பணியிடங்களில் தாங்களும் முன்னணியில் இருக்க விரும்புகிறார்கள். இந்த நிலை ஏற்புடையதும் வரவேற்க வேண்டியதும் ஆகும். எனில், குடும்பம் எப்படி நடக்கும்?, யார் வீட்டுப் பொறுப்புகளை ஏற்பது என்ற வினாவுக்கே மேற்சொன்ன புதுமைக் கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில், பெண்கள் வெளியில் வர விரும்புவது என்ற புரிதலில் சற்று போதாமை இருக்கிறது. குடும்பம் என்பது ஆணும் பெண்ணும் கூடி இருந்து ஒருவரை ஒருவர் வளர்த்துக் கொள்வதுடன் மானுட சமூகத்துக்கும் பங்களிப்பைச் செய்வதற்கான அமைப்பு. அதில் ஒருவர் பயனாளியாகவும், மற்றொருவர் பாதிக்கப்பட்டவராகவும் இருக்க முடியாது.
குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை குறையும் போதே சிக்கல் எழுகிறது. இரு சாராருக்கும் பாதுகாப்பையும், நிறைவையும் ஏற்படுத்தும் அமைப்பில் இருவரும் சமமான பங்களிப்பைத் தருகிறார்கள். இந்தப் புரிதல் இருந்து விட்டால் இல்லத்தரசி என்ற சொல் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
இல்லத்தரசிகளின் பணிக்கும் பெரும் பொருளாதார மதிப்பு இருக்கிறது என்பதை ஆண்கள் புரிந்து கொண்டு நடந்தால் பிரச்னைகள் தீர்ந்துவிடும். பணிக்குச் செல்வதை விரும்பும் பெண்கள் நிலைப்பாட்டுக்கு வருவோம். பணியிடத்தில் தங்கள் நிலையை உயர்த்த விரும்புவதாலேயே குடும்ப அமைப்புக்குள் வராமல் இருக்கிறோம் என்பது சரியல்ல. இன்று மாணவர்கள் என்ற நிலையில் ஆண்களும் பெண்களும் குடும்பத்தில்
சமமாகப் பார்க்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் விரும்பிய கல்வியைப் பெறும் நிலை உருவாகியுள்ளது. கல்வி மறுக்கப்பட்ட நிலையிலிருந்து மீள நாம் குடும்ப அமைப்பைத் துறந்து வெளியேறவில்லை. குடும்பத்தில் இருந்தே கல்வி சமத்துவத்தைப் பெற்றுள்ளோம். பணியில் முன்னேற்றம் என்பதற்கு மட்டும் குடும்பம் தடை என்று ஏன் கருத வேண்டும்? தடையாய் இருப்பது குடும்ப அமைப்பு அல்ல, நம்முடைய மனப்பான்மை. பொறுப்புகளை ஏற்பதிலும் கையாள்வதிலும் இருக்கும் போதாமை. ஆண்கள், குடும்பத்தில் மட்டுமல்ல, வீட்டு வேலைகளிலும் தங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டால் சிக்கல் பாதி தீர்ந்ததாகும்.
இந்தச் சிந்தனை வளர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இல்லத்தரசிகள் போல இல்லத்தரசர்கள் என்ற கருத்து இன்றைக்கு ஆண்களுக்கும் குடும்பம் என்ற அமைப்பின் மீது அச்சத்தை ஏற்படுத்துமே அன்றி தீர்வைத் தராது. பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கே இன்னும் பழகாத தலைமுறையை பொறுப்புகளை மாற்றிக்கொள்ள எப்படி அறிவுறுத்த முடியும்? மேற்கத்திய பழக்கங்கள் தனி நபரை மையமாகக் கொண்டவை.
அந்தப் பழக்கங்கள் நமக்கு ஒத்துவராது. அதனால், அடுத்த தலைமுறை தன் பாதுகாப்பை இழக்கும். பெண்களின் முன்னேற்றத்துக்கும் சமத்துவத்துக்கும் மேலை நாட்டு சித்தாந்தங்கள், அவற்றைப் போதிக்கும் நூல்கள் அவசியமில்லை. பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் வழக்கம் இல்லை, தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.
பாரதியை இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் போதுமானது. குடும்ப அமைப்பு நிலைபெறச் செய்ய வேண்டியதெல்லாம் பொறுப்புகளைப் பகிர்தல், மதித்து நடத்தல் அவ்வளவுதான். பாரதியின், 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்' என்ற வரிகளை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்கலாம்.
திருமணத்தில் சிக்கலை எதிர்கொள்ளும் இருவருக்கும் பெற்றோர் இந்த வரிகளை நினைவுபடுத்தலாம். வருமானம் மட்டுமே பெண்களை சுகமாக வாழ வைத்து விடும் என்று கருதுவது பெண்களுக்கு நல்லதல்ல. வளமான வாழ்க்கை என்பதைத் தாண்டி ஆத்ம உறவு ஒவ்வோர் உயிருக்கும் அவசியம் என்றே இயற்கை வடிவமைத்திருக்கிறது.
அதற்கான தேடல் வரும்போது காலம் கடந்து போய்விட்டால் வாழ்க்கையும் பெற்ற வெற்றிகளும் கூட அர்த்தமற்றதாகத் தோன்றலாம். பெண்கள், 'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று கல்வியைக் கொண்டு நிறுவி ஆகிவிட்டது. அடுத்து, நமது விருப்பம் பணியிடத்தில், தொழில் முறையில் சிகரம் தொடுவது எனில், அதற்கான வழிமுறைகளைப் பொறுமையுடன் ஆராய வேண்டும். இது அல்லது அது என்பதல்ல தலைமைத்துவம். இருப்பதைக் காத்துக்கொண்டு விரும்பியதை அடைவதற்கான வழிகளைக் காண்பதே அறிவுசார் தலைமைத்துவம்.
கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.