முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

எம்எல்ஏக்கள் விலகலும் உருவாகியுள்ள அசாதாரண சட்டச் சூழலும்!

தமிழ்நாடு சட்டப்பேரவைஉறுப்பினர்கள் பதவி விலகி வேறு கட்சியில் இணைவதால் உருவாகியுள்ள அசாதாரண சட்டச் சூழல் பற்றி...

Updated On : 27 ஜூன் 2026, 3:39 pm IST
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரைச் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கிய சி. விஜயபாஸ்கர் - X
பகிர்:

தமிழ்நாட்டின் சமீப சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒரு நான்கு உறுப்பினர்களின் சாதாரண “பதவி விலகல்” நிகழ்வாக மட்டுமல்லாது, இந்திய அரசியல் சட்டத்தின் இரண்டு முக்கியக் கூறுகள் - ஒருபுறம், அரசியல் சட்டப் பிரிவு 190(3)(b) மறுபுறம் பத்தாவது அட்டவணை (Tenth Schedule)- நேருக்கு நேர்மோதும் நிலையை உருவாகியுள்ளது.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னிச்சையாக, உண்மையாகவே (Voluntarily and genuinely) தமது உறுப்பினர் பதவியிலிருந்து விலகினால், அவ்விலகலை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்க வேண்டிய கடமை பற்றி அரசியல் சட்டப் பிரிவு 190(3)(b)ன் கீழ், பேசப்படுகிறது. பத்தாவது அட்டவணை (Tenth Schedule)யானது, உறுப்பினர் ஒருவர், கட்சிக் கொறடா உத்தரவை மீறி அவையில் வாக்களித்தால் அல்லது வேறு வகையில் கட்சியைத் துறந்ததற்குச் சமமான நடத்தையில் ஈடுபட்டால், அந்த உறுப்பினர் தகுதி நீக்கத்திற்குட்பட்டு விடுவார் என்கிறது. இவ்விரு சட்டக் கோட்பாடுகளும் தனித்தனியாக தெளிவாகத்தான் உள்ளன. இருப்பினும், அவை ஒரே சம்பவத்தில் ஒன்றுக்கொன்று மோதும்போது மிக நெருக்கடியான அரசியல் சட்டச் சிக்கலை உருவாக்குகிறது என்பது நிதர்சனம்.

தமிழ்நாட்டில் தற்போது நடந்துள்ள இந்த விவகாரத்தின் மையத்தில் உள்ளவர்கள், 2026 தேர்தலில் அஇஅதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் மே 13-இல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அக்கட்சிக் கொறடா உத்தரவுக்கு முரணாக த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த 25 சட்டமன்ற உறுப்பினர்களில் நால்வர். மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா ஆகியோர் 25 மே, 2026 மதிய நேரத்தில் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து தமது பதவி விலகல் கடிதங்களை அளித்தனர்; மின்னல் வேகத்தில் ஆளும் தவெகவில் இணைந்தனர். அடுத்த நாள் (மே 26, 2026) இதேபோல, இசக்கி. சுப்பையா பதவி விலகினார்; அவரும் உடனேயே ஆளுங்கட்சியில் இணைந்தார். இந்த நால்வரின் விலகல்கள் உடனடியாக ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவரும் மின்னல் வேகத்தில் அறிவித்ததே முதல் கட்ட அரசியல் அதிர்வு.

Advertisement

Advertisement

இந்நிகழ்வுகளுக்குப்பின் விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல் கடிதம் அளித்து அதுவும் உடனே பேரவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவரும் முதலில் கொறடா உத்தரவை மீறியவர்தான். ஆனால், இவருள்பட 21 பேர் மீது அஇஅதிமுகவால் அளிக்கப்பட்ட தகுதிநீக்க மனு விலக்கிக்கொள்ளப்பட்டதால், இவருடைய நிலை முன்குறிப்பிட்ட நால்வர் நிலையிலிருந்து வேறுபட்டதாகும்.

இந்த விஷயத்தில் உண்மையான சட்டச் சிக்கல் 2026 மே 13-ம் நாளிலேயே தொடங்கி விட்டது. ஆம், 13 மே, 2026 இல் சட்டப்பேரவையில் நடைபெற்ற தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அஇஅதிமுக கொறடா உத்தரவை மீறி அக்கட்சியின் 25 உறுப்பினர்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அஇஅதிமுக தலைமை அந்த 25 உறுப்பினர்களை பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் மே 14, 2026 - இல் மனு அளித்தது. அம்மனு சட்டப்பேரவைத் தலைவர் பரிசீலனையில் நிலுவையில் இருந்தது. சட்டரீதியாகப் பார்த்தால் இந்த மனு அளிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது ‘கட்சித் தாவல் குற்றச்சாட்டு’ அப்பி ஒட்டிக்கொண்டதாகக் கருதப்பட வேண்டும். பின்னர் (25 & 26 மே) அளிக்கப்பட்ட நான்கு (3+1) உறுப்பினர்களது பதவி விலகல் கடிதங்கள், அவர்கள் மீது முன்னதாகவே ஏற்பட்டுவிட்ட ‘கட்சித் தாவல் நடத்தையை’ (defection) அழித்துவிடுமா என்பது முக்கிய சட்டக் கேள்வியாக முன்நிற்கிறது.

அரசியல் சட்டப் பிரிவு 190(3)(b) என்ன சொல்கிறது என்பதை முன்னரே சுருக்கமாகக் கண்டோம். அச்சட்டப்பிரிவின்படி, ஒரு மாநில சட்டமன்ற உறுப்பினர் எழுதித் தன் கையொப்பத்துடன், பதவி விலகல் செய்வதாக பேரவைத் தலைவருக்கு கடிதம் அளித்தால், அதைப் பேரவைத் தலைவர் ஏற்றால், அவர் இடம் (தொகுதி) காலியாகும். ஆனால் அதற்குப் பின்புறம் ஒரு முக்கியமான பாதுகாப்புச் சுவர் உள்ளது. அது என்னவென்றால்: “அந்த பதவி விலகல் தன்னிச்சையானதல்ல அல்லது உண்மையானதல்ல” என்று பேரவைத் தலைவர், தக்க விசாரணைக்குப் பிறகு திருப்தியடைந்தால் அவர் அதனை ஏற்கக் கூடாது எனும் நிபந்தனையாகும்.

இந்த நிபந்தனையின் உட்பொருள்: பேரவைத் தலைவரின் பணி வெறும் ‘கையொப்பம் பார்த்து ஏற்பு முத்திரை இடுவது’ மட்டுமல்ல; குறைந்தபட்சம் அவர் தனது சுயாதீனமான, மனப்பூர்வ திருப்தியை உருவாக்கும் வகையில் விசாரிக்க வேண்டியது அவசியம். அந்த விசாரணையின் அளவு எவ்வளவு ஆழ்ந்ததாக இருக்க வேண்டும் என்ற கேள்விக்குச் சட்டம் முழுமையாகச் சரியான அளவுகோல் எதனையும் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் நீதிமன்றங்கள் பலமுறை கூறியிருப்பது, விசாரணை ‘பொருள் கொண்டதா’ (whether meaningful) என்பதும், பின்னர் அது நீதித் தணிக்கைக்கு (judicial review)  உட்பட உரியது என்பதுமாகும்.

அதாவது, உறுப்பினர் உண்மையில் சுதந்திரமாக முடிவு செய்தாரா? வெளிப்புற அழுத்தம் ஏதும் இருந்ததா? ஏதாவது (குதிரை) பேரம், அரசியல் பதவி உறுதி அல்லது அச்சுறுத்தல் இருந்ததா? இவரது பதவி விலகலுக்கும், உடனடியாக மற்றொரு கட்சியில் சேர்வதற்குமான கால இடைவெளி என்ன? — போன்ற சூழ்நிலை அம்சங்கள் நீதிமன்றங்களால் கவனிக்கப்படப் பொருத்தமற்றவை என்று எளிதாகக் கூறிவிட முடியாது.

‘கொறடா உத்தரவு மீறல்’ (defying the party whip) எப்படி தகுதி நீக்கமாக மாறுகிறது?

பத்தாவது அட்டவணை, உறுப்பினர் தனது அரசியல் கட்சியின் உறுப்புரிமையை “தன்னிச்சையாக விட்டுவிட்டார்” என்று அவரது நடத்தையிலிருந்தே காண முடியும் என்கிறது. அதாவது கட்சியின் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தாலோ, வாக்களிக்காமல் புறக்கணித்தாலோ, விலகினாலோ தகுதி நீக்கம் வரும் என்கிறது. நடத்தையே போதுமானது என்பதைக் கவனிக்க வேண்டும். கட்சியின் நிலைப்பாடு நேர்மாறாக இருக்கும்போது, கொறடா உத்தரவை மீறி ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தல், கட்சித் தாவல் சட்டத்தின் அடிப்படைச் சந்தேகத்தை எழுப்பும் செயல் என்பது நீண்ட காலமாகத் தீர்ப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரவி எஸ். நாயக் எதிர் இந்திய யூனியன் (Ravi S. Naik v. Union of India,1994), வழக்கில் உறுப்பினர் தானாகவே விலகல் (“voluntarily giving up membership”) என்பது கட்டாயமாக எழுத்துப் பூர்வமான பதவி விலகல் கடிதம் மூலம் மட்டுமே நிரூபிக்கப்பட வேண்டியதில்லை; உறுப்பினரின் நடத்தையிலிருந்தே அதைக் கண்டறியலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. பின்னர், ராஜேந்திரசிங் ரானா வழக்கில் (Rajendra Singh Rana v. Swami Prasad Maurya, 2007) தகுதி நீக்கம் நிகழ்வது, அந்தத் தாவல் நடந்த தருணத்திலேயே நிகழ்வதாகும் என்று வலியுறுத்தப்பட்ட கோட்பாட்டுக்கும் நீதிமன்ற உத்தரவுகள் வலிமை சேர்த்துள்ளன. எனவே, 2026, மே 13 - இல் நடந்த கொறடா உத்தரவு மீறல், மே 25, 26 நாட்களில் நிகழ்ந்த  பதவி விலகல்களுக்கு முன்னரே சட்டரீதியான பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது என்ற வாதம் முன்குறிப்பிட்ட தீர்ப்புகள் மூலம் வலுவான அடித்தளம் பெற்றிருக்கிறது.

கிஹோட்டோ ஹோலோஹான் எதிர் ஜாச்சில்ஹு (Kihoto Hollohan v. Zachillhu 1992) வழக்கில், தகுதி நீக்க விவகாரங்களில் பேரவைத் தலைவரது தீர்மானிக்கும் அதிகாரம் செல்லும் என்றாலும், அவரது முடிவுகள் முழுமையாக நீதித் தணிக்கைக்கு அப்பாற்பட்டவை அல்ல என்று உச்சநீதிமன்றம் உறுதிபடக் கூறியது. இந்தக் கோட்பாட்டின்படி, தமிழ்நாட்டில் நடந்துள்ள பேரவைத் தலைவர் நடவடிக்கையும் உயர்நீதிமன்றத்தால் நிச்சயமாக ஆராயப்பட முடியும்.

தமிழ்நாட்டில் நடந்துள்ள நிகழ்வுக்கு மிக அருகிலான ஒரு சட்ட முன்னுதாரணமாக ஶ்ரீமந்த் பாலாசாஹேப் பாடீல் (ShrimanthBalasaheb Patil v. Speaker, Karnataka Legislative Assembly & Others, (2020) 2 SCC 1, Date of Decision: 13 November 2019) என்ற கர்நாடக வழக்கைக் குறிப்பிடலாம். அந்த வழக்கில், பதவி விலகல் மற்றும் தகுதி நீக்கம் இரண்டும் ஒன்றோடொன்று மோதியபோது, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மூன்று முக்கிய அம்சங்களை முன்வைத்தது:

1.         பதவி விலகல் தன்னிச்சையானதும் உண்மையானதும் என நிரூபிக்கப்பட்டால், பேரவைத் தலைவர் அதை ஏற்க வேண்டிய கடமை உண்டு;

2.        பதவி விலகல் கடிதம் கொடுத்ததால் மட்டும் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் ‘’தாவல் கறை” அழிந்துவிடாது;

3.        தாவல் குறித்த விளைவுகள், குறிப்பாக அரசியல் பதவிகளுக்கான தடைகள் போன்றவை, பதவி விலகலுக்குப் பின்னரும் பொருந்தக் கூடும்.

இந்தத் தீர்ப்பின் உறுதித் தன்மையால் பதவி விலகல் செய்துள்ள நான்கு எம்.எல்.ஏ.க்களின் சட்டரீதியான நெருக்கடி இறுகிப் பெருகிக் காணப்படுகிறது. மேலும், ஜி. விஸ்வநாதன் எதிர் பேரவைத்தலைவர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை[(1996) 2 SCC 353] என்ற வழக்கின் தீர்ப்பும் இவ்வழக்கில் கவனிக்க உரியதாகிறது.

'பதவி விலகல் உண்மையாகவும் தானாகவும் (genuine and voluntary) நிகழ்ந்தது என்றால் பேரவைத்தலைவர் ஏற்கலாம்' என்பதை ஆளும் தரப்பு, வலியுறுத்த முன்சொன்ன பாலாசாஹேப் பாடீல் (2019) தீர்ப்பை சுட்டிக் காட்டலாம். ஆனால், அதே தீர்ப்பிலேயே கட்சித்தாவல் கறை பதவி விலகலால் கரைந்து போகாது (defection taint does not vaporise by resignation) என்ற சட்ட உறுதி நிலைநாட்டப்பட்டுள்ளதே! எனவே, மேற்கண்ட அந்தத் தீர்ப்பு ஆளும் தரப்புக்கும் முழுக்க ஆதரவாக இல்லை; மனுதாரருக்கும் அப்படியே. அது இரண்டு திசைகளையும் சுட்டிக்காட்டும் கலவையான முன்னுதாரணமாக நிற்கிறது.

அஇஅதிமுக கொறடா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களின் உள்ளார்ந்த வாதமாக அறியக் கிடைப்பது  “பேரவைத் தலைவர் அரசியல் சட்டப் பொறுப்பை வெறும் சடங்காக மாற்றிவிட்டார்” என்பதாகும். மே 25 மதியம் சுமார் 2.30 மணியளவில் அளிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களது பதவி விலகல் கடிதங்கள் (சுமார் 90 நிமிடங்களுக்குள்) பிற்பகல் 3.55 மணிக்குள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது; அதற்குள் அல்லது உடனடியாகவே தவெகவில் இணைப்பும் நிகழ்ந்தது; பின்னர் மூவரும் முதல்வரையும் சந்தித்தது (மாலை 4.20 மணி); அரசிதழில் பதவிவிலகிய உறுப்பினர்களது இடங்கள் (தொகுதிகள்) காலியானதாக அறிவிப்புகள் ஆகிய படுவிரைவான தொடர் நிகழ்வுகள், பேரவைத் தலைவர் உண்மையான விசாரணை நடத்தினாரா என்ற அகண்ட சந்தேகத்தை எழுப்புகின்றன. பதவி விலகல்கள் “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு தகுதி நீக்கத் தவிர்ப்பு முயற்சியே’’என்றும், பேரவைத் தலைவரின் அ.ச. பிரிவு 190 படியான ‘விசாரணை’யானது ஒரு கண்துடைப்பாக/ வெற்றுச் சடங்காக (“sham compliance”) மட்டுமே இருந்ததாகக் கூறப்படுவதில் நியாயமுள்ளது.

இந்த வாதத்தில் ஒரு நுணுக்கமான அம்சமும் உள்ளது. “பதவி விலகல்களை ஏற்கக் கூடாது” என்று மட்டும் மனுதாரர் கூறவில்லை; “ஏற்கும் முன் அர்த்தம் பொதிந்த விசாரணை (meaningful inquiry) கட்டாயம்” என்பதை வலியுறுத்துகிறார்கள். அதாவது, உறுப்பினர்கள் சுய விருப்பத்தால் விலகினார்களா என்பதை தனித்தனியாக பேரவைத் தலைவர் நேரில் சோதித்தாரா? உடனடி கட்சி இணைப்பு நடந்தது ஏதாவது அரசியல் பேரத்தாலா? அவர்கள் மீது ஏற்கனவே தகுதி நீக்க மனு நிலுவையில் இருந்த நிலையில், பேரவைத்தலைவரின் ஏற்பானது தகுதியிழப்புச் சட்டத்தை விலகிச்சென்று தப்பிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதா? — இவை அனைத்தும் ஆராயப்பட வேண்டுமென மனுதாரர் தரப்பு வலியுறுத்துகிறது.

பேரவைத் தலைவரது அதிகாரம் அரசியல் சட்டத்திலிருந்து நேரடியாக வருவது; பதவி விலகல் உண்மையானதா? தானாகவே நிகழ்ந்ததா? (genuine, voluntary resignation) என்ற வரம்புக்குள் மட்டுமே அவர் பார்க்க வேண்டும்; பதவி விலகலின் பின்னணி, நோக்கம், யார் எந்தக் கட்சியில் சேர்ந்தார்? அரசியல் விளைவு என்ன? என்பதெல்லாம் அ.ச.பிரிவு 190இன் எல்லைக்குட்பட்டதல்ல; அவை அதற்கு வெளியே உள்ளதாகும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. அட்வகேட் ஜெனரலும், இந்த விஷயம் பாலாசாஹேப் பாடீல் (2019) தீர்ப்பை முன்னிறுத்தி, மட்டுமே பார்க்கப்பட உரியது என முதற்கட்டத்தில் வாதிட்டுள்ளார்.

அரசு தரப்பு வாதத்தின் சுவாரஸ்யமான அடுத்த பகுதி, “பதவி விலகல் ஏற்கப்பட்ட பின்பும் தகுதி நீக்க நடவடிக்கை தொடர முடியும்” என்ற நிலைப்பாடாகும். அதன்படி, பேரவைத் தலைவர் 9 ஜூன் 2026 - இல் இந்த நால்வருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஏழு நாள் அவகாசம் வழங்கியுள்ளதாகவும், பின்னர் அவர்கள் எழுத்து மூலம் பதில் அளித்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.“பதவி விலகல் ஏற்கப்பட்டது ஒரு விஷயம்; தாவல் குறித்த சட்ட நடவடிக்கை தொடர்வது இன்னொரு விஷயம்” என்று இரண்டையும் பிரித்துக் காட்ட அரசுத் தரப்பு, முயல்கிறது.

இவ்விடத்தில்தான், இந்தச் சம்பவம் சாதாரண கட்சித் தாவல் வழக்கிலிருந்து விலகி, ஒரு அசாதாரண அரசியல் சட்டப் புதிராக மாறுகிறது.

ஒருவர் கட்சித்தாவல் குற்றச்சாட்டுக்குப் பின் பதவி விலகல் செய்தால், பேரவைத் தலைவர் முதலில் எதனைத் தீர்மானிப்பார்? உறுப்பினரது பதவி விலகலையா? அல்லது தகுதி நீக்கத்தையா? அல்லது இரண்டையும் ஒருங்கே ஆராய்வாரா? என்ற வினாக்கள் எழும் தமிழ்நாடு நிகழ்வில், பதவி விலகல் ஏற்கப்பட்ட பின் தான் அதே நால்வரிடம் தகுதி நீக்கத்துக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு சட்டத் துருப்புகள் ஒன்றையொன்று மோதுவதாகவும், முரணாகவும் தோன்றுகின்றன. சுருக்கமாக, ஒருவர் இனி உறுப்பினரல்ல என்ற நிலையிலும், அவர் உறுப்பினராக இருந்தபோது செய்த செயலுக்காக தகுதி நீக்க விசாரணை தொடரலாமா? என்பது தற்போதைய சூழலில் எழும் சாதாரணக் கேள்வி.

சட்ட ரீதியாக இதற்கான உறுதியான பதிலாக முன்குறிப்பிட்ட பாலாசாஹேப் பாடீல் (2019) வழக்குத் தீர்ப்பு உள்ளது. தாவல் நடத்தை முன்னரே நடந்திருந்தால், அதன் கறை /விளைவுகள் பின்னர் பதவி விலகுவதால் அழியாது என்று அவ்வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதிபடக் கூறியுள்ளதல்லவா? அதனால், பதவி விலகிய பின்னரும் “அவர் தாவியவரா இல்லையா?” என்ற தீர்மானம் வெறும் கல்விசார் கேள்வி அல்ல (not a mere academic question); அது அரசியல் பதவிபெறத் தடை, மறுநியமனம், அமைச்சரவை சேர்தல் போன்ற பல விஷயங்களில் தாக்கமுண்டாக்கும் உள்ளடக்கங்கள் கொண்டிருப்பதாகும்.

நீதிமன்றத்தில் சந்தேகத்திற்குரியதாகக் காட்டப்பட்டுள்ளது இவ்விஷயமே. ஒருவர் மீது தகுதி நீக்க மனு நிலுவையில் இருந்தபோதும், அவரின் பதவி விலகலை அவசர அவசரமாக ஏற்றுவிட்டு, பின்னர் விளக்கம் கேட்பது, கட்சித் தாவல் சட்டத்தின் தடுப்பு நோக்கத்தைப் பலவீனப்படுத்துகிறது என்ற வாதம் கவனிக்கத்தக்கது. மற்றொரு வகையாகச் சொல்வதானால், இது “தலைவாசலில் தப்பிக்க விட்டுவிட்டுப், புறவாசலில் நின்று ஒப்புக்குக் கேள்வி கேட்பது” போன்ற செயலாகிவிடுகிறதல்லவா? அவ்வாறான செயலை நீதிமன்றம் ஏற்றால், எதிர்காலத்தில் எந்தக் கட்சியிலிருந்தும் தாவும் உறுப்பினர், முதலில் கொறடா உத்தரவை மீறலாம்; அடுத்து, பதவி விலகல் செய்து, பின்னர் உடனடியாகவே வேறு கட்சியில் அகலத் திறக்கப்படும் பதவி, வசதிகளுக்கான வழியில் சொகுசாகப் பயணிக்கலாம் என்ற போக்கு பெருகும்.

சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்(தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன்) அஇஅதிமுக கொறடா 17 ஜூன் 2026 -இல் தாக்கல் செய்த மனுவில் நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பேரவைச் செயலர், தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட நான்கு முன்னாள் உறுப்பினர்களிடமும் பதில் கோரப்பட்டு, வழக்கு 29 ஜூன் 2026 - க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டத்தில் உயர்நீதிமன்றம் எந்தப் போக்கையும் வெளிப்படுத்தவில்லை; பதவி விலகல்கள் ஏற்கப்பட்டதற்கோ அல்லது இடைத்தேர்தல் அறிவிப்பைத் தடுக்கவோ உடனடி இடைக்காலத் தடை எதுவும் வழங்கவில்லை. ஆனால், அஇஅதிமுக கொறடாவின் மனு எழுப்பியுள்ள கேள்விகள் முதற்கண் விசாரணைக்குரியவை என்று கருதியுள்ளது. எனவே, தற்போதைய சட்ட நிலை, “நிலுவையிலுள்ள தீவிர அரசியல் சட்டப் பரிசோதனை” எனச் சொல்லலாம்.

கொறடா உத்தரவு மீறல், பதவி விலகல், உடனடியாக ஆளும் கட்சியில் இணைப்பு, பின்னர் தகுதி நீக்க நோட்டீஸ் —எனும்  இந்த வரிசை, எதிர்கால இந்திய அரசியல் பேர வழக்குகளுக்கு முன்னுதாரண மதிப்புள்ள ஒரு சோதனை வழக்காக மாறக் கூடும்.

உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கான அணுகுமுறை, இந்தியாவில் “பதவி விலகல் உரிமை”, “கட்சித் தாவல் தடுப்பு” ஆகியவற்றுக்கிடையிலான சமநிலையை மறுபரிசீலனை செய்வது உறுதி. எவ்வாறிருப்பினும் வழக்கு உச்சநீதிமன்றத்துக்கும் செல்லுமெனப் பெரிதும் எதிர்பார்க்கலாம். ஆகவே சட்டச் சிக்கல் நீளும். அதுவரை முதலில் (மே 25 & 26இல்) பதவிவிலகிய நான்கு உறுப்பினர்களது நிலை கேள்விக்குறிதான்.

 [கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

summary

The resignation of MLAs and the resulting extraordinary legal situation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments