வணிகமயத்தின் பிடியில்...
முன்புபோல மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட இயலாது என்பதுதான் எதார்த்த உண்மை.
'மருத்துவம், பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல. போகிற உயிரைத் தடுத்துக் காப்பாற்றும் மருத்துவர்கள் நோயாளிகளின் வாழ்வில் ஒளியேற்றுபவர்கள்' என்கிற கருத்து கடந்த காலமாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில், அண்டை வீட்டு நபரால் கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 4 வயதுப் பெண் குழந்தையை மயக்க நிலையில் அவரது பெற்றோர் அடுத்தடுத்து இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதையடுத்து, காஜியாபாத் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குழந்தை உயிரிழந்துவிட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி குழந்தையின் தந்தை மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது கடமையைச் செய்யத் தவறியவர்கள் மருத்துவர்கள் என்று கூறிக் கொள்ள தகுதியற்றவர்கள் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Advertisement
Advertisement
பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஒரு கும்பல் மாரடைப்பு, தற்கொலை, விபத்துகளில் உயிரிழந்தவர்கள் பாம்புக் கடியால் இறந்தார்கள் என்று போலிச் சான்றிதழ் பெற்று ரூ.17.2 கோடியை மோசடியாகப் பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 431 பேர் பாம்புக் கடியால் இறந்ததாக இந்தக் கும்பல் மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாம்புக் கடி தொடர்பாக போலிச் சான்றிதழ் அளிக்க மருத்துவர்கள் இந்தக் கும்பலிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி இஎஸ்ஐ மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக சுகாதாரம், மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பேசியபோது, 'சில தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இத்தகைய நிகழ்வுகள் ஒட்டுமொத்த மருத்துவத் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்துகின்றன' என்று குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பரில் 103 பேருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் 55 பேருக்கு மருத்துவ ரீதியாக எந்தக் காரணமும் இன்றி பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக அதிக அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.
கேரளத்தில் மருத்துவ சுற்றுலா என்ற பெயரில், நிதி நெருக்கடியில் உள்ள ஏழைகளைக் குறிவைத்து ரூ. 5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை தருவதாகக் கூறி உடல் உறுப்புகளை தானம் பெற்று சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் எர்ணாகுளத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளன. பயனாளிகளிடம் இருந்து ரூ. 20 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை இந்தக் கும்பல் பெற்றுள்ளது; இந்த மோசடியிலும் பல மருத்துவர்கள் சிக்கியுள்ளனர்.
இவ்வளவு முறைகேடுகளுக்கு மத்தியிலும், ஒரு நம்பிக்கை கீற்றாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்.தோணன் என்ற 85 வயது மருத்துவர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் படுகர் பழங்குடியின குடும்பத்தில் பிறந்த தோணன் குடியாத்தத்தில் உள்ள தனது மருத்துவமனையில் வைத்து ரூ. 3 முதல் அதிகபட்சம் ரூ. 10 வரை மட்டுமே கட்டணம் பெற்று சிகிச்சை அளித்துள்ளார். பரம ஏழை என்றால் கட்டணமே வாங்க மாட்டார்; மருந்தும் இலவசம். அதனால்தான், கடந்த ஜூலை 17}இல் அவர் மறைந்தபோது நகரின் பல இடங்களில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் வைக்கப்பட்டன.
மருத்துவப் படிப்புக்காக ஒரு சில கோடிகள் செலவு செய்யும் நிலையில், முன்புபோல மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட இயலாது என்பதுதான் எதார்த்த உண்மை. அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவர்கள், சிகிச்சை, கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப மேம்பாடு இல்லாமல் இருந்து வருவதால், தனியார் மருத்துவமனைகளை சிகிச்சைக்கு மக்கள் நாட வேண்டிய நிலை காணப்படுகிறது.
இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்பது தவறான பரப்புரை. உலக சுகாதார அமைப்புப் பரிந்துரைப்படி 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். இந்தியாவில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் நகரங்களில் மையம் கொண்டிருப்பதும், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதும்தான் ஊரகப் பகுதிகளில் காணப்படும் மருத்துவர்கள் பற்றாக்குறைக்குக் காரணம்.
மருத்துவர்களின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டம் போட்டு சேவை மனப்பான்மையை உருவாக்க முடியாது. சேவை மனப்பான்மை இல்லாமல் போனாலும் குறைந்தபட்சம் அடித்தட்டு மக்களுக்குத் தரமான மருத்துவம் குறைந்த செலவில் கிடைப்பதையாவது உறுதிப்படுத்த வேண்டும். போலிகள் தண்டிக்கப்படுவதும், சாமானியர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாக்கப்படுவதும் அவசியம்.
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி
அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.
திருக்குறள் (எண் 524) அதிகாரம்: சுற்றம் தழால்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.