தடைகளைத் தாண்டி சாதனை!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய தலையங்கம்....
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த 13 தங்கங்களில் 8 தங்கப் பதக்கங்கள் வீராங்கனைகள் வென்றவை என்பது பெருமைப்படத்தக்கதாகும்.
இந்தப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் பின்னணியும், விடாமுயற்சியும் ஊக்கமூட்டுபவையாக உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே கலவரம் காரணமாக அமைதியின்மையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு தொடர்ந்து மூன்றாவது முறையாக காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
Advertisement
Advertisement
மிகவும் பின்தங்கிய மாநிலமான திரிபுராவில் பெலோனியா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் 23 வயதான அஸ்மிதா டே.
இவரது தந்தை மிதிவண்டி பழுதுநீக்கும் கடை வைத்து தினமும் ரூ. 300 மட்டுமே சம்பாதித்து வந்தார். அவரும் கடந்த 2025 டிசம்பரில் இறந்துவிட்டார். ஆனாலும், தாய் தந்த ஆதரவுடன் மூட்டு வலியில் இருந்து மீண்டு காமன்வெல்த் போட்டிகளில் ஜூடோவில் முதல் தங்கப் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெரும் சாதனையைப் படைத்திருக்கிறார் அஸ்மிதா டே.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த அருந்ததி 2018-இல் குத்துச்சண்டைப் பயிற்சியின்போது தாக்கப்பட்டதில் சுருண்டு விழுந்து நினைவிழந்தார். குத்துச்சண்டையைத் தொடர்ந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். அப்படியிருந்தும் உறுதியாக நின்றதால் 70 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளார் அவர்.
பிகாரைச் சேர்ந்த சோமன் ராணா, ஹரியாணாவைச் சேர்ந்த ஷர்மிளா தன்கரின் வெற்றி பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். ராணுவ வீரரான சோமன் ராணா, கடந்த 2006 டிச. 1-இல் ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகில் ரோந்து சென்றபோது கண்ணிவெடியில் சிக்கி வலது காலை இழந்தார். இடது கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குத்துச்சண்டை வீரரான அவர் தன் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தபோது, 2016-இல் புணே செயற்கை கால் பொருத்தும் மையத்துக்கு அவர் சென்றபோது திருப்பம் ஏற்பட்டது. அதன் பிறகு, குண்டு எறிதலில் பயிற்சியைத் தொடங்கி 43 வயதில் மாற்றுத் திறனாளிகளுக்கான எஃப் 57 பிரிவில் தங்கம் வென்று பெருமை சேர்த்திருக்கிறார்.
ஹரியாணாவின் மகேந்திரகர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஷர்மிளா தன்கர் இரண்டு வயதில் போலியோ காரணமாக ஒரு காலை இழந்தார். அவரது தாய் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. 19 வயதில் திருமணம். ஒரு நாள் இரவு அவரது கணவர் அவரைத் தாக்கி இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். ஆனால், அவரது இரண்டாவது கணவர் கொடுத்த ஊக்கத்தால் 34 வயதில் பயிற்சியைத் தொடங்கி எஃப் 57 பிரிவில் 39 வயதில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டியின் தந்தை முத்துப்பாண்டி சுமை தூக்கும் தொழிலாளியாகவும் தாய் பேச்சியம்மாள் தீப்பெட்டி ஆலையில் தொழிலாளியாகவும் பணிபுரிகின்றனர். அவர்கள் கஷ்டப்பட்டாலும் மகனின் விளையாட்டு வேட்கைக்கு உறுதுணையாக இருந்துவந்துள்ளனர். அதனால், காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் போட்டியிட்ட முதல் முறையிலேயே வெள்ளி வென்று பெரும் சாதனை படைத்திருக்கிறார் ராஜா முத்துப்பாண்டி.
மும்முறை தாண்டுதல் (டிரிபிள் ஜம்ப்) போட்டியில் வெள்ளி வென்ற பிரவீண் சித்ரவேல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள செட்டிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை விவசாய தினக் கூலித் தொழிலாளி. இருப்பினும் வறுமை உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டி பதக்கம் வென்றுள்ளார். இதே பிரிவில், மதுரையைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த செல்வபிரபு வெண்கலம் வென்றார்.
பிரசவத்துக்குப் பின்னர் பெண்கள் சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது மிகவும் கடினமானது. 2022-இல் தாயான வட்டு எறிதல் வீராங்கனை சீமா, தீவிர மூட்டுவலிக்கு உள்ளானார். ஆனால், அதில் இருந்து மீண்டு வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஹரியாணாவின் பிவானி நகரம் குத்துச்சண்டைக்குப் பெயர் பெற்றது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்றபோது, அந்த ஊர் வெளிச்சத்துக்கு வந்தது. இப்போதைய போட்டியில் பிவானியைச் சேர்ந்த சச்சின் (60 கிலோ பிரிவு), மகளிர் பிரிவில் சாக்ஷி (51 கி), பிரீத்தி (54 கி), ஜாஸ்மின் (57 கி), பிரியா (60 கி) ஆகிய ஐந்து பேர் தங்கம் வென்று அசத்தி உள்ளனர்.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அரசு, பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒரே முனைப்புடன் செயல்பட்டு திறமைகளைக் கண்டறிந்து தொடர் பயிற்சி அளித்தால், 2030-இல் இந்தியாவின் அகமதாபாதில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்க எண்ணிக்கையில் பெரும் பாய்ச்சலைக் காண முடியும்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்.
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல்
முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.
திருக்குறள் (எண் 620) அதிகாரம்: ஆள்வினை உடைமை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.