தமிழக ’வெற்றி' பட்ஜெட்!
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்த முதலாவது நிதிநிலை அறிக்கை தொடர்பாக...
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்த முதலாவது நிதிநிலை அறிக்கை பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில் வியப்பில்லை.
தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்பே அறிவித்து செயல்படுத்தவும் தொடங்கி இருந்த நிலையில், புதிதாக என்னென்ன திட்டங்கள், அறிவிப்புகள் வரப்போகின்றன என்ற ஆர்வம் காணப்பட்டது.
கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையேதான் தவெக அரசு ஆட்சியில் அமர்ந்திருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கை தெளிவுபடுத்தி இருந்தது. தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியிருப்பது; மின் வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்டவற்றின் கடன் நிலுவையையும் சேர்த்தால் அரசின் மொத்த நிதிச்சுமை ரூ.13.80 லட்சம் கோடி என்று வெள்ளை அறிக்கை தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
அந்தப் பின்னணியில்தான் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது என்று, நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டை நாம் அணுக வேண்டும். 2026-27 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்படி, அரசின் மொத்த வருவாய் ரூ.3,50,766 கோடி என்றால், மொத்த செலவினங்கள் ரூ.4,72,585 கோடி.
அதாவது, இதன்மூலம் ஏற்படும் நிதிப் பற்றாக்குறை ரூ.1,21,819 கோடி. இடைக்கால பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட ரூ.130 கோடி குறைவு. அதேபோல, நிலுவையில் உள்ள கடன் தொகையும் ரூ.690 கோடி குறைந்து ரூ.10,98,768 கோடியாக இருக்கிறது.
தமிழக அரசு தனது வருவாயில் 17.3% ஊதியத்துக்காகவும், 8% ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கான பலன்களுக்காகவும், 15% வாங்கிய கடனுக்கான வட்டியாகவும், 9.9% கடனை திருப்பிச் செலுத்தவும், ஏறத்தாழ 50.2% வருவாயை செலவழிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. இது போதாதென்று 33.2% அளவில் உதவித் தொகைகளும், மானியங்களும் எடுத்துக் கொள்கின்றன. அரசின் அன்றாடப் பராமரிப்புக்கும், செலவினங்களுக்கும் 3.8% தேவைப்படும் நிலையில், எஞ்சி இருக்கும் சுமார் 13%-இல் புதிதாக என்ன திட்டங்களைச் செயல்படுத்திவிட முடியும்?
இந்தப் பின்னணியில் தயாரிக்கப்பட்டிருக்கும் நிதி நிலையறிக்கை என்பதால், அரசையும், நிதியமைச்சரையும் பட்ஜெட்டின் போதாமைக்குக் குற்றஞ்சாட்டுவது நியாயமல்ல. ஏற்கெனவே இந்தியாவின் ஏனைய பல மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கடன் சுமை, நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, குறைந்த வரி வருவாய்த் திறன், வட்டிச் சுமை என்று முக்கியமான நிதி நிர்வாகக் குறியீடுகளில் தமிழகம் பின்தங்கி இருக்கும் நிலையில், பொறுப்புணர்வுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகைத் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகைத் திட்டம், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம் போன்றவற்றை அறிவித்து நடைமுறைப்படுத்த முற்படாமல் இருந்ததற்கு, நிதியமைச்சரைப் பாராட்ட வேண்டும். ஏற்கெனவே கடன் சுமை, நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடும் பொருளாதாரத்தை அவை நிலைகுலைய வைத்துவிடும். அவற்றை நிறைவேற்றுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை.
அரசுக்கு கிடைக்கும் குறைந்த அளவு நிதியாதாரத்தில் கல்வி (ரூ.52,920 கோடி), ஊரக வளர்ச்சி (ரூ.39,609 கோடி), நகர்ப்புற வளர்ச்சி (ரூ.38,715 கோடி), மக்கள் நல்வாழ்வு (ரூ.23,357 கோடி), உணவு மற்றும் கூட்டுறவு (ரூ.22,859 கோடி), போக்குவரத்து (ரூ.13,561 கோடி) ஆகியவற்றுக்குத் துறை வாரியாக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.572 கோடியில் இருந்து ரூ.1,051 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதும், ரூ.50 கோடி செலவில் 10 சிறப்பு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கும் திட்டமும் முன்மாதிரி முயற்சிகள்.
மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க ஒப்பந்தப்புள்ளிகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது, திட்ட அனுமதியில் நேர்மையாக நடந்துகொள்வது, மதுபான உற்பத்தியாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் சிறப்புக் கட்டணம் ஆகியவை பாராட்டுக்குரிய முனைப்புகள். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி அரசுக்கு வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு தழுவிய அளவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் மின்னேற்ற மையங்களை ஏற்படுத்தும் அறிவிப்புக்குப் பாராட்டுகள். வரி அல்லாத வருவாயை அதிகரிக்க மத்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அரசின் செலவினத்தைக் குறைத்து செலவின சீர்திருத்தக் குழு அமைக்கும் முடிவும் வரவேற்புக்குரியவை.
வழக்கம்போல பல நலத்திட்ட உதவிகளும், மாணவர்கள், மகளிர், அடித்தட்டு மக்களுக்காகப் பல திட்டங்களும் இல்லாமல் இல்லை. தடுமாறாமலும், தடம் புரளாமலும் வெற்றி இலக்கை நோக்கிய பயணத்துக்கான முதல் பட்ஜெட். முதல்வர் ஜோசப் விஜய்யும், நிதியமைச்சர் மரிய வில்சனும் நிர்ணயித்திருக்கும் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்கு வாழ்த்துகள்!
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்.
குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
திருக்குறள் (எண் 1021) அதிகாரம்: குடிசெயல் வகை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.