FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

போராட்டமே தீர்வாகிவிடாது!

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டமும், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலும்...

Updated On : 27 ஜூலை 2026, 3:00 am IST
போராட்டமே தீர்வாகிவிடாது!
பகிர்:

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு வழியாகப் பதவி விலகி இருக்கிறார். மே 3-ஆம் தேதி 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிந்து, அந்தத் தேர்வு மே 12-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டவுடன், அவர் தார்மிகப் பொறுப்பேற்றுப் பதவி விலகி இருந்தால், நரேந்திர மோடி அரசுக்கு தர்மசங்கடமும் ஏற்பட்டிருக்காது, மாணவர்களும் தெருவில் இறங்கிப் போராடித் தங்களது மனக் கொதிப்பை வெளிப்படுத்தி இருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

எந்தவித நேரடித் தொடர்பும் இல்லாத தர்மேந்திர பிரதான் ஏன் பதவி விலக வேண்டும் என்கிற கேள்வி அவசியமானது. கடந்த வெள்ளிக்கிழமை தேசியத் தேர்வு முகமையின் 47 அதிகாரிகள் அகற்றப்பட்டிருக்கிறார்கள். கேள்வித்தாள் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையைச் சரிவரச் செய்யாத குற்றத்துக்காகத்தான் அவர்கள் அகற்றப்பட்டிருக்கிறார்களே தவிர, அதில் அவர்கள் தரப்பு பங்கு நிரூபிக்கப்படவில்லை; குற்றஞ்சாட்டப்படவும் இல்லை.

அதே போல, மிகப் பெரிய தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதற்கு தார்மிகப் பொறுப்பேற்க வேண்டிய கடமை தர்மேந்திர பிரதானுக்கும் உண்டு. இதுபோன்ற நிகழ்வுகளில் பதவி விலகுவது என்பது பலவீனத்தின் வெளிப்பாடல்ல; தங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் செயல்பாடு. அந்த நம்பிக்கைக்குத் தரும் விலை. அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு, அரசின் அடையாளமான அமைச்சர் பதவி விலகுவது என்பது உலகளாவிய நடைமுறை.

Advertisement

Advertisement

அரியலூர் ரயில் விபத்துக்கு, அன்றைய ரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகிய முன்னுதாரணம் இருக்கிறது. தர்மேந்திர பிரதான் தலைமையிலான மத்திய கல்வி அமைச்சகம் தொடர்ந்து மாணவர்களின் நலனை பலி கொடுத்து வந்திருக்கிறது. நீட் வினாத்தாள் கசிந்தது; 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் விடைத்தாளில் மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி; பட்டப்படிப்புகளுக்கான பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குழப்பம் என்று ஒன்றன்பின் ஒன்றாக மாணவர்களின் பொறுமை சோதிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் 89 பொதுத்தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்திருக்கின்றன அல்லது கசிந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மறு தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் 2024 முதல் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் சட்டம் அமலுக்கு வந்தும், இதுவரையில் ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான், மனதுக்குள் கொதித்துப் போயிருந்த மாணவர்களின் ஆத்திரத்துக்கு வடிகாலாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்கிற கோமாளித்தனமான இணையதளப் பதிவுடன் தலைதூக்குகிறார் அபிஜீத் தீப்கே.

மகாராஷ்டிர மாநிலத்தில் சாதாரண தலித் குடும்பத்தில் பிறந்த அபிஜீத் தீப்கே, ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் இருந்தவர். அவரது இணையதள பதிவைத் தொடர்ந்து லட்சக்கணக்கான வேலையில்லாப் பட்டதாரி இளைஞர்கள், மாணவர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் இணைந்தபோது, அவர்மீது சர்வதேச ஊடக வெளிச்சம் பாய்ந்தது. ஒருபுறம் சுற்றுச்சூழல் போராளி சோனம் வாங்சுக்கின் மாணவர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதம்; இன்னொருபுறம் அமெரிக்காவில் இருந்து, ஏற்கெனவே இணையதளம் மூலமாகப் பல இளைஞர்களை ஒருங்கிணைத்திருந்த அபிஜீத் தீப்கே தில்லி வந்திறங்கியது; இடதுசாரி இயக்கங்கள் தங்களது மாணவர்,

இளைஞர் அணிகளை தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை மையப்படுத்திக் களமிறக்கியது; இவையெல்லாம் தலைநகர் தில்லியில் மட்டுமல்லாமல் நாடு தழுவிய அளவில் மாணவர் போராட்டத்தை வலுப்படுத்தின. உளவுத் துறையின் தோல்விதான் இந்தப் போராட்டம் வன்முறைக்கு நகர்ந்ததற்கு முக்கியக் காரணம். கடந்த திங்கள்கிழமை காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்திருக்கவே கூடாது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் நேரம். நாடாளுமன்றத்தை நோக்கி, அதிகரித்த பாதுகாப்புப் பகுதி வழியாக பேரணி நகரப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து தடுக்காதது காவல் துறையின் முதலாவது தோல்வி.

மாணவர்கள் போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவி இருந்திருக்கிறார்கள்; ஏற்கெனவே கற்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தில்லி காவல் துறையும் உளவுத் துறையும் இருந்திருக்கிறது. கரப்பான்பூச்சிகளை முற்றிலுமாக அழிப்பது என்பது எளிதான காரியமல்ல. மாணவர்கள் மத்தியிலும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு இடையிலும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஊடுருவியிருக்கிறது. 'பிரதானின் பதவி விலகல் ஒரு முடிவல்ல; இதுவொரு தொடக்கமே' என்று ஒரு முடிவுடன்தான் அபிஜீத் தீப்கே பின்வாங்கி இருக்கிறார்; அல்லது ஆட்சியாளர்கள் கூறுவதுபோல அமெரிக்காவில் இருந்து சர்வதேச சக்திகளால் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

தேர்வுமுறை சீர்திருத்தங்களுக்கும், வினாத்தாள் கசிவுகளுக்கும் முடிவுகட்டப் பிரதமர் ஒரு சிறப்புக் குழுவை அறிவித்திருக்கிறார். அதில் மாணவர்களையும், ஏன் அபிஜீத் தீப்கேவையேகூட இணைத்திருக்க வேண்டும். தவறு செய்தவர்களை நீதிமன்றம் காப்பாற்ற முற்படாமல் தண்டிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக... போராட்டத்தின் மூலமாக ஆட்சிக் கவிழ்ப்பு என்பது பேராபத்தில்தான் முடியும். கடந்த கால் நூற்றாண்டு வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக சிதைத்துவிடும். அதற்கு நாம் வழிகோலக் கூடாது; ஆதரித்து வழிமொழியவும் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments