நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 5-வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்தின் 'மகர துவார்' பகுதியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து...
புது தில்லி: நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்தின் 'மகர துவார்' பகுதியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழைக்காலக் கூட்டத்தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில், அமைச்சர் பிரதானை பதவி நீக்கம் செய்யக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பல எம்.பி.க்கள் ஏந்தியிருந்தனர்.
மகர துவார் பகுதியில் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஒரே நேரத்தில் தனித்தனியாகப் போராட்டங்களை நடத்தியதால், வியாழக்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்த விவாதத்தைத் திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் முடக்குவதாக என்டிஏ தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் மூன்று முக்கிய கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளது; இதில் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலும் அடங்கும்.
இளைஞர்களின் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், மாணவர்கள் மீதான வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மேலும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட காணொளிச் செய்தியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்தார். பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
'எக்ஸ்' தளத்தில் பகிரப்பட்ட பதிவில், நாடாளுமன்றத்திற்கு வெளியே அறிக்கை வெளியிடுவதற்குப் பதிலாக பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என்று கார்கே கூறினார். "நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நாடாளுமன்ற அவையில்தான் அறிக்கை அளிக்க வேண்டும்; மாறாக, நள்ளிரவில் காணொளியைப் பதிவு செய்து நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒருதலைப்பட்சமான 'மன் கி பாத்' நிகழ்ச்சியை நடத்தக்கூடாது!!" என்று கார்கே குறிப்பிட்டிருந்தார்.
"நரேந்திர மோடி அவர்களே, இன்று நாடாளுமன்றத்திற்கு வரும் முன், தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்துவிட்டு வாருங்கள். முதலில் மாணவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்; மாணவர்களின் குரலை ஒடுக்க தடி அடி மற்றும் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த உத்தரவிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். அதன் பிறகு, கல்வி முறை குறித்த விரிவான விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது "மிகக் கடுமையான" நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை மற்றும் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பான வரைவு மசோதாவை மத்திய அமைச்சரவை பரிசீலிக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து கார்கேவின் கருத்துகள் வெளியாகின.
இதற்கிடையே, அமைதியான முறையில் போராடிய மாணவர்களை மத்திய அரசு "கோழைத்தனம் மற்றும் அப்பட்டமான கொடூரத்துடன்" எதிர்கொண்டதாகவும், நாட்டின் இளைஞர்களை "எதிர்காலத்தின் வாரிசுகள்" என்று கருதாமல் "தேசத்தின் எதிரிகள்" போல நடத்தியதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
"போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்முடைய மகன்கள் மற்றும் மகள்கள், நம்முடைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள்" என்று குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, காவல்துறை மூலம் நடத்தப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.
மேலும், ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு, தில்லியில் இளைஞர்கள் போராட்டம் மற்றும் இளைஞர்கள் மீதான காவல்துறையினரின் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டததால் தொடர்ந்து 5 நாள்களாக இரு அவைகளும் முடங்கியது.
Opposition MPs continued their protest against the NEET-UG paper leak for the fifth day at Parliament's Makar Dwar on Friday
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.