லாஸ் ஏஞ்சலீஸுக்கு தயாராவோம்!
அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றிய தலையங்கம்....
ஜப்பானில் உள்ள அய்சி -நகோயா நகரில் அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்பார்ப்பையும் எட்டவில்லை; ஏமாற்றமும் அளிக்கவில்லை. இந்தியா கடந்த முறையைப்போல நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது என்கிற அளவில் மகிழ்ச்சி.
நமது இந்திய அணி 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என 85 பதக்கங்களுடன் நாடு திரும்பி இருக்கிறது. இதற்கு முன்னர், 2023-இல் சீனாவின் ஹாங்ஸுவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என 106 பதக்கங்களை வென்றது; இந்த முறை 21 பதக்கங்கள் குறைந்துள்ளன.
இந்திய அணியில் பங்கேற்ற 495 பேரில், 310 பேர் முதல் முறை களம் கண்டவர்கள். இந்திய ஆடவர், மகளிர் ஆகியோர் தலா 38 பதக்கங்கள் வென்றனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீனாவை வீழ்த்தி, 44 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றிருக்கிறது.
Advertisement
Advertisement
17 வயதேயான கும்கும் மொஹோத் இப்போட்டியில் வில்வித்தை ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனை படைத்தார். இவரது தந்தை இனிப்பு பண்டங்களுக்கான உறை தயாரித்து விற்பவர்.
ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயி மகள் நீரு தண்டா, துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் டிராப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனை படைத்திருக்கிறார். அவர் தங்கப்பதக்கம் வென்றபோது அவரது தாய் சுதேஷ் தேவி அருகில் உள்ள ரேஷன் கடையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான ஒதுக்கீட்டில் கோதுமை வாங்கிக் கொண்டு இருந்தார் என்பதும், மகளின் சாதனையைத் தெரிந்துகொள்ள அவரது வீட்டில் தொலைக்காட்சியோ, அறிதிறன்பேசியோகூட இல்லை என்பதும் வெற்றியின் மதிப்பை மேலும் அதிகரிக்கிறது.
கோவைக்கு அருகே உள்ள வழுக்குப்பாறை, மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றார். 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை அவர் முறியடித்தார். வித்யாவின் தந்தை லாரி ஓட்டுநர். மிகவும் கடினமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து மன உறுதி, தொடர் பயிற்சி காரணமாக இந்த சாதனைகளைப் படைத்துள்ளார்.
வில்வித்தையில் 2 தங்கம் வென்ற தெலங்கானாவின் சிகிதா சாஹிலின் தந்தை, தனது மகளின் முன்னேற்றத்துக்காக விவசாய நிலத்தை அடமானம் வைத்ததுடன், நெல் அறுவடை இயந்திரத்தையும் விற்றார்; தந்தையின் கனவை மகள் நனவாக்கி உள்ளார்.
வறுமை, ஊக்கமருந்து தடை, காலில் எலும்பு முறிவு, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு எனப் பல தடைகளைத் தாண்டி தனது 14 வயது மகள் கண் முன்னே குண்டு எறிதலில் மன்பிரீத் கெüர் 36 வயதில் வெண்கலம் வென்று சாதித்துள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரை, வித்யா ராம்ராஜ் (மகளிர் 400 மீ. தொடர் ஓட்டம்), கணேஷ் மணிரத்னம் (வில்வித்தை ஆடவர் காம்பவுண்ட் அணி) ஆகியோர் தங்கம் வென்று பெருமை சேர்த்தனர். மேலும், ஜி.கமலினி (மகளிர் கிரிக்கெட் அணி), வாஷிங்டன் சுந்தர் (ஆடவர் கிரிக்கெட் அணி) ஆகியோர் தங்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், வித்யா ராம்ராஜ், விஷால் டி.கே. ஆகியோர் கலப்பு 400 மீ. தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றனர். இவர்களைத் தவிர, தமிழகத்தின் 9 பேர் பல்வேறு போட்டிகளில் வெண்கலம் வென்றனர். இவர்களில் பரணிகா இளங்கோவன் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றிலேயே கோல் ஊன்றித் தாண்டுதலில் (போல் வால்ட்) இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்தார்.
சாதனைகள் ஒருபுறம் இருக்க, டென்னிஸ் உள்ளிட்ட 16 போட்டிகளில் 137 பேர் பங்கேற்றும் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியவில்லை. பாட்மின்டன், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 37 பேர் பங்கேற்றும் 2 வெண்கலம் மட்டுமே வென்றனர். நட்சத்திர வீராங்கனைகளான பி.வி.சிந்து (பாட்மின்டன்), மனு பாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்) இருவரும் பதக்கப் பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) காயத்தால் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க பின்னடைவு.
டென்னிஸில் 1986-க்குப் பிறகு பதக்கம் வெல்லாமல் இந்தியா திரும்புவது இதுதான் முதல் முறை. பாட்மின்டனிலும் டேபிள் டென்னிஸிலும் வெண்கலப் பதக்கம்தான் கிடைத்தது என்பது ஏமாற்றம் அளிக்கிறது. வில்வித்தை, ஹாக்கி, கிரிக்கெட் ஆகியவை நம்பிக்கை அளிக்கின்றன என்றாலும், தனி நபர் போட்டிகளான நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிளிங் போன்றவற்றில் கவனமும் முனைப்பும் காட்டவேண்டிய அவசியத்தை ஆசிய விளையாட்டுப் போட்டி முடிவுகள் உணர்த்துகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசும், மாநில அரசுகளும் விளையாட்டுக்கு ஊக்கம் அளித்து வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 703 கோடி செலவழித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற இருக்கும் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் கவனம் செலுத்தப்பட வேண்டிய நேரமிது. டேபிள் டென்னிஸில் சீனா, நீச்சல் போட்டியில் அமெரிக்கா, ஜூடோவில் ஜப்பான், வில்வித்தையில் தென்கொரியாபோல குத்துச்சண்டை, மல்யுத்தம் உள்ளிட்ட தனிப் போட்டிகளிலும், ஹாக்கி போன்ற அணிப் போட்டிகளிலும் இந்திய அணி ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலையை எட்ட வேண்டும். அதன் பிறகுதான் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா கனவு காண முடியும்.
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
திருக்குறள் (எண் 611) அதிகாரம்: ஆள்வினை உடைமை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.