FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேரறுத்தாக வேண்டும்!

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை அமெரிக்காவுக்கும் ஏனைய வல்லரசு நாடுகளுக்கும் புரிய வைத்த நியூயார்க் நகரத்தின் உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதல் நடந்து இன்றுடன் சரியாக கால் நூற்றாண்டு கடந்திருக்கிறது.

12 செப்டம்பர் 2026, 6:28 am IST
நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல் (கோப்புப்படம்) - படம்: AFB
பகிர்:

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை அமெரிக்காவுக்கும் ஏனைய வல்லரசு நாடுகளுக்கும் புரிய வைத்த நியூயார்க் நகரத்தின் உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதல் நடந்து இன்றுடன் சரியாக கால் நூற்றாண்டு கடந்திருக்கிறது. 19 அல்காய்தா பயங்கரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களைக் கடத்திச் சென்று அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 2,977 அப்பாவிகள் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியிலிருந்து உலகம் மீண்டெழுவதற்குப் பல ஆண்டுகள் கடந்தன.

கடத்தப்பட்ட இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரத்தின் மத்தியப் பகுதியில் அமைந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் என்று அழைக்கப்படும் வடக்கு, தெற்குக் கோபுரங்கள் மீது மோதி தாக்குதல் நடத்தின. அடுத்த இரண்டு மணி நேரத்தில் இரண்டு கோபுரங்களும் இடிந்து சரிந்தன என்பது மட்டுமல்லாமல், நியூயார்க் நகரத்தின் மையப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தின.

மூன்றாவது விமானம் வெர்ஜீனியா மாகாணத்திலுள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையிடமான பென்டகனின் கிழக்குப் பகுதியில் மோதி வெடித்து பேரழிவை ஏற்படுத்தியது. அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனின் புறநகர்ப் பகுதியில் பென்டகன் அமைந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நான்காவது விமானத்தில் பயணித்த பயணிகளும் விமான ஊழியர்களும் பயங்கரவாதிகளுடன் போராடியதைத் தொடர்ந்து பென்சில்வேனியா மாநிலம் ஷேங்க்ஸ்வில் திறந்தவெளியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானம் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தையோ அல்லது அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையையோ குறிவைத்திருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

Advertisement

Advertisement

நான்கு விமானங்களிலும் பயணித்த 246 பயணிகளும் விமான ஊழியர்களும் அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தனர். இன்றுவரை உலகில் நடந்த மிகவும் மோசமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகத்தான் இருக்கும்.

2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 1993 பிப்ரவரி 26-ஆம் தேதி பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிறைந்த வாகனம் ஒன்றை உலக வர்த்தக மையத்தின் வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்குள் ஓட்டிச் சென்று அதைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் ஆறு நபர்கள் கொல்லப்பட்டனர் என்றாலும் அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை. அதிலிருந்து தொடங்குகிறது அமெரிக்காவுக்கு எதிரான 'ஜிகாதி பயங்கரவாதத் தாக்குதல்' என்ற சர்வதேச அளவில் உயர்ந்த பயங்கரவாதம்.

உலக வர்த்தக மையத் தாக்குதலைத் தொடர்ந்து, 2001 டிசம்பர் 13-ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 2002-ஆம் ஆண்டு அக்டோபரில் பயங்கரவாதிகள் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள கலையரங்கத்தைக் கைப்பற்றினர். 912 நபர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.

ரஷியாவின் சிறப்புப் படைகள் நடத்திய மீட்பு நடவடிக்கைகளில் அவர்களில் 130 பேர் உயிரிழந்தனர். அடுத்த சில மாதங்களில் இந்தோனேசியாவின் பாலியில் இரவு விடுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் ரயில் குண்டுவெடிப்பு (2004), ரஷியா பெஸ்லான் பள்ளிக்கூட முற்றுகை (2004), லண்டன் குண்டுவெடிப்பு (2005), இந்தியாவின் மும்பை பயங்கரவாதிகள் தாக்குதல் (2008), பாகிஸ்தான் பெஷாவர் பள்ளிக்கூடப் படுகொலை (2014), பிரான்ஸின் பாரிஸ் தாக்குதல் (2015) என்று பயங்கரவாதத் தாக்குதல்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்தப் பட்டியலில் காஸாவிலும், இஸ்ரேலிலும் பரஸ்பரம் நடந்த தாக்குதல்களைச் சேர்த்துப் பார்த்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை உலகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இழந்திருக்கிறது.

உலக வர்த்தக மையத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா பயங்கரவாதத்தின் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது.

ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, உலக நாடுகளிடம் தனது பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு கோரியது. 1949-க்குப் பிறகு 'நேட்டோ' நாடுகளை தனது முனைப்புக்கு ஒத்துழைக்க வைத்தது.

பெஸ்லான் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் ரஷியாவையும், ஜின்ஜியாங்கில் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்பு பயங்கரவாதம் சீனாவையும் அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவளிக்கத் தூண்டியது. அமெரிக்காவுடனான கருத்து வேறுபாடுகளையும் மீறி ரஷியாவும் சீனாவும் ஆதரவு தந்ததற்குக் காரணம் தங்களது பிரச்னையை சர்வதேச அளவில் நியாயப்படுத்துவதற்கான முனைப்பு என்றுதான் கூறவேண்டும்.

இந்தியாவைப் பொருத்தளவில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக பாகிஸ்தான் நடத்திவரும் மறைமுக பயங்கரவாத ஊடுருவல் குறித்து சர்வதேச அரங்கில் குரல் எழுப்பி வருகிறது. அல்காய்தாவுக்கு ஆப்கானிஸ்தானில் களம் அமைத்துக் கொடுத்தும், அதன் தலைவரான ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை

அமெரிக்கா வேடிக்கை பார்த்தது, அதன் பயங்கரவாதத்துக்கு எதிரான அறைகூவலை இரட்டை நிலைப்பாடு என்றுதான் கூறவேண்டும்.

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணான பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படாத வரை, அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முழக்கம் போலித்தனமல்லாமல் வேறேன்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments