விதிமீறல் விபரீதங்கள்...!
கல்வி கற்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு வீட்டை விட்டு, ஊரை விட்டு, மாநிலத்தை விட்டு வந்த மாணவர்களின் கனவு, கட்டடம் இடிந்து விழுந்த ஒரு விநாடியில் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டது.
புது தில்லி சத்ய நிகேதன் பகுதியில் ஆண்கள் தங்கும் விடுதி செயல்பட்டுவந்த ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஐந்து மாணவர்களும், இரு தொழிலாளர்களும் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தில்லி மாளவியா நகரில் உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டவர் உள்பட 23 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம் மறைவதற்குள் அடுத்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகேயுள்ள சத்ய நிகேதன் மிகவும் நெரிசலான பகுதி. இங்குள்ள கல்லூரிகளில் பயிலும் வெளிமாநில மாணவர்களை மையமாகக் கொண்டு இந்தப் பகுதியில் பல தங்கும் விடுதிகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த விடுதிகள், உணவகங்கள் செயல்படும் கட்டடங்கள் அனைத்தும் விதிகளின்படி கட்டப்பட்டுள்ளனவா, அவற்றின் பாதுகாப்புத் தரநிலை எந்த அளவில் உள்ளது என்பதில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது சத்ய நிகேதன் சம்பவம்.
'ஹாஸ்டல் டேஸ்' என்கிற அந்த ஐந்து மாடி கட்டடம் செப்டம்பர் 6-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்தக் கட்டடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்டடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி கட்டடத்தின் அடித்தளம் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
தில்லி சத்ய நிகேதன் பகுதியில் மாணவர்கள், தனியாகத் தங்கியிருந்து வேலைக்குச் செல்வோரைக் குறிவைத்து ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதியில் உணவகங்கள், கடைகள், சிற்றுண்டி சாலைகள் நிறைந்துள்ளதும், மெட்ரோ நிலையம் மற்றும் கல்லூரிகள் எளிதில் அணுகக்கூடிய தொலைவில் இருப்பதும், பல கல்லூரிகளில் விடுதி வசதி இல்லாததாலும் மாணவர்கள் சத்ய நிகேதன் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளைத் தேர்வு செய்யக் காரணமாக அமைந்திருக்கிறது.
எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் பெரும்பாலான வீடுகள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. பணம் கொடுத்து தங்கியிருப்பவர்களின் நலனில் சிறிதுகூட அக்கறையின்றி இந்தத் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன என்பது சத்ய நிகேதன் சம்பவத்துக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பால்கனி இல்லாத, காற்றோட்டம் குறைவாக உள்ள மூன்று அல்லது நான்கு பேர் தங்கும் அறையில் ஒரு படுக்கைக்கு சுமார் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை வசூலிக்கப்படுகிறது.
இது தில்லியில் மட்டுமே காணப்படும் பிரச்னை அல்ல, நாடு முழுவதுமே இந்த பிரச்னை இருக்கிறது. புறாக்கூண்டில் அடைப்பதுபோல மாணவர்களை, வேலைக்குச் செல்லும் இளைஞர்களை அடைத்து பணம் பறிக்கும் 'பி.ஜி.'க்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. பொதுக் கழிப்பறை, குறுகலான அறைகள் என இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் வெளியுலகுக்குத் தெரிவதே இல்லை.
'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்பது இப்போதைய சத்ய நிகேதன் சம்பவத்திலும் விதிவிலக்கு இல்லாமல் தொடர்கிறது. இடிந்து விழுந்த கட்டடம் மற்றும் அருகில் உள்ள பாதுகாப்பற்ற கட்டடங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அங்கீகாரம் இல்லாத ஐந்து மாடிகளைக் கொண்ட அனைத்துக் கட்டடங்களுக்கும் 'சீல்' வைக்க தில்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுபோன்ற அனைத்துக் கட்டடங்களின் கட்டமைப்புத் தன்மையும் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு அறிவித்திருக்கிறது.
குடியிருப்பு வீட்டில் பி.ஜி. தங்குமிட வசதி ஏற்படுத்த தில்லியில் முதல்முறையாக 1993 டிசம்பரில் அனுமதி வழங்கப்பட்டது. வீட்டில் உள்ள படுக்கை அறைகளில் பாதியை மட்டுமே பி.ஜி. பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அதிகபட்சம் 4 அறைகள் அல்லது 8 படுக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், புற்றீசல்போல பெருகிய பி.ஜி. தங்கும் விடுதிகள் இந்த விதிகளைக் காற்றில் பறக்கவிட்டன. அதன் பிறகு இந்த தங்கும் விடுதிகளை முறைப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விதிகள் தளர்த்தப்பட்டதை சத்ய நிகேதன் சம்பவம் வெளிச்சம் போடுகிறது.
பழைய கட்டடங்களை பி.ஜி. தங்குமிடங்கள், முதியோர் பராமரிப்பு இல்லங்கள், பள்ளிகள் உள்ளிட்ட வணிகப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் கட்டட உறுதித்தன்மை குறித்த ஆய்வறிக்கையை உரிமையாளர்கள் சமர்ப்பித்து, கட்டடம் பாதுகாப்பானது எனச் சான்றளிக்க வேண்டும் என பி.ஜி. கட்டடங்களுக்கான புதிய பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கி வருவதாக தில்லி அரசு தெரிவித்திருப்பது காலம் கடந்த நடவடிக்கை. மாளவியா நகர் தங்கும் விடுதி தீவிபத்துக்குப் பின்னர் அதிகாரிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டனர்; அதேபோல், இப்போதும் சில நாள்கள் செயல்படுவார்கள்; ஆனால், இதற்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படாமலேயே தொடர்கிறது.
கல்வி கற்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு வீட்டை விட்டு, ஊரை விட்டு, மாநிலத்தை விட்டு வந்த மாணவர்களின் கனவு, கட்டடம் இடிந்து விழுந்த ஒரு விநாடியில் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டது. இந்த மாணவர்களை இழந்த குடும்பத்தினரின் வலியையும், வேதனையையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை. விதிமுறைகளை மீறும் சிலரின் சுயநலத்துக்காக, அதைக் கண்டறிந்து தடுக்காத அதிகார வர்க்கத்தின் பொறுப்பின்மைக்காக இன்னும் எத்தனை உயிர்களை நாம் பலிகொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை.
மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பார் யாம்கண்டது இல்.
மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
திருக்குறள் (எண் 1071) அதிகாரம்: கயமை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.