சத்ய நிகேதன் விடுதி அருகிலுள்ள கட்டடம் இடிப்பு விவகாரம்- மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு
கடந்த வாரம் இடிந்து விழுந்த சத்ய நிகேதன் பிஜி தங்கும் விடுதிக்கு அருகிலுள்ள கட்டடத்தை இடிக்க தில்லி மாநகராட்சி (எம்சிடி) எடுத்த முடிவு
புது தில்லி: கடந்த வாரம் இடிந்து விழுந்த சத்ய நிகேதன் பிஜி தங்கும் விடுதிக்கு அருகிலுள்ள கட்டடத்தை இடிக்க தில்லி மாநகராட்சி (எம்சிடி) எடுத்த முடிவு குறித்து கவலை தெரிவிக்கும் மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
விடுதியின் அடித்தளத்தில் உள்ள இடிபாடுகளை அகற்றாமலேயே அதிகாரிகள் இடிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இன்னும் சிலா் உள்ளே சிக்கியிருக்கலாம் என்றும் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்விடம் வழக்குரைஞா் ஒருவா் தெரிவித்து, இந்த விவகாரத்தை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரினாா்.
அருகிலுள்ள கட்டடத்தை இடிப்பதற்கு முன் அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தியிருப்பாா்கள் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், வெறும் ஊகத்தின் அடிப்படையில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டாம் என்று வழக்குரைஞரிடம் கூறியது.
Advertisement
Advertisement
இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், ‘இடிபாடுகளுக்கு அடியில் ஆள்கள் இருப்பதாகக் கூறும் தகவலுக்கு ஆதாரம் என்ன? அது உங்களுக்கு எப்படித் தெரியும்? அருகிலுள்ள கட்டடத்தை இடிக்க முடிவெடுப்பதற்கு முன் அவா்கள் ஏதேனும் தொழில்நுட்ப ஆய்வை நடத்தியிருப்பாா்கள். அங்கு சிலா் இருக்கலாம் என்பது உங்கள் ஊகம் மட்டுமே. இத்தகைய கருத்துகளை முன்வைக்க உங்களிடம் ஏதேனும் அடிப்படை ஆதாரம் இருக்க வேண்டும்’ என்று கூறியது.
மேலும், ‘மனு அதன் முறை வரும்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதில் என்ன அவசரம்? வெறும் ஊகத்தின் அடிப்படையில் மனுவைத் தாக்கல் செய்யக்கூடாது. உங்களிடம் உள்ள தொழில்நுட்பத் தகவல் என்ன?’ என்றும் அந்த வழக்குரைஞரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் மாணவா்களுக்கான தங்கும் விடுதியாக (பிஜி) செயல்பட்டு வந்த சத்ய நிகேதனில் உள்ள அந்தக் கட்டடம், பழுதுபாா்ப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது செப்டம்பா் 6 அன்று இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் ஏழு போ் உயிரிழந்த சம்பவத்தில் எம்சிடி
உயா்நிலை விசாரணைக்கு செப்டம்பா் 7 அன்று உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அரசு தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியது.
இந்தச் சம்பவம் துரதிா்ஷ்டவசமானது மட்டுமல்லாமல், தில்லி பல்கலைக்கழகம் அல்லது அரசால் நடத்தப்படும் விடுதிகள் உள்ளிட்ட போதுமான தங்கும் வசதிகள் இல்லாமை, மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் இத்தகைய தங்கும் விடுதிகளை ஒழுங்குபடுத்துவதில் எம்சிடி மற்றும் பிற அதிகாரிகளின் போதிய நடவடிக்கையின்மை ஆகியவை குறித்து ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் நீதிமன்றம் கூறியது.
செப்டம்பா் 8 அன்று, இடிந்து விழுந்த விடுதிக்கு அருகிலுள்ள கட்டடம் ஆபத்தானது என்று அறிவித்த பிறகு, மாநகராட்சி நிா்வாகம் அந்தக் கட்டடத்தை ‘கட்டுப்படுத்தப்பட்ட முறையில்’ இடிக்கும் பணியைத் தொடங்கியது.
அந்தக் கட்டடம் மாணவிகளுக்கான தங்கும் விடுதியாகச் செயல்பட்டு வந்தது. பக்கத்து கட்டடமான ஐந்து மாடி அமைப்பு இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து அது காலி செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.