மன்னிக்க முடியாத குற்றம்!
நோயாளியின் உடலில் செலுத்தப்பட்ட மருந்தைத் திரும்பப் பெறவா முடியும்? கண்காணிப்புக் குறைபாடு மன்னிக்க முடியாத குற்றம்.
ஹிமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையில் இருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீரக சுத்திகரிப்புக்கு (டயாலிசிஸ்) உதவும் திரவ மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை நோயாளிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிர குறைபாடுகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் பாக்டீரியல் எண்டோடாக்சின் அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திரவ மாதிரிகளில் ஒன்று 1.5 சதவீதம் டெக்ஸ்ட்ரோûஸயும், மற்றொன்று 2.5 சதவீத டெக்ஸ்ட்ரோûஸ கொண்டதாகவும், துகள்மப் பொருள்கள் மற்றும் பருத்தி போன்ற துகள்களும் அதில் இருந்ததாகவும் மருந்துப் பரிசோதனை ஆய்வகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த இரண்டு மாதிரிகளும் தரநிலைக்கு உட்பட்டவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
டயாலிசிஸ் கரைசல்களில் அதிகப்படியான பாக்டீரியல் எண்டோடாக்சின்கள் மற்றும் வெளிப்புற துகள்மப் பொருள்கள் இருப்பது நோயாளிகளின் பாதுகாப்புக்கு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், கடுமையான அழற்சி எதிர்வினைகளை தூண்டக்கூடும் என்பதுடன், துகள்மப் பொருள்கள் அழற்சி மற்றும் திசு சேதத்தையும் ஏற்படுத்தும். தொற்று அல்லது பிற உடல் முழுவதுமான விளைவுகளின் மூலம் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
சம்பந்தப்பட்ட மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த டயாலிசிஸ் திரவம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தால், தாய்லாந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த இந்த டயாலிசிஸ் திரவத்தின் தொகுதிகள் கடந்த ஏப்ரல் 7 மற்றும் மே 5, 2025 ஆகிய தேதிகளில் தயாரிக்கப்பட்டவை என்றும், அவற்றின் காலாவதி தேதி ஏப்ரல் மற்றும் மே 6, 2027 எனவும் தெரியவருகிறது.
இந்திய மருந்து ஒழுங்குமுறை விதிகளின்படி, இந்தத் திரவ பாட்டில்களின் லேபிள்களில் குறிப்பிடப்படவேண்டிய 9 முக்கியப் பாதுகாப்புத் தகவல்கள் விடுபட்டுள்ளன. அதேபோல, திரவத்தை உறைநிலைக்குக் கொண்டுசெல்லக் கூடாது என்ற எச்சரிக்கை மற்றும் கண்ணுக்குத் தெரியும் துகள்கள் இருந்தால் பயன்படுத்தக் கூடாது என்ற வாசகங்களும் லேபிளில் இல்லை.
பொதுவான வேதிப்பெயரைவிட, பிராண்ட் பெயர் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டு விதிமீறல் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் இறக்குமதி உரிம எண் போன்ற அத்தியாவசிய விவரங்களும் லேபிளில் இடம்பெறவில்லை.
குறிப்பிட்ட டயாலிசிஸ் திரவங்கள் நச்சுத்தன்மை தொடர்பான எண்டோடாக்சின் பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளன. இதையடுத்து, மருந்து அதிகாரிகள் தரம் குறைந்த டயாலிசிஸ் திரவ தொகுதிகளின் முழு இருப்பையும் சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். மேலும், மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அனைத்து மாநிலங்களின் மருந்து அதிகாரிகளுக்கும் எச்சரிக்கைக் குறிப்பை அனுப்பியுள்ளது.
நாட்டில் நாள்தோறும் சுமார் 93 ஆயிரம் 'டயாலிசிஸ்' அமர்வுகள் நடைபெறுகின்றன. பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத் தரவுகளின்படி இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 2.2 லட்சம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஆண்டுக்கு மொத்தம் 3.4 கோடி டயாலிசிஸ் அமர்வுகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் டயாலிசிஸ் தேவைகளை நிறைவு செய்ய தற்போது உள்நாட்டிலேயே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் திரவங்கள் மற்றும் பவுடர் தயாரிப்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கியிருந்தாலும், உயர் தொழில்நுட்பத் தரம்வாய்ந்த திரவங்கள் மற்றும் சிறப்பு மருத்துவப் பாகங்களுக்கு நாடு இன்னும் சர்வதேச இறக்குமதியையே பெருமளவில் நம்பியிருக்கும் நிலை உள்ளது.
இதனால், டயாலிசிஸ் திரவங்கள் மற்றும் அதுசார்ந்த மருத்துவ உபகரணங்கள் ஜெர்மனி, தாய்லாந்து, அமெரிக்கா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
குறிப்பாக, எய்ம்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி மருத்துவ மனைகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பெருமளவிலான பெரிட்டோனியல் மற்றும் ஹீமோடயாலிசிஸ் திரவங்கள் தாய்லாந்து உற்பத்தி ஆலைகளில் இருந்து பெறப்படுவதாகக் கூறப்படுகிறது.
அப்படி கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி திரவத்தில்தான் தற்போது குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கப்பட்டிருந்தாலும், ஏப்ரல் 2025 தயாரிப்பு தேதியைக் கொண்ட இவை எந்தெந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவை நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனவா, அவ்வாறு பயன்படுத்தியிருந்தால், நோயாளி பாதிக்கப்படாமல் இருக்க எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் என்ன போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
இருமல் மருந்தில் அண்மையில் கண்டறியப்பட்ட குறைபாடு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது குறைபாடுடைய டயாலிசிஸ் திரவம் குறித்த குற்றச்சாட்டு அதன் நீட்சியாக உள்ளது. தரமற்ற மருந்துத் தொகுதியை திரும்பப் பெற முடியும். நோயாளியின் உடலில் செலுத்தப்பட்ட மருந்தைத் திரும்பப் பெறவா முடியும்? கண்காணிப்புக் குறைபாடு மன்னிக்க முடியாத குற்றம்.
குற்றமே காக்க பொருளாக; குற்றமே
அற்றம் தரூஉம் பகை.
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
திருக்குறள் (எண் 434) அதிகாரம்: குற்றம் கடிதல்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.