FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒதுக்கீடும் தாக்கமும்!

சிஎஸ்ஆர் நிதி ஒதுக்கீடு பற்றிய தலையங்கம்....

24 செப்டம்பர் 2026, 3:20 am IST
பகிர்:

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் பங்களிப்பு, கடந்த பத்தாண்டுகளில் கணிசமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. "சிஎஸ்ஆர் நிதி' என்று சுருக்கமாக அழைக்கப்படும், இந்தப் பொது நிறுவனங்களின் சமூக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு, பல ஆக்கபூர்வப் பணிகளுக்கு வழிகோலி இருக்கிறது. இதன்மூலம், அரசும், தன்னார்வ அமைப்புகளும், ஒதுக்கீட்டு நடைமுறைச் சிக்கல்கள், தடைகளை எதிர்கொள்ளாமல் பல முன்னேற்றப் பணிகளை முன்னெடுக்க முடிந்திருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு ஒதுக்கீடு என்பது வரிவிலக்குப் பெறுவதற்கான வழிமுறை அல்ல என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். நிறுவனங்கள் தங்களது நிகர லாபத்தில் 2% பங்கை சிஎஸ்ஆர் நிதிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வருமான வரிச் சட்டத்தின் 37(1) பிரிவின் கீழ் சிஎஸ்ஆர் நிதி ஒதுக்கீட்டுக்காக வரிவிலக்கோ, வர்த்தகச் செலவுக் கணக்கில் குறைக்கவோ அனுமதிக்கப்படவில்லை.

2024-25-இல் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு நிதித் திட்டங்களுக்கு ரூ.40,794 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதில் கணிசமான ஒதுக்கீடுகள் கல்வி, சுகாதாரம், வாழ்வியல் தேவைகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவற்றுக்காகச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு, முறையான நிறுவனங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு வழங்குகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதனால், அரசு ஒதுக்கீடுகளைப் போல அவை மடைமாற்றம் செய்யப்படுவதில்லை.

Advertisement

Advertisement

அதேநேரத்தில், சிஎஸ்ஆர் நிதி ஒதுக்கீட்டில் சில குறைபாடுகள் இல்லாமல் இல்லை. பயனாளிகளின் தேவைகளுக்கான ஒதுக்கீடுகள் செய்யப்படுகிறதா என்கிற கேள்வியும், அப்படி செய்யப்படும் ஒதுக்கீடுகள் சமச்சீராக நகர்ப்புறம், கிராமப்புறம் என்கிற வேறுபாடில்லாமல் பலனளிக்கிறதா என்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தலைநகர் தில்லியில் செய்யப்படும் ஒதுக்கீடு நபர் ஒன்றுக்கு ரூ.1,243 என்றால், அதுவே பிகார் மாநிலத்தில் வெறும் ரூ.35-ஆக மட்டுமே காணப்படுகிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நல்லெண்ணத்துடன் கணிசமான சிஎஸ்ஆர் ஒதுக்கீட்டைச் செய்கின்றன. சமூக நலத் திட்டத்தை தீர்மானித்தவுடன் அதை செயல்படுத்த சரியான அமைப்பை அடையாளம் காண்கின்றன. அதற்குப் பிறகு, அந்தத் திட்டத்துக்கான தேவையைத் தீர்மானித்து தங்களது ஒதுக்கீட்டை வழங்குகின்றன. அதாவது, தங்களது சிஎஸ்ஆர் நிதி ஒதுக்கீட்டுக்குத் தகுந்த சமூகத் தேவை தேவைப்படுகிறது.

இதுதான் இந்தத் திட்டம் எதிர்கொள்ளும் முக்கியமான குறைபாடு. ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தை அடையாளம் கண்டு, அந்தப் பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' எனப்படும் அறிதிறன் கரும்பலகை உள்ளிட்ட நவீன கற்பித்தல் உபகரணங்கள் நிறுவப்படுகின்றன. புதிய கணினிகள், மின் விசிறிகள்என வகுப்பறைகள் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாகின்றன.

அதன் தொடக்க விழா, அந்த கார்ப்பரேட் நிறுவனத்தால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உற்சாகத்தில் பள்ளிச் சிறார்களும், பெருமிதத்தில் அதிகாரிகளும் பள்ளி வளாகத்தில் வளைய வருகிறார்கள். அந்தக் கிராமத்தின் தேவை, புத்தாக்க வகுப்பறைகள் அல்ல என்கிற எதார்த்தத்தை அவர்கள் உணர்வதில்லை.

குறிப்பாக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதற்குப் போக்குவரத்து வசதியோ, பள்ளியில் போதுமான கழிப்பறையோ, சுத்தமான குடிநீரோ இல்லாத நிலையில் புத்தாக்க வகுப்பறைகளால் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது? மாணவர்களின் இடைநிறுத்தத்துக்கான காரணிகளை அகற்றாமல், நவீனமயப்படுத்துவதால் என்ன பயன்? 2024-25 நிதியாண்டில், கணிசமான சிஎஸ்ஆர் நிதி ஒதுக்கீடு செய்த 2,020 பெரு நிறுவனங்களில் 397 நிறுவனங்கள் மட்டும்தான், இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு உதவியிருக்கின்றன. அவற்றின் மொத்த நிதி ஒதுக்கீடு என்பது ரூ.2,390 கோடி. அந்த நிதியாண்டின் மொத்த சிஎஸ்ஆர் பங்களிப்பில் அது வெறும் 12% தான்.

மகளிர், விவசாயிகள், கிராமப்புற மக்கள், குழந்தைகள் என்று பயனாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். பாசன வசதி, தனது விளைபொருளைச் சந்தைப்படுத்தும் உதவி அல்லது சந்தைக்கு எடுத்துச் செல்ல சாலை வசதி உள்ளிட்டவை விவசாயிகளின் தேவையாக இருக்கலாம். அப்படி இருக்கும்போது, நவீன விவசாயம் குறித்த கருத்தரங்குகளாலும், பயிற்சிப் பட்டறைகளாலும் அவர்களுக்கு எந்தப் பலனும் இருக்காது.

பள்ளியில் அறைகள் கட்டுவது, மருத்துவமனைகளில் புதிய வார்டுகள் அமைப்பது, பலரும் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்டவை விளம்பரத்துக்கு உதவலாம். ஆனால், அதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் நிலையில், சிஎஸ்ஆர் ஒதுக்கீடுகளின் அவசியம் இல்லை.

சிஎஸ்ஆர் நிதி ஒதுக்கீடுகள் தேவையற்றவை என்றோ, அவை எந்தவிதப் பலனும் அளிப்பதில்லை என்றோ கூற இயலாது. அதேநேரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகள், பங்குதாரர்களைத் திருப்திப்படுத்த விளம்பரத்தில் கவனம் செலுத்தாமல், தேவைகளைக் கண்டறிந்து அரசு செய்ய முடியாத உதவிகளை சிஎஸ்ஆர் நிதி ஒதுக்கீட்டில் நிறைவேற்ற முற்பட்டால், இந்தியாவின் வளர்ச்சி விரைவுபடும். ஆண்டொன்றுக்கு ரூ.40,794 கோடி என்பது சாதாரண முதலீடு அல்லவே...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து

உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்ய வேண்டும்.

திருக்குறள் (எண் 948) அதிகாரம்: மருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments