நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்!
நதிகள் தேசியமயமாக்கலும், கங்கை-காவிரி நதிநீர் இணைப்பும் காலத்தின் கட்டாயம்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோரின் தீவிர முயற்சியால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆங்கிலேயர் காலத்தில் இருந்தும் பல பத்தாண்டுகளாகவும் நீடித்துவரும் பல மாநிலங்களின் நதி நீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.
ஹரியாணாவில் இருந்து யமுனை ஆற்றின் நீரை வறண்ட மாநிலமான ராஜஸ்தானுக்கு பயன்படுத்துவது தொடர்பாக கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 32 ஆண்டுகளாக பெரிய அளவில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில்
ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
Advertisement
Advertisement
இதன்மூலம் ஆண்டுக்கு 580 எம்சிஎம் (மில்லியன் கியூபிக் மீட்டர்) நீர் ராஜஸ்தானுக்கு கிடைக்கும். இந்தத் திட்டம் நிறைவேறும்போது ராஜஸ்தானின் சீகர், சுரு, ஜுன்ஜுனு, ஹரியாணாவின் பிவானி, ஃபதேஹாபாத் ஆகிய மாவட்டங்களின் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர்ப் பிரச்னை தீரும். நர்மதை ஆற்றில் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு ஒப்புக்கொண்டு இந்தத் திட்டத்தால் பயன்பெறும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகியவற்றின் முதல்வர்களான பூபேந்திர படேல், பஜன்லால் சர்மா, தேவேந்திர ஃபட்னவீஸ், மோகன் யாதவ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி கையொப்பமிட்டனர். இந்தத் திட்டத்துக்கு எந்த மாநிலம் எவ்வளவு நிதி அளிக்க வேண்டும்?, கையகப்படுத்தும் நிலம், பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவை தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த 4 மாநிலங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.
சோன் ஆற்றின் நீர் தொடர்பாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த பிரச்னையும் தீர்க்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் பிகார் முதல்வர் சாம்ராட் செளதரி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கடந்த ஆக. 31-ஆம் தேதி கையொப்பமிட்டுள்ளனர். இதனால், பிகாரின் போஜ்பூர், பக்ஸர், ரோஹதாஸ், கைமூர், அர்வல், ஒüரங்கபாத், கயா, பாட்னா ஆகிய மாவட்டங்களும், ஜார்க்கண்டின் பலாமு, கர்வா மாவட்டங்களும் பயன்பெறும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கட்சிக் கூட்டணி ஹேமந்த் சோரன் தலைமையில் அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் 6 மாநிலங் களிடையே கிஷாவு அணைத் திட்டத்துக்கு கடந்த செப். 15-ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ. 15,624 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் உத்தர பிரதேசம், தில்லி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 97,000 ஹெக்டேர் பாசன வசதி பெறும். ஹிமாசலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சுக்கு முதல்வராக உள்ளார்.
மத்திய அரசு சார்பில் 31-ஆவது தென்மண்டல குழுக் கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் கடந்த ஆக. 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரம்மபுத்ரா, கங்கை, காவிரி மற்றும் கோதாவரி உள்ளிட்ட முக்கிய நதிகளை இணைப்பதன் மூலம் நாடு முழுவதும் நீர்த் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றும், தென் மாநிலங்களின் நீண்ட கால நதி நீர்ப் பங்கீட்டு பிரச்னைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண தொடர்புடைய மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன என்றும் பேசியிருந்தார்.
தமிழகத்துக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையேயான நதி நீர்ப் பிரச்னைகள் பல பத்தாண்டுகளாக நீடித்து வருகின்றன. காவிரி நதிநீர் பிரச்னை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. கர்நாடகத்துடன் காவிரி, பெண்ணையாறு, கேரளத்துடன் முல்லைப் பெரியாறு, சிறுவாணி, ஆந்திரத்துடன் பாலாறு உள்ளிட்டவை தீர்வுக்குக் காத்திருக்கின்றன. கோவை - திருப்பூர் மாவட்டங்களுக்கு மிகவும் பலன் அளிக்கும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இதற்குக் கேரள அரசுடன் பேச வேண்டும்.
எப்படி ஜார்க்கண்ட், ஹிமாசல் ஆகிய மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருந்தும்கூடத் தீர்வு காணப்பட்டதோ, அதுபோன்று கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுடனான தமிழகத்தின் நதி நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் ரீதியான மனமாச்சரியங்களையும், வாக்கு வங்கியையும் கருத்தில் கொண்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டாமல், இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டால் அடுத்துவரும் தலைமுறைகள் பெரும் பயன்பெறும். நதிகள் தேசியமயமாக்கலும், கங்கை-காவிரி நதிநீர் இணைப்பும் காலத்தின் கட்டாயம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.