எல்-நினோ எச்சரிக்கை!
எல்-நினோ தாக்கத்தால் தமிழகத்தில் 500–600 மி.மீ. வரை கூடுதல் மழை, நகரங்கள் மற்றும் ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
எல்-நினோ தாக்கம் குறித்து ஆராய்ந்துவரும் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டுள்ள ஐரோப்பிய மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மையம், கடந்த ஆகஸ்டில் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் அதன் அண்டை மண்டலங்களில் வழக்கத்தைவிட கூடுதலாக 50 முதல் 200 மி.மீ. வரை மழை பெய்யலாம் என்று எச்சரித்துள்ளது.
எல்-நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வட மாநிலங்களில் சுமார் 15 % பற்றாக்குறையுடன் விடைபெற்று வரும் நிலையில், தென் மாநிலங்களில் வட கிழக்குப் பருவ மழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என ஆய்வு மையங்களும், நிபுணர் குழுக்களும் எச்சரித்துள்ளன.
எல்-நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆராய்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைக்க தமிழக அரசால் கடந்த ஜூலையில் அமைக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சென்னை மண்டல ஆய்வு மையத் தலைவர் முனைவர் சிவானந்த பை தலைமையிலான 7 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் அண்மையில் முதல்வரிடம் முதல்கட்ட அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர்.
Advertisement
Advertisement
அதில், வட கிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் மாநிலத்தில் அதிகமான மழை பெய்யலாம். நகர்ப்புறங்களில் வெள்ள பாதிப்பு மற்றும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என்பதால், அதற்கேற்ப அரசு முன்னேற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. கூடுதல் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் கோவை, திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, சிவகங்கை, தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் நடத்தியுள்ளார்.
இவற்றில் சில நிலச்சரிவு ஆபத்து உள்ள பகுதிகளைக் கொண்ட மாவட்டங்கள் ஆகும். தமிழ்நாட்டில் இயல்பான மழை அளவான 430 மி.மீ.-யை விட கூடுதலாக சுமார் 500 முதல் 600 மி.மீ. அளவுக்கு மழை பெய்யலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் கணித்துள்ளார். வானிலை கணிப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அரசு நிறுவனங்களுக்கு இணையாக தனியாரின் துல்லியமான கணிப்புகள் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி வருவதால், அதைப் புறந்தள்ள முடியாது. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மேக வெடிப்புடன் கூடிய அதிகமான மழை பெய்து நகர்ப்புறங்கள், ஆறுகள் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளதைக் கவனத்தில் கொண்டு அவற்றை எதிர்கொள்ள அரசு தயாராக வேண்டும்.
அதிகரித்த கூடுதல் மழைப் பொழிவு மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் சமச்சீராக இருக்காது. சில பகுதிகளில் இயல்பைவிடக் குறைவாகவும் பெய்யக் கூடும். அந்தப் பகுதிகளில் அணைகளுக்கு நீர்வரத்து குறைவு, இதர நீர்நிலைகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை, வறட்சி போன்றவை ஏற்படலாம். அந்தப் பகுதிகளில் பொது சுகாதாரம், விவசாயம், குடிநீர் விநியோகம், கால்நடைகள், மீன்வளம் போன்றவை பாதிக்கப்படலாம். தமிழ்நாட்டில் பருவமழைக் காலங்களில் நகர்ப்புறங்களில் வெள்ள பாதிப்பு என்பது புதிதல்ல. கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகும் அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
கடந்த 2021-இல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. திருப்புகழ் குழு, கடந்த 2023-இல் அளித்த இறுதி அறிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. அந்தக் குழு அளித்திருந்த 161 பரிந்துரைகளில், 101 நிறைவேற்றப்பட்டுள்ளதாக கடந்த ஆட்சிக் காலத்தில் தெரிவிக்கப்பட்டது.
அது என்ன பரிந்துரை?, எதை நிறைவேற்றினார்கள்? என்பது இதுவரையில் மர்மமாகவே உள்ளது.வெள்ள பாதிப்பு தலைநகரில் மட்டுமல்லாது, மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் உண்டு என்றாலும், அவை சில நேரங்களில் அரசின் கவனம் பெறாமலேயே போய் விடுகின்றன. மழைநீர் செல்லும் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாதது, நீர்வழித் தடங்களில் ஆக்கிரமிப்பு, கழிவுகளைக் கொட்டுதல், கட்டுமானங்கள், ஏரி, குளங்களில் வசிப்பிடங்கள் எனப் பல்வேறு வகையான சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அரசுத் துறைகள் விதிமுறைகளை முறையாக அமல்படுத்தாததே இதற்குக் காரணம்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பு, நடுத்தர காலம் -(2027 கோடைகாலத்துக்கு முன்), அடுத்த 3-5 ஆண்டுகளுக்குள் என 3 செயலாக்க காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை சிவானந்த பை குழு பட்டியலிட்டுள்ளது. அதன்படி, முக்கிய ஆறுகள், கால்வாய்கள், நீர்வழிகள், வெளியேற்ற வாயில்கள், குளங்கள், மதகுகள், வெள்ளத் தடுப்புகள், அணைகள் மற்றும் கரைக்கட்டுகளில் அவசரகால சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியம்.
இவற்றையெல்லாம் ஆண்டுதோறும் செய்துவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கக்கூடும். அப்படியானால் பிரச்னைகள் ஏன் தொடர்கின்றன? என்பதற்கு அவர்கள்தான் விளக்கம் தர வேண்டும். நிகழாண்டு வழக்கமான பருவமழை காலமாக இருக்காது என்ற எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு அரசு காலம் தாழ்த்தாமல் அக்கறையுடன் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பாதிப்புகளைத் தடுக்க முடியும்.
*******
திருக்குறள் (எண் 662) அதிகாரம்: வினைத்திட்பம்
ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்.
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல்; வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.