முகப்பு
தமிழ்நாடு

சமையல் சிலிண்டருக்காக மக்களை காக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின்

சமையல் சிலிண்டருக்காக மக்களை காக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 3:18 PM
முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

சமையல் சிலிண்டருக்காக மக்களை காக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் மேற்கொண்ட பிரசாரத்தில், கரோனா காலத்தில் தட்டை தட்டுங்கள், மணியை ஆட்டுங்கள் என்று ஆக்சிஜன் சிலிண்டருக்கு வரிசையில் காத்துக்கிடக்க விட்டார்கள். இப்போது மக்கள் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சமையல் சிலிண்டருக்காக காக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி! இன்றைக்கு நாட்டு மக்கள் முழுவதும் ஒரே குரலில் என்ன கேட்கிறார்கள் என்றால், “மோடிஜி, வேர் ஈஸ் எல்.பி.ஜி”என்று கேட்கிறார்கள். இதற்கு பிரதமரிடம் பதில் இருக்கிறதா? இந்த இலட்சணத்தில் தொடர்ந்து, சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை, டோல்கேட் கட்டணம் என்று உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படும் ஓட்டல்களுக்கும், அதனால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் குடும்பங்களுக்கும் பிரதமர் என்ன பதில் சொல்லப் போகிறார்? தேர்தல் காலத்திலேயே இப்படி விலையை உயர்த்துகிறார்கள் என்றால் தேர்தல் முடிந்ததும் எப்படி உயர்த்துவார்கள்? அதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க தொடைநடுங்கி பழனிசாமிக்கு தெம்பு இருக்கிறதா? இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டுமா?

இன்னொரு முக்கியமான பிரசனை. நீங்கள் பத்திரிகையில் படித்திருப்பீர்கள்? நேற்று CBSE பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பில் இருந்து மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்று காலையில் அதற்கு என்னுடைய விரிவான கண்டனத்தை நான் பதிவிட்டிருக்கிறேன். கடிதமும் அனுப்பி வைத்திருக்கிறேன்.

Advertisement

நாம் அமைதியாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிக்க ஏதாவது செய்து, தமிழ்நாட்டில் தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்ளும் வேலையை பா.ஜ.க. அரசு சிறப்பாக செய்கிறார்கள்.

அதில் இப்போது, லேட்டஸ்ட் நியூஸ் என்ன தெரியுமா?

அதற்கு, ஒன்றிய கல்வி அமைச்சர் மிஸ்டர் தர்மேந்திர பிரதான், நான் போட்ட செய்திக்கு (ட்வீட்) என்ன ரியாக்ட் செய்திருக்கிறார் தெரியுமா? "தமிழ்நாட்டில் கல்வித் தரம் வளர விடாமல் நாம் தடுக்கிறோம்" என்று பேசியிருக்கிறார். நான் கேட்கிறேன், இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்வதற்கும் - கல்வித் தரத்துக்கும் என்ன சம்பந்தம்?

அதுமட்டுமல்ல, ஏற்கெனவே இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் என்று நமக்கான கல்வி நிதியை இன்று வரை விடுவிக்காமல் இருப்பவர்தான் இந்த தர்மேந்திர பிரதான்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை எனும் இந்திக் கொள்கையை உள்ளே விடவில்லை என்ற காரணத்திற்காகவே, "தமிழர்களை நாகரிகம் இல்லாதவர்கள்" என நாவடக்கம் இல்லாமல் நாடாளுமன்றத்தில் பேசி, அதற்குப் பிறகு மன்னிப்பு கேட்டவர்தான் இந்த பிரதான்.

நான் அவருக்கும் - பிரதமர் மோடிக்கும் - அமித் ஷாவுக்கும், ஒரு 'ஓப்பன் சேலஞ்ச்' செய்கிறேன். தமிழ்நாட்டுக்கு நீங்கள் பிரசாரத்துக்கு வரும்போது, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி, பிரசாரம் செய்யும் தைரியம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா? வாருங்கள், வந்து பேசுங்கள் பார்க்கலாம்.

இருமொழிக் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்று பேசுகிறீர்களே... மும்மொழிக் கொள்கை தொடர்பான அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்தை கண்டித்து, உங்களால் அதை திரும்பப் பெற வைக்க முடியுமா? சவால் விடுகிறேன்… அவர் உங்கள் கூட்டணிதானே? முடியுமா? சொல்லுங்கள்.

"இந்தியைக் கட்டாயமாக திணிக்கும் PM-SHRI பள்ளியை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்காமல் தி.மு.க. அரசு தடுக்கிறது" என்று வேறு அமைச்சர் பிரதான் குற்றம் சாட்டியிருக்கிறார். இப்படி சொன்னால் தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கான ஆதரவு இன்னும் அதிகரிக்குமே தவிர, குறையாது! நீங்கள் இன்னும் இதையே புரிந்து கொள்ளாமல் இருக்கும் காரணத்தினால்தான், இப்போது வரை நோட்டாவுடன் போட்டா போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.

இந்தியாவிலேயே அதிக பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

மாவட்டம்தோறும் மாதிரிப் பள்ளிகள் திறந்திருக்கிறோம்.

19 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குகிறோம்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்திருக்கிறோம்.

இப்படிபட்ட தமிழ்நாட்டிலேயா கல்வித்தரம் சரியில்லை? எங்கே வந்து என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நான், தமிழ்நாடு அணி வெர்சஸ் தில்லி அணி என்று சொல்லும்போதெல்லாம், "ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்?" என்று பழனிசாமி கேட்பாரே… இப்போது புரிகிறதா? நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்று. பழனிசாமி போன்றவர்களை விட்டால் தமிழ்நாட்டை தில்லிதான் ஆட்சி செய்யும். நாம் என்ன மொழி படிக்க வேண்டும், எத்தனை மொழி படிக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று, நாம் முடிவு செய்ய முடியாது. தில்லியில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோலை அழுத்தி, அதற்கு ஏற்றவாறு இங்கு அ.தி.முக.வை ஆப்பரேட் செய்வார்கள். ரிமோட்டில் அங்கு ஆபரேட் செய்தால், இங்கு பழனிசாமி ஆடுவார். இப்படிப்பட்ட சீரழிவை ஏற்கெனவே 4 ஆண்டு காலமாக பழனிசாமி பேரில் நடந்த பா.ஜ.க.வின் பிராக்சி ஆட்சியில் தமிழ்நாடு பார்த்துவிட்டது. இனி, அப்படி நடக்க விடவேமாட்டோம்!

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் பா.ஜ.க.வையும், அதற்கு அடிமை சேவகம் செய்யும் அ.தி.முக. உள்ளிட்ட கட்சிகளையும், வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்!

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வெற்றிக்காக! பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் முன்னால், நம்முடைய திராவிட மாடலின் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது! நம்முடைய ஸ்பீடு என்னவென்று காட்டிவிடலாமா? வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? தில்லி அணியா? ஒரு கை பாத்துவிடலாமா? நடக்க இருக்கும் இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அதை உணர்ந்து, அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, எல்லோரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்! இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

Chief Minister Stalin has stated that Prime Minister Modi has kept the people waiting for cooking gas cylinders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments