14.8.1976: தேர்தல் சட்ட திருத்த மசோதா தாக்கல் - சில மாநில சட்டசபை இடங்களும் அதிகரிப்பு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
பது டில்லி. ஆக. 13 - மக்கள் பிரதிநிதித்வ சட்டத்தை திருத்தும் மசோதா இன்று லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
பார்லிமெண்ட், மாநில சட்டமன்ற தொகுதிகளை நிர்ணயிப்பது சம்பந்தமாக புதிய ஒட்டுமொத்த உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பிக்க அது வகை செய்கிறது.
இடங்கள் எண்ணிக்கை, தொகுதி நிர்ணய உத்தரவுகள் ஆகியவற்றை இந்தத் தேதிக்கு புதுப்பிக்க திருத்த மசோதா வகை செய்கிறது. அதை துணை சட்ட மந்திரி சையது முகம்மது தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
தொகுதி நிர்ணய உத்தரவுகளை எல்லாம் ஒட்டுமொத்தமான உத்தரவாக வெளியிட தேர்தல் கமிஷனுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.
1972 தொகுதி நிர்ணய சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தொகுதி நிர்ணயக் கமிஷன் யூனியன் பகுதியான அருணாசல பிரதேசம் நீங்கலாக மற்ற எல்லா மாநில, யூனியன் பிரதேச பார்லிமெண்ட், மாநில சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை, அளவு ஆகியவற்றை இறுதியாக நிர்ணயிக்கும் பணியைப் பூர்த்தி செய்துள்ளது என்று மசோதாவின் நோக்கங்கள், காரணங்கள் அறிக்கை கூறியது.
புதிய லோக்சபையில் இடங்கள் 522- லிருந்து 542 ஆக உயரும். மத்தியப் பிரதேசத்துக்கும், மகாராஷ்டிரத்துக்கும் தலா 3 இடங்கள் அதிகரிக்கும். ராஜஸ்தான், மேற்கு வங்காளம், குஜராத்துக்குக் கூடுதலாக இரண்டு இடங்கள் கிடைக்கும். ஆந்திரா, பீகார், ஹரியானா, கர்நாடகம், கேரளா, ஒரிஸ்ஸா, அருணாசலப் பிரதேசத்த க்கு தலா ஒரு இடம் கூடுதலாகும். சிக்கிமுக்கும் லோக்சபையில் ஒரு இடம் கிடைக்கும்.
மாநில சட்டமன்றங்களின் அங்கத்தினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆந்திராவுக்கு மேலும் 7 இடங்களும், அஸ்ஸாமுக்கு 12-ம், பீகாருக்கு 6-ம், குஜராத்துக்கு 14-ம், ஹரியானாவுக்கு 9-ம், கர்நாடகத்துக்கும் கேரளாவுக்கும் 7-ம், மத்யப் பிரதேசத்துக்கு 24-ம், மகாராஷ்டிரத்துக்கு 18-ம் நாகாலந்துக்கு 8-ம், ஒரிஸ்ஸாவுக்கு 7-ம், பஞ்சாபுக்கு 13-ம், ராஜஸ்தானுக்கு 16-ம், மேற்கு வங்காளத்துக்கு 14-ம், அதிகரிக்கும். சிக்கிம் சட்டமன்றத்தில் 32 இடங்கள் இருக்கும்.
தமிழ் நாட்டிற்கு மேலும் 500 கோடி கன அடி நீர் விட கர்நாடகம் இசைவு
சென்னை, ஆக, 13- தமிழ் நாட்டில் காவிரி வடி நிலத்தில் சாகுபடி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக அடுத்த இரண்டு தினங்களில் கபினியிலிருந்து மேற்கொண்டு 5 கோடி கன அடி நீரை விடுவிக்க கர்நாடக மாநிலம் இன்று (வெள்ளிக்கிழமை யன்று) ஒப்புக்கொண்டது என்று ஒரு அரசாங்க அதிகாரி கூறினார்.
"ஆகஸ்ட் 2-ந் தேதியன்று 5 கோடி கன அடி நீர் விட ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 5-ந் தேதியன்று கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸ்ஸும், தமிழ்நாடு கவர்னரின் ஆலோசகர் ஆர்.வி. சுப்பிரமணியனும் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து மேலும் 500 கோடி கனஅடி நீர் விட ஒப்புக் கொள்ளப்பட்டது. இப்போது மேற்கொண்டு 500 கோடி கன அடி நீரை விட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது" என்று அந்த அதிகாரி கூறினார்.
14.8.1976: Election Law Amendment Bill introduced – number of seats in some State Legislative Assemblies also increased.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.