2.9.1976: அரசியல் சட்ட மாறுதல்கள் தாக்கல் - லோகசபைகள், சட்டசபைகள் ஆயுட் காலம் 6 ஆண்டுகளாகும்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
புது டில்லி, செப். 1 - லோகசபை, மாநிலங்களின் சட்டசபைகள் ஆகியவற்றின் வாலாயமான பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்; இப்போதைய அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இப்பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளாக நீடிப்பதற்கு வகை செய்யப்படுகிறது.
இப்போதைய லோகசபை, மாநிலங்கள் சட்ட சபைகள் ஆயுட் காலமும் ஆறு ஆண்டுகளாக நீடிக்கப்படும். இன்று சட்ட மந்திரி எச். ஆர். கோகலே தாக்கல் செய்த 44-வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவில் இது ஓர் அம்சமாகும்.
இந்தியக் குடியரசின் 27வது ஆண்டில் நிறைவேற்றப்படும் 44-வது இந்திய அரசியல் சாஸனத் திருத்த மசோதா மத்திய அரசாங்கம் கெஜட் மூலம் அறிவிக்கும் தேதியில் அமலுக்குவரும். இந்தச் சட்டத்தின் பல்வேறு ஷரத்துக்களுக்கு பல்வேறு அமல் தேதிகள் நிர்ணயிக்கப்படலாம்.
Advertisement
Advertisement
ராஷ்டிரபதி, யூனியன் மந்திரி சபையின் ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டுமென்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய விரோதக் கட்சிகளுக்குத் தடை
தேசிய விரோதக் கட்சிகள் தடை செய்யப்படும்; தேசிய விரோதச் செயல்கள் இன்னின்ன வென்பதற்கும் தெளிவான இலக்கணங்கள் வகுக்கப்படுகின்றன.
கணக்குகள் பராமரிப்புக்குப் புது ஏற்பாடு
யூனியன் அரசாங்கக் கணக்குகளையும், மாநிலங்களின் அரசுகள் கணக்குகளையும் பராமரிப்பதற்கான அமைப்பை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கம்ட்ரோலர் - ஆடிட்டர் - ஜெனரலிடமிருந்து ராஷ்டிரபதி மேற்கொள்வார்.
அவசரகால சட்டங்கள் நீடிப்பு
ராஷ்டிரபதி, பார்லிமெண்டு, மாநில சட்ட சபைகளினால் அதிகாரமளிக்கப்பட்டவர்கள் இயற்றிய அவசரக் காலச் சட்டங்கள் தகுதி வாய்ந்த சட்டசபையோ அல்லது அதிகாரிகளோ ரத்து செய்தாலொழிய அல்லது மாற்றினாலொழிய காலவரம்பின்றி நீடிக்கும்.
அவசர காலத்தை ஓராண்டு நீடிக்கலாம்
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதிலிருந்து ஓராண்டுக்கு அமலில் இருக்கும். அதற்கு மேல் இப்போது ஆறு மாதத்திற்கு நீடிக்கலா மென்றிருக்கிறது. இனி ஓராண்டுக் காலத்துக்கு சேர்ந்தாற் போல் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
தற்காப்பு, தேச தொண்டு குடிமகன் கடமை
பிரஜைகளுக்கு பத்து அம்ச அடிப்படைக் கடமைகள் விதிக்கப்படும்; அதில் நாட்டுத் தற்காப்பும், தேசியத் தொண்டும் ஓரம்சமாகும்.
புது வழிகாட்டி கோட்பாடுகள்
இலவச சட்ட உதவி, தொழில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு பற்றுதல், சூழ்நிலை, வனவிலங்கு பராமரிப்பு, சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் குழந்தைகள் வளம் பெறுவதற்கான வாய்ப்புகள், புது அரசாங்கக் கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகள் ஆக்கப்பட்டுள்ளன.
சோஷலிஸ்டு மதச் சார்பில்லா ஜனநாயக குடியரசு
இந்தியா, ஆதிபத்திய உரிமை படைத்த சோஷலிஸ்டு மதச் சார்பில்லா ஜனநாயகக் குடியரசு எனப் பிரகடனம் செய்யப்படும். ...
September 2, 1976: Constitutional amendments tabled – term of Lok Sabha and Legislative Assemblies to be six years.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.