FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஏழு பேர் விடுதலை விவகாரம்: மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை?

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பான விவரங்களைத் தனது மாதாந்திர அறிக்கை வாயிலாக மத்திய அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பான விவரங்களைத் தனது மாதாந்திர அறிக்கை வாயிலாக மத்திய அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக அவ்வப்போது மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்புவது வழக்கம். அதன் அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக அண்மையில் தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு குறித்து ஆளுநர் தனது வழக்கமான அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி முடிவெடுத்தது. இந்த முடிவு குறித்த விவரங்கள் ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட்டன. அதேசமயம், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ராஜகோபால் தில்லி சென்றிருந்தார். அப்போதே அவர் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சக அதிகாரிகளுடன், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆலோசித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மாதந்தோறும் அளிக்கப்படும் அறிக்கை விவரத்திலும் அந்த ஏழு பேர் விடுதலை தொடர்பான தகவலும் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த அறிக்கை ரகசியமானது என்பதால் அதன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதில்லை. ஆனால், மாநிலத்தின் முக்கிய விஷயங்கள் அதில் இடம்பெற்றிருக்கும் என்பதன் அடிப்படையில் ஏழு பேரின் விடுதலை தொடர்பான விஷயமும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காத்திருக்கும் தமிழக அரசு: ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்காக காத்திருப்பது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நிருபர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ஏழு பேரின் விடுதலை விஷயத்தில் ஆளுநரை எந்த வகையிலும் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தார். எனவே, இந்த விஷயத்தில் ஆளுநர் எடுக்கப் போகும் முடிவுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.ஐ. தொடர்பான வழக்கு: மாநில புலனாய்வுப் பிரிவினர் விசாரித்த வழக்கு என்றால் அதில் எந்த கருத்துகளையும் கேட்காமல் குற்றவாளிகளை ஆளுநர் விடுவிக்க வாய்ப்புள்ளது. ஆனால், ராஜீவ் கொலை தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐ. விசாரித்த வழக்காகும். ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 161-ஆவது பிரிவின்கீழ் விடுவிக்க முயற்சித்தாலும் அதில் சி.பி.ஐ., உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருக்க வேண்டியது அவசியம்.
எனவே, இந்தப் பிரச்னையில் உள்ள சட்ட நுணுக்கங்கள், சட்டச் சிக்கல்கள் உள்ளிட்ட அம்சங்களை முழுமையான முறையில் ஆராய்ந்த பிறகே ஏழு பேரின் விடுதலை தொடர்பான முடிவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments