முகப்பு
இந்தியா

ராகுல் உரையின்போது மக்களவையில் பிரதமர் இல்லை

மணிப்பூரில் நடந்த கொடூர சம்பவங்கள், இந்தியாவைக் கொன்றுவிட்டதற்கு சமம் என்று மக்களவையில் ராகுல் உரையாற்றிய போது, அவையில் பிரதமர் மோடி இல்லை.

Updated On : 9 ஆகஸ்ட், 2023 at 1:33 PM
மக்களவையில் ராகுல் காந்தி உரை
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:37 PM


புது தில்லி: மணிப்பூரில் நடந்த கொடூர சம்பவங்கள், இந்தியாவைக் கொன்றுவிட்டதற்கு சமம் என்று மக்களவையில் ராகுல் உரையாற்றிய போது, அவையில் பிரதமர் மோடி இல்லை.

முதலில் மணிப்பூர், பிறகு ஹரியானா என ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஒட்டுமொத்த நாட்டையும் வெறுப்புத் தீயில் எரிக்கப்பார்க்கிறது. நீங்கள் பாதுகாவலர்கள் இல்லை. கொலைகாரர்கள் என மிகக் காட்டமாக ராகுல் கூறினார்.

இந்த உரையின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவையில் இல்லை.

Advertisement

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார்.

உரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, அதானி குறித்த பேச்சு பாஜகவினரை எரிச்சலூட்டியிருக்கிறது. ஆனால், இன்று அதானி பற்றி பேசப்போவதில்லை. எனவே, எனது பாஜக நண்பர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கியதுமே தொழிலதிபர் அதானியின் பெயரைக் குறிப்பிட்டதற்கு பாஜகவினர் முழக்கமிட்டனர். பாஜகவினரின் முழக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதனால் சற்று நேரம் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையே உரையைத் தொடர்ந்த ராகுல், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்குவதற்கு முதலில் நான் அச்சப்பட்டேன். ஆனால், இந்த நடைப்பயணத்தின்போது பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். இந்திய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை நடைப்பயணம் கொடுத்தது. குமரி முதல் இமயம் வரையிலான எனது ஒற்றுமை நடைப்பயணம் நிறைவுபெறவில்லை. மீண்டும் தொடங்கும் என்றார்.

பாஜக ஆட்சி நடக்கும் கடந்த 10 ஆண்டுகளாக நான் அவதூறுக்கும் சிறுமைப்படுத்துதலுக்கும் ஆளாகி வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் நான் சிறைக்குச் செல்லத் தயார் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரை இரண்டாக உடைத்துவிட்டார். மத்திய அரசின் செயல்பாடுகளால் இன்று மணிப்பூர் பிளவுபட்டுவிட்டது. இன்று வரை பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை? ஏனென்றால், இந்திய நாட்டின் ஒரு பகுதியாக அவர் மணிப்பூரைக் கருதவில்லை என்பதே. மணிப்பூரை கைவிட்டுவிட்டார் பிரதமர். மணிப்பூருக்கு நானே சென்றேன். ஏன் பிரதமர் மோடி இன்னும் செல்லவில்லை. இலங்கை மன்னன் ராவணன் கூட மக்கள் பேச்சைக் கேட்டார். ஆனால் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட பிரதமர் மோடி பேசவில்லை. இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். மணிப்பூரில் நடந்த கொடூர சம்பவங்கள் அனைத்தும் இந்தியாவைக் கொன்றுவிட்டதற்கு சமம் என்று உணர்ச்சிப்பூர்வமாக ராகுல் காந்தி உரையாற்றினார்.

ராகுல் காந்தி உரைக்கு, மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து அவையில் பேசினார். இதற்கு திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதற்கு மத்தியில் ராகுல் தனது உரையை தொடர்ந்து வருகிறார்.

இதற்கிடையே, ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால், தொடர்ந்து உரையாற்றி வரும் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான் குற்றச்சாட்டுகளை மிக ஆவேசமாக முன்வைத்து வருகிறார்.

ஆனால், ராகுல் காந்தி உரையாற்றும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மக்களவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.