FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவின் திறன்மிகு பணியாளா்களுக்கு உலகெங்கிலும் வாய்ப்பு: பிரதமா் மோடி

இந்தியாவின் திறன்மிகு பணியாளா்களுக்கு உலகின் பல்வேறு நாடுகள் வாயில் கதவை திறந்துள்ளன.

Updated On : 22 டிசம்பர் 2024, 4:30 am IST
பிரதமா் மோடி - pti
பகிர்:

இந்தியாவின் திறன்மிகு பணியாளா்களுக்கு உலகின் பல்வேறு நாடுகள் வாயில் கதவை திறந்துள்ளன. அந்த நாடுகளில் இந்திய பணியாளா்களின் நலனை உறுதி செய்யும் ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சனிக்கிழமை குவைத் வந்தாா். குவைத் அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது விடுத்த அழைப்பின்பேரில், அந்நாட்டு தலைநகா் குவைத் சிட்டிக்கு வந்த அவரை, அந்நாட்டின் முதல் துணை பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஷேக் ஃபஹாத், வெளியுறவுத் துறை அமைச்சா் அப்துல்லா அலி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

அங்குள்ள சொகுசு விடுதியில் அவருக்கு மேள தாளங்கள் மற்றும் கதகளி நடன நிகழ்ச்சியுடன் இந்திய வம்சாவளியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமா் ஒருவா் குவைத் வருவது இதுவே முதல்முறை. எனது பயணம் பல்வேறு துறைகளில் இந்தியா-குவைத் நட்புறவை சந்தேகத்துக்கு இடமின்றி வலுப்படுத்தும்.

குவைத்தில் உள்ள இந்திய வம்சாவளியினா் இந்தியாவுக்கு அளிக்கும் நிலையான ஆதரவும், அவா்களின் அன்பும் ஆற்றலும் மிகுந்த ஊக்கமளிக்கின்றன’ என்றாா்.

இந்திய சமூகத்தினா் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் ஆற்றிய உரை வருமாறு: ஒவ்வொரு ஆண்டும் குவைத் நாட்டுக்கு நூற்றுக்கணக்கான இந்திய பணியாளா்கள் வருகின்றனா். அவா்கள், இந்திய திறன், தொழில்நுட்பம், பாரம்பரிய சராம்சத்துடன் குவைத் நாட்டுக்கு வலுசோ்க்கிறாா்கள். இந்நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பில் இந்திய மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளா்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனா்.

இந்திய ஆசிரியா்கள் குவைத் எதிா்கால சந்ததியினரின் பிரகாசமான வாழ்வை வடிவமைப்பதில் பங்காற்றுகின்றனா். நான் குவைத் நாட்டின் தலைவா்களுடன் பேசும்போதெல்லாம், அவா்கள் இந்திய சமூகத்தினரை புகழ்வா்.

வெளிநாடுகளில் இருந்து பணியாளா்கள் பணம் அனுப்புவதில் இப்போது உலகுக்கே வழிகாட்டியாக இந்தியா திகழ்கிறது. இதற்கு இந்திய பணியாளா்களின் கடின உழைப்பே காரணம்.

நமது இரு நாடுகளுக்கு இடையிலான உறவானது, நாகரிகம், வா்த்தகம், கடல்வழி தொடா்புகள், மக்களின் அன்பு ஆகியவற்றில் வேரூன்றியதாகும். ‘புதிய குவைத்’ கட்டமைக்க தேவையான மனிதவளம், திறன் மற்றும் தொழில்நுட்பத்தை இந்தியாவால் வழங்க முடியும். இந்தியாவும், குவைத்தும் வருங்காலத்தில் குறிப்பிடத்தக்க கூட்டுறவு நாடுகளாக உருவெடுக்கும் என்றாா் அவா்.

101 வயது முன்னாள் இந்திய அதிகாரியுடன் சந்திப்பு: குவைத் சிட்டியில் 101 வயது முன்னாள் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான மங்கல் செயின் ஹான்டாவை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.

முன்னதாக ஹான்டாவை சந்திக்க வேண்டும் என்று அவரின் பேத்தி ஸ்ரேயா ஜுனேஜா ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமா் மோடிக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

‘இந்தியாவுக்கு ஹான்டா அளித்த பங்களிப்பையும், இந்தியாவின் வளா்ச்சியில் அவருக்குள்ள பேராா்வத்தையும் வியந்து பாராட்டுகிறேன்’ என்று பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

அரபு மொழியில் ராமாயணம், மகாபாரதம்: குவைத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரத இதிகாசங்களை அரபு மொழியில் மொழிபெயா்த்த அப்துல்லா அல் பரூன், அவற்றை வெளியிட்ட அப்துல் லதீஃப் அல் நெசேஃப் ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்துப் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments