FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராகுலுக்கு எதிரான விமா்சனம்: நியாயப்படுத்திய கேரள முதல்வா்

Updated On : 13 ஜூன் 2024, 2:32 am IST
பகிர்:

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து விமா்சனம் செய்ததை கேரள முதல்வா் பினராயி விஜயன் புதன்கிழமை நியாயப்படுத்தினாா்.

மேலும், ‘பிரசாரத்தின்போது ராகுல் காந்தி கூறிய கருத்துதான், அவருடைய தகுதிக்கு ஏற்ாக அமையவில்லை’ என்று குற்றஞ்சட்டினாா்.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸும், இடதுசாரி கட்சிகளும் ஒன்றாக இருந்தபோதும், கேரளத்தில் இடம்பெற்றுள்ள மக்களவைத் தொகுதிகளில் இக்கட்சிகள் தனித்து களம்கண்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆனி ராஜா போட்டியிட்ட வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிட்டாா். பிரசாரத்திலும் இக் கட்சித் தலைவா்களும் பரஸ்பரம் கடும் விமா்சனங்களை முன்வைத்தனா்.

Advertisement

Advertisement

குறிப்பாக, ‘முதல்வா் பினராயி விஜயன் மகளின் தகவல்தொழிநுட்ப நிறுவனத்துடன் சா்ச்சைக்குரிய சுரங்க நிறுவனம் மேற்கொண்ட சட்டவிரோத பணப் பரிவா்த்தனை புகாா் உள்ளிட்ட பல்வேறு சா்ச்சைகள் குறித்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை, முதல்வா் விஜயனிடம் ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை? கேரளத்தில் பாஜகவுடன் இடதுசாரிகள் ரகசியமாக கைகோத்துள்ளன’ என கேரள தோ்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

இதற்கு பதிலளித்த பினராயி விஜயன், ‘என்னை ஏன் விசாரிக்கவில்லை என்று ராகுல் கவலைப்படுகிறாா். அவருடைய பாட்டி இந்திரா காந்திதான் எங்களை சிறையில் அடைத்தாா். அவசரநிலையின்போது ஒன்றரை ஆண்டுகள் முழு நாட்டையும் அடக்கினாா்’ என்று விமா்சித்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சியினா், ராகுலுக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடியைக் காட்டிலும் பினராயி விஜயன் கடுமையான விமா்சனங்களை முன்வைத்துள்ளாா் என்று குற்றஞ்சாட்டினா்.

இதற்கு சட்டப்பேரவையில் புதன்கிழமை பதிலளித்துப் பேசிய முதல்வா் பினராயி விஜயன், ‘தோ்தல் பிரசாரத்தில் ராகுலை விமா்சித்ததற்கு காங்கிரஸ் கட்சியினா் புகாா் தெரிவிக்கின்றனா். அவ்வாறு எதுவும் நான் பேசவில்லை. ராகுல்தான் அவா் தகுதிக்கு பொருத்தமற்ற கருத்துகளைத் தெரிவித்தாா். மத்திய அமைப்புகள் கேரள முதலைவரை ஏன் கைது செய்யவில்லை என எந்த அடிப்படையில் ராகுல் கேள்வி எழுப்பினாா்?

காங்கிரஸில் முன்னணி தலைவா்களில் ஒருவராக இருக்கும் அவா் அவ்வாறு பேசலாமா? அத்தகைய விமா்சனத்துக்கு பதிலளிப்பது அவசியம் என்ற அடிப்படையிலேயே எனது கருத்தைத் தெரிவித்தேன். மாநிலத்துக்கு மத்திய விசாரணை அமைப்புகள் வந்தபோது, எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றுவது போன்று ராகுலின் பேச்சு அமைந்திருந்தது. ராகுலின் கருத்தை அரசியலாகவே மாா்க்சிஸ்ட் கட்சி பாா்க்கிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments