காத்திருக்கிறோம்.. துணைத் தலைவர் பதவி கொடுத்தால் வாபஸ்: காங்கிரஸ்
எதிர்க்கட்சியினரை பாஜகவினர் மதிக்க வேண்டும்.
மக்களவைத் துணைத் தலைவர் பதவி கொடுத்தால் மக்களவைத் தலைவருக்கு தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதன்மூலம் நாட்டில் முதல்முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதுவரை மக்களவைத் தலைவர் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்ததே வரலாறு.
Advertisement
Advertisement
இந்நிலையில், தற்போதும் மக்களவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், மக்களவையின் மரபை தொடர எதிர்க்கட்சி வேட்புமனுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளுங்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த கே.சி.வேணுகோபால் பேசியதாவது:
“நாங்கள் தற்போதும் காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் துணைத் தலைவர் பதவியை கொடுக்க தயாராக இருந்தால், நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்களவைத் தலைவர் வேட்பாளரை ஒருமனதாக ஆதரிப்போம்.
எதிர்க்கட்சியினரை அவர்கள் மதிக்க வேண்டும். கடந்த காலங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மக்களவைத் தலைவராகவும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் துணைத் தலைவராகவும் இருந்துள்ளனர். நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது 10 ஆண்டுகள் பாஜகவினர் தான் துணைத் தலைவராக இருந்தனர்.
ராஜ்நாத் சிங் நேற்று மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு ஆதரவு கோரிய போது, பாஜக தரப்பு மக்களவைத் தலைவரை ஆதரிப்பதில் மகிழ்ச்சி என்றும், துணைத் தலைவர் பதவி எங்களுக்கு வேண்டுமென்றும் கேட்டிருந்தார். அதற்கு பிரமரிடம் பேசிவிட்டு மீண்டும் அழைப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.