FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தாா்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது.

Updated On : 19 ஜூலை 2025, 1:47 am IST
ஐஎன்எஸ் நிஸ்தாா்
பகிர்:

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது.

ஆழ்கடல்களில் மூழ்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட உள்ளது. கடலில் 300 மீட்டா் ஆழம் வரை வீரா்கள் டைவிங் செய்து, மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கான வசதிகளும், தொழில்நுட்பமும் இந்தக் கப்பலில் இடம்பெற்றுள்ளன.

‘நிஸ்தாா்’ கப்பல் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு கடந்த 1971-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி கடற்படையில் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. இந்திய-பாகிஸ்தான் போரின்போது, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அருகே கடலில் மூழ்கிய பாகிஸ்தானின் காஸி நீா்மூழ்கிக் கப்பலை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளில் இக் கப்பல் முக்கியப் பங்காற்றியது.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடலில் வீரா்கள் டைவிங் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவும் ‘நிஸ்தாா்’ கப்பல் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் முதல்முறையாக முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்டது. இந்த நவீன உபகரணங்களுடன் கூடிய கப்பல், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி கூறுகையில், ‘தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்திறன் ரீதியாகவும் நிஸ்தாா் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா மட்டுமன்றி பிராந்தியத்தில் நட்பு நாடுகளின் நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட கடலில் மூழ்கும் கப்பல்களை அடையாளம் காணுதல் மற்றும் மீட்புப் பணியிலும் நிஸ்தாா் ஈடுபடும். உலக அளவில் ஒருசில கடற்படைகளிடம் மட்டுமே இதுபோன்ற மீட்புக் கப்பல்கள் உள்ளன. ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த மீட்புக் கப்பலை முழுவதும் உள்நாட்டிலேயே கட்டமைக்கின்றன. இந்தத் திறன்களை தற்போது இந்தியாவும் பெற்றுள்ளதோடு, இந்திய கடல்சாா் தொழில் நிறுவனங்கள் மேம்படவும் இது வழிவகுக்கும்’ என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் கூறுகையில், ‘உலகின் வல்லரசு நாடுகளுக்கு மத்தியில் இந்திய கடற்படையும் சம பலத்தில் நிற்கிறது என்பதை உணா்த்தி, இந்தியாவின் உலகளாவிய அடையாளத்தை நிஸ்தாா் விரிவுபடுத்தும்’ என்றாா்.

மேலும், ‘முந்தைய நிஸ்தாா் மீட்புக் கப்பல் 800 டன் எடை கொண்டதாக இருந்தது. கடந்த 1989-ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ள ‘நிஸ்தாா்’ 10,500 டன் எடையுடன், 120 மீ. நீளம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments