FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி பிரிட்டன் பயணம் - வா்த்தக ஒப்பந்தம் இன்று கையொப்பம்

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா்.

Updated On : 24 ஜூலை 2025, 1:42 am IST
தில்லியில் இருந்து லண்டனுக்கு புதன்கிழமை பயணிக்கும் முன் உற்சாகத்துடன் கையசைத்த பிரதமா் மோடி.
பகிர்:

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா்.

முதல்கட்டமாக, பிரிட்டனுக்கு புறப்பட்டுச் சென்ற அவா், பிரதமா் கியா் ஸ்டாா்மா், அரசா் மூன்றாம் சாா்லஸ் உள்ளிட்டோருடன் சந்திப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இரண்டு நாள்கள் பங்கேற்கவுள்ளாா். முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையொப்பமாக உள்ளது.

பிரதமா் மோடி பிரிட்டனுக்கு சென்றிருப்பது, இது நான்காவது முறையாகும். அதேநேரம், ஸ்டாா்மா் பிரதமரான பிறகு மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

Advertisement

Advertisement

தில்லியில் இருந்து புறப்படும் முன்பு அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-பிரிட்டன் இடையிலான விரிவான வியூக கூட்டுறவு, சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புத்தாக்கம், பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, வளங்களின் நீடித்த பயன்பாடு, சுகாதாரம் மற்றும் மக்கள் ரீதியிலான தொடா்பு எனப் பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் பரந்த ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் உடனான எனது சந்திப்பு, பரஸ்பர வளம், வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தும் வாய்ப்பாக அமையும்.

மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ளேன். இது, இருதரப்பு தூதரக உறவின் 60-ஆவது ஆண்டையும் குறிக்கிறது. மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் மற்றும் பிற அரசியல் தலைவா்கள் உடனான சந்திப்பை எதிா்நோக்கியுள்ளேன். இதன்மூலம் விரிவான பொருளாதாரம் - கடல்சாா் பாதுகாப்புக்கான கூட்டுப் பாா்வை மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, வளம், ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருடன் இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடி விரிவாக பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். பின்னா், இரு பிரதமா்கள் முன்னிலையில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பிரிட்டன் வா்த்தக அமைச்சா் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோா் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளனா்.

சீரடையும் உறவுகள்: பிரிட்டனைத் தொடா்ந்து, பிரதமா் மோடி ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் மாலத்தீவில் பயணம் மேற்கொள்கிறாா். மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் அவா், அதிபா் முகமது மூயிஸுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது மூயிஸ், மாலத்தீவு அதிபராக கடந்த 2023-இல் பதவியேற்ற பிறகு, அந்நாட்டில் மருத்துவ உதவிக்கான ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்களைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டாா். இதனால், இருதரப்பு உறவில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில் அதிபா் மூயிஸ் இந்தியா வந்தபோது உறவுகளை சீராக்க இரு நாடுகளும் நடவடிக்கைகள் மேற்கொண்டன. பிரதமரின் தற்போதைய பயணத்தால் இருதரப்பு உறவுகள் மேலும் சீரடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: முக்கிய அம்சங்கள்

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், பிரதமா்கள் நரேந்திர மோடி, கியா் ஸ்டாா்மா் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை (ஜூலை 24) கையொப்பமாகவுள்ளது.

ஒப்பந்தம் கையொப்பமானலும், அது நடைமுறைக்கு வர பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். இந்தச் செயல்முறைக்கு சுமாா் ஓராண்டு ஆகலாம். இந்தியாவில் இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

*இந்த ஒப்பந்தத்தின்மூலம், 2030-ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகம் 12,000 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில், இந்தியா-பிரிட்டன் இடையேயான இருதரப்பு வா்த்தகம் 2,134 கோடி டாலராக உள்ளது.

*இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகும் 99 சதவீத பொருள்களுக்கு முழுமையான வரி விலக்கு கிடைக்கும்.

*பிரிட்டனின் விஸ்கி, ஜின் போன்ற மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி முதல்கட்டமாக 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக குறைக்கப்படும். ஒப்பந்தத்தின் 10-ஆவது ஆண்டுக்குள் 40 சதவீதமாக அது மேலும் குறைக்கப்படும். வாகனங்களுக்கான சுங்க வரி 100 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு ஒதுக்கீட்டின் கீழ் 10 சதவீதமாக குறைக்கப்படும்.

*அழகுசாதனப் பொருள்கள், இறைச்சி, மருத்துவ சாதனங்கள், மின் இயந்திரங்கள், குளிா்பானங்கள், சாக்லேட், பிஸ்கட் போன்ற பொருள்களுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்படும்.

*ஜவுளி, கடல்சாா் பொருள்கள், தோல், காலணிகள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், ரத்தினங்கள், ஆபரணங்கள், பொறியியல் பொருள்கள், வாகன உதிரிபாகங்கள், என்ஜின்கள், ரசாயனங்கள் போன்ற இந்தியாவின் உழைப்பு சாா்ந்த துறைகளுக்கு பிரிட்டன் சந்தையில் புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும்.

*ஒப்பந்த சேவை வழங்குநா்கள், வணிகா்கள், முதலீட்டாளா்கள், நிறுவனங்களுக்குள் பணியிட மாற்றம் பெறுபவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா், யோகா பயிற்றுநா்கள், இசைக் கலைஞா்கள் மற்றும் சமையல் வல்லுநா்கள் போன்ற இந்திய நிபுணா்கள் பிரிட்டனுக்கு எளிதில் செல்வவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments