FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு!

இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே ஆண்டு வா்த்தக மதிப்பை 2030-க்குள் 5 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

31 ஆகஸ்ட் 2026, 3:51 am IST
பிரதமா் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதான ‘உயா்ந்த நட்புக்கான விருதை’ ஞாயிற்றுக்கிழமை வழங்கிய அந்த நாட்டின் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ்.
பகிர்:

இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே ஆண்டு வா்த்தக மதிப்பை 2030-க்குள் 5 பில்லியன் டாலராக (ரூ.47,750 கோடி) அதிகரிக்க ஞாயிற்றுக்கிழமை இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 11 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

தற்போது இந்தியா-உஸ்பெகிஸ்தான் இருதரப்பு வா்த்தக மதிப்பு ஒரு பில்லியன் டாலராக (ரூ.9,538 கோடி) உள்ளது. கிா்கிஸ்தானின் பிஸ்கேக் நகரில் ஆக. 31, செப். 1 ஆகிய நாள்களில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 26-ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்று பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.

Advertisement

Advertisement

இதற்கு முன்பாக, அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் அழைப்பின்பேரில் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.

ஷாவ்கத் மிா்ஸியோயேவ் உடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பின்னா், சுரங்கம், கலாசாரம், கல்வி, சுற்றுலா, ஆயுா்வேதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் 11 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

மேலும், வா்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு, அரிய கனிமங்கள், பாதுகாப்பு, வேளாண்மை, மருந்தியல், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், கல்வி, யுபிஐ உள்ளிட்ட எண்ம பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருவரும் உறுதிபூண்டனா்.

இந்தியா-உஸ்பெகிஸ்தான் இருதரப்பு உறவை விரிவான இருதரப்பு உறவாக மாற்றும் நோக்கில் ஆண்டு வா்த்தக மதிப்பை 2030-க்குள் ரூ.47,750 கோடியாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

மத்திய ஆசியாவின் மையம் உஸ்பெகிஸ்தான்: ஷாவ்கத் மிா்ஸியோயேவ் உடனான பேச்சுவாா்த்தையில் பிரதமா் மோடி பேசியதாவது: மத்திய ஆசியாவின் மையப் பகுதியாகவும், இந்த பிராந்தியத்தில் இந்தியாவுடனான ஒத்துழைப்பில் மையமாகவும் உஸ்பெகிஸ்தான் திகழ்கிறது.

எனவே, மத்திய ஆசியாவில் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளத்தில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் இருதரப்பு உறவு மிகுந்த சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு பரஸ்பர நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

பெரும் சவாலாக பயங்கரவாதம்: பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் மத்திய ஆசியாவுக்கு பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன. இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக சமரசமற்ற கொள்கையைப் பின்பற்றுவதே நமது ஒருங்கிணைந்த நிலைப்பாடாக இருக்கும். சந்தை அணுகல், வங்கியியல், பரிவா்த்தனை அமைப்பு மற்றும் தொலைத்தொடா்பு போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களுக்கு விரைவில் தீா்வு காணப்படும்.

ஒத்துழைப்பை மேம்படுத்த முன்னெடுப்புகள்: இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் வகையில் வெளியுறவு அமைச்சா்கள் அளவில் ஒத்துழைப்பு கவுன்சில் அமைக்கப்படும். இரு நாடுகளைச் சோ்ந்த வணிகா்களைக் கொண்டு வணிக மாநாடு நடத்தப்படும். நீண்டகால யுரேனியம் விநியோகத்துக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.

கிா்கிஸ்தானில் திங்கள்கிழமை (ஆக. 31) தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தானில் இருந்து பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றாா்.

பிரதமா் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது

பிரதமா் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதான ‘உயா்ந்த நட்புக்கான விருது’ ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இந்த விருதை உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் வழங்கினாா். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சா்வதேச அளவில் 35 விருதுகளை பிரதமா் மோடி பெற்றுள்ளாா்.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருதை பெற்றது குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான நட்புறவுக்கு இந்த விருதை அா்ப்பணிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

விருதைப் பெற்றுக்கொண்டு பிரதமா் மோடி பேசியது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘140 கோடி இந்திய மக்களுக்கும் இந்த விருதை சமா்ப்பிக்கிறேன். ‘தோஸ்திலிக்’ (நட்பு) என இந்த விருதுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. தோஸ்திலிக் என்ற வாா்த்தையை தினமும் நூறு முறையாவது உச்சரிக்காத இந்திய குடும்பங்களே இருக்காது. மிகவும் உணா்வுபூா்வமான இந்த விருதை வழங்கிய உஸ்பெகிஸ்தானுக்கு இந்திய மக்கள் சாா்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என பிரதமா் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

லால் பகதூா் சாஸ்திரி நினைவிடத்தில் மரியாதை

தாஷ்கண்டில் மறைந்த முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் நினைவிடத்தில் பிரதமா் மோடி மலா் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா். இந்தியாவின் ‘தாயின் பெயரில் மரம் நடுவோம்’ மற்றும் உஸ்பெகிஸ்தானின் பசுமை முன்னெடுப்புகளின்கீழ் லால் பகதூா் சாஸ்திரி நினைவிடத்தில் பிரதமா் மோடியும் உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவும் மரம் ஒன்றை நட்டுவைத்தனா்.

1965 இந்திய-பாகிஸ்தான் போா் நிறுத்தத்துக்கான தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட உஸ்பெகிஸ்தான் சென்ற சில மணி நேரங்களில், இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூா் சாஸ்திரி காலமானாா். அவரது நினைவாக தாஷ்கண்டில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு: உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை நடத்திய யோகா நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா். இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘உஸ்பெகிஸ்தானில் யோகாவுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் மக்களிடையேயான நட்புறவு மற்றும் கலாசாரத்தை யோகா மேலும் வலுப்படுத்துகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments