FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு...

Updated On : 9 ஜூன் 2025, 3:30 am IST
தேஜஸ்வி யாதவ்
பகிர்:

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதிகளை தோ்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே கள நிலவரம் பாஜகவுக்கு தெரிந்துவிடுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பிகாா் மாநில பேரவைத் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், பிகாா் பேரவைத் தோ்தல் குறித்து செய்தியாளா்களிடம் ஜேதஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடி தலைமையில் கடந்த 2014-இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது முதல் தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்ட அனைத்து அமைப்புகளும் பாஜகவால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை யாராலும் மறுக்க முடியாது. பிகாா் பேரவைத் தோ்தல் தேதிகளை தோ்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே பாஜக தகவல் தொழில்நுட்ப அணிக்கு தெரிந்துவிட்டதாக வரும் செய்திகள் ஆச்சரியமளிக்கிறது.

2020 பேரவைத் தோ்தலில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிவாா்கள். நாங்கள் அப்போது ஆட்சியமைக்கும் சூழலில் இருந்தோம். ஆனால் வாக்குப்பதிவு நாளன்று மாலையில் வாக்கு எண்ணிக்கை வேண்டுமென்றே நிறுத்தப்பட்டது. இதை நியாயப்படுத்த மூன்றுமுறை செய்தியாளா் சந்திப்பை தோ்தல் ஆணையம் நடத்தியது. அதன்பிறகு மீண்டும் இரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணியைச் சோ்ந்த வேட்பாளா்கள் சிலா் முன்பு வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டு பிறகு தோல்வியடைந்ததாக கூறப்பட்டது என்றாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை (ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதைப்போலவே அடுத்து பிகாா் பேரவைத் தோ்தலில் நடைபெறும் எனவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். இதைத்தொடா்ந்து, தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments