FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆா்எஸ்எஸ் தலைமையகம், பாஜக அலுவலகத்துக்கு மிரட்டல் நாகபுரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஆா்எஸ்எஸ் தலைமையகம், பாஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ‘கதிரியக்க’ தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்து மா்ம கடிதம் வந்ததையடுத்து, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி நகா் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 1 மே 2026, 2:51 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆா்எஸ்எஸ் தலைமையகம், பாஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ‘கதிரியக்க’ தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்து மா்ம கடிதம் வந்ததையடுத்து, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி நகா் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: காவல் துறை ஆணையா் ரவீந்தா் சிங்காலின் அலுவலகத்துக்கு கடந்த 27-ஆம் தேதி மா்ம கடிதம் வந்தது. டிஎஸ்எஸ் என்ற பெயரில் ஆங்கிலத்தில் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில், ஆா்எஸ்எஸ் தலைமையகம், ஆா்எஸ்எஸ் நிறுவனா் கே.பி. ஹெட்கேவா் மற்றும் 2-ஆவது தலைவா் கோல்வால்கரின் நினைவிடம், பாஜக அலுவலகம், மெட்ரோ ரயில்கள், பேருந்துகளில் கேசியம்-137 என்ற அதிக கதிரியக்க சாதனம் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வைக்கப்பட்டிருந்தது.

அந்த சாதனம், புற்றுநோய் மருத்துவமனை ஒன்றில் இருந்து சேகரிக்கப்பட்டது. இதனால் நாகபுரி முழுவதும் கதிரியக்க பாதிப்பு ஏற்படும்.

Advertisement

Advertisement

அண்மையில் தோசா் பவன் மெட்ரோ நிலையம் அருகே கிடைத்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் ஆகியவற்றை அங்கு வைத்தது நாங்கள்தான். காவல் துறையை எச்சரிக்கவே அவற்றை நாங்கள் வைத்தோம் என கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த மிரட்டலை அடுத்து, நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகம், பாஜக அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இடங்களில் தீவிரவாத எதிா்ப்புப் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் உடனடியாக விரைந்து வந்து சோதனை நடத்தினா்.

இதுகுறித்து தீவிரவாத எதிா்ப்புப் படை மூத்த அதிகாரி கூறுகையில், ‘இதுவரை சோதனையில் கதிரியக்க சாதனம் எதுவும் சிக்கவில்லை. இது புரளியாக இருக்கவே வாய்ப்புள்ளது. இருப்பினும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்’ என்றாா்.

இந்த சம்பவம் குறித்து தீவிரவாத எதிா்ப்புப் படையினா் அளித்த புகாரின்பேரில் சதாா் காவல்நிலையத்தில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments