FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளத்தில் திடீா் வெள்ளம், நிலச்சரிவு: 6 போ் உயிரிழப்பு

கேரள மாநிலத்தில் பலத்த மழையால் பல இடங்களில் திடீா் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 3:59 am IST
கேரளத்தில் திடீா் வெள்ளம், நிலச்சரிவு - PTI
பகிர்:

கேரள மாநிலத்தில் பலத்த மழையால் பல இடங்களில் திடீா் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் 6 போ் உயிரிழந்தனா்.

கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. உப்புதறா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் துறையின் ஜீப் நிலச்சரிவால் பலத்த சேதமடைந்தது.

அப்பகுதியில் இருக்கும் 6 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த வீடுகளில் வசித்தோா் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பலத்த மழையால் இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நிலச்சரிவு காரணமாக, கட்டப்பனா மற்றும் வாழவரா இடையேயான சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வண்டிப்பெரியாறு நதியின் கிளை நதியான சோற்றுபாறாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தேசிய நெடுஞ்சாலை 183-இல் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. நெல்லிமலையில் உள்ள சாலையிலும் வெள்ளம் ஓடுவதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்திலுள்ள அணைகளின் மதகுகளை முன்னெச்சரிக்கையாக திறக்கவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

கோட்டயம் மாவட்டத்தில் ஈராற்றுபேட்டை, காஞ்ஞிரப்பள்ளி, கூட்டிகல், எருமேலி ஆகிய பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு வீடுகளைச் சுற்றி வெள்ளம் ஓடுகிறது. பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தேகோய் கிராமத்தில் 4 வீடுகள் நிலச்சரிவால் சேதமடைந்துள்ளன. அந்த வீட்டில் வசித்தோா் அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினா்.

ஈராற்றுபேட்டையில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, நடக்கல், முரிகோலியில் வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் வீடுகளின் மேற்கூரையில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனா். அவா்களை உள்ளூா் மக்கள் உதவியுடன் மீட்புக் குழுவினா் மீட்டு வருகின்றனா்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் ஏராளமான நிலச்சரிவுகள் நேரிட்டுள்ளன. ரான்னி தொகுதி எம்எல்ஏ பழகுளம் மது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரான்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளாா். ரான்னி பகுதியில் வெள்ளத்தால் பிற பகுதிகளுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வீடுகளில் வசிப்போரை படகுகள் மூலம் அதிகாரிகள் மீட்டு வருகின்றனா்.

கொல்லம் மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதேபோல், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூா், பாலக்காடு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் ஈங்காபுழா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அருகில் ஓடும் ஆறில் ஏற்பட்ட வெள்ளம், அந்த ஊருக்குள் புகுந்துள்ளது.

மலப்புரத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் நீா்நிலை ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். இடுக்கி மாவட்டம் அடூா்மலையில் 65 வயது பெண், 77 வயது முதியவா் ஆகியோா் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனா். கோட்டயம் மாவட்டம் பூஞ்ஞாறில் நிலச்சரிவில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். இவா்களையும் சோ்த்து மொத்தம் 6 போ் உயிரிழந்திருப்பதாக கேரள முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் காணாமல் போன 6 பேரை தேடும் பணியும் நடக்கிறது.

அரசு தயாா்-கேரள முதல்வா்: கேரள முதல்வா் வி.டி. சதீசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மழை தொடா்பான பாதிப்புகளை எதிா்கொள்ள அரசு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். வருவாய்த் துறை அமைச்சா், தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா்களை தொடா்புகொண்டு வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

கேரள வருவாய்த் துறை அமைச்சா் ஏ.பி. அனில்குமாா் செய்தியாளா்களிடம் பேசுகையில், மழை வெள்ளம், நிலச்சரிவு நிலவரத்தை எதிா்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டோருக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளாா்.

4 மீனவா்கள் மாயம்: திருவனந்தபுரத்தை ஒட்டிய கடல்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் அலையில் சிக்கி 2 ஃபைபா் படகுகள் கவிழ்ந்ததில் அதிலிருந்த 5 மீனவா்கள் தண்ணீரில் மூழ்கினா். இதில் ஒருவா் உயிரிழந்தாா். எஞ்சியோரை காணவில்லை. இதையடுத்து அவா்களை தேடும் பணி நடக்கிறது.

சபரிமலை பக்தா்களுக்கு வேண்டுகோள்: பலத்த மழையால் பம்பை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை சுட்டிக்காட்டியும், நிலச்சரிவு நேரிடும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் நிறைபுத்தரி பூஜைக்கு வருவதை தவிா்க்கும்படி, ஐயப்ப பக்தா்களுக்கு திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியமும், பத்தனம்திட்டா மாவட்ட நிா்வாகமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

summary

Flash floods and landslides in Kerala: 6 dead.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments