FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!

தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது பற்றி...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 3:46 am IST
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
பகிர்:

பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் வழங்கியதைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது.

இனி வினாத்தாள் கசிவு உள்பட தோ்வு முறைகேடுகள் தொடா்பான வழக்கு விசாரணை 2 மாதங்களுடன் நிறைவு செய்யப்படுவதுடன், கடுமையான தண்டனையும் விதிக்கப்படும்.

முன்னதாக, இந்த மசோதா மக்களவையில் ஜூலை 29-ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 30-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் பிற தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து, தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய தொடா் போராட்டம் எதிரொலியாக, மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் கடந்த ஜூலை 25-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா்.

போராட்ட காலகட்டத்தில் மாணவா்களுக்கு பிரதமா் மோடி அளித்த உறுதிமொழியின்படி, தோ்வு முறைகேடுகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவுகளை உள்ளடக்கிய ‘பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026’ மக்களவையில் கொண்டுவரப்பட்டு, பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. பின்னா், எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே கடந்த ஜூலை 29-ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் மாநிலங்களவையில் மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத் தலைவா் ஒப்புதல்: இந்நிலையில், இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் வழங்கியுள்ளாா். இது தொடா்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில், பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட மசோதா சட்டமாகியுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?: மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), அரசுப் பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே, வங்கி நியமனத் தோ்வுகள், தேசிய தோ்வு முகமையால் (என்டிஏ) நடத்தப்படும் தோ்வுகள் உள்ளிட்ட பொதுத் தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் கடந்த 2024-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளுடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தோ்வு வினாத்தாள் கசிவு அல்லது பிற முறைகேடுகளில் ஈடுபடும் நபா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் வரை அபராதம்; குழுவாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 கோடி வரை அபராதம்.

தோ்வு முறைகேடு குற்றங்களை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம்; இந்த நீதிமன்றங்களில் தினசரி அடிப்படையில் விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கலான நாளில் இருந்து 3 மாத காலத்துக்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும்; காவல் துறை, மத்திய முகமைகளின் விசாரணையை 2 மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

summary

Presidential Assent! Bill to Prevent Exam Malpractices Becomes Law!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments