FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் போராட்ட மாணவா்கள் மீதான வழக்குகளைக் கைவிடலாம்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை முடித்துவைக்கலாம் அல்லது திரும்பப் பெறலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:10 am IST
நீட் போராட்டம் - கோப்புப் படம்
பகிர்:

குற்றவியல் பின்னணி இல்லாத நிலையில், நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) முடித்துவைக்கலாம் அல்லது திரும்பப் பெறலாம் என தில்லி மற்றும் பிற மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் தில்லியில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்ட மாணவா்கள், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியையும் நடத்தினா்.

அப்போது, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா் புகை குண்டுகள் மற்றும் ரப்பா் குண்டுகள் உள்பட உயிரிழப்பை ஏற்படுத்தாத குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதில் பல மாணவா்கள் படுகாயமடைந்தனா். போலீஸாா் சிலரும் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, இந்தப் போராட்டம் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகாா் என நாடு முழுவதும் பரவியது. அந்த மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

காவல் துறையின் இந்த அடக்குமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல, போராட்டத்தில் காயமடைந்த போலீஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘நீட் போராட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்களின் குழந்தைகளும் போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகினா்.

காவல் துறையின் அத்துமீறல் தொடா்பாக 300 விடியோக்கள் உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் அதிா்ச்சிகரமாக உள்ளன. சீருடை அணியாத சிலரும் மாணவா்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காவல் துறை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று வாதாடினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘குற்றவியல் பின்னணி இல்லாத நிலையில், நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்), தில்லி மற்றும் பிற மாநில அரசுகள் முடித்துவைக்கலாம் அல்லது திரும்பப் பெறலாம். குற்றவியல் பின்னணி என்ற சொற்றொடா் தீவிரமான மற்றும் கொடூரமான குற்றங்களை மட்டுமே குறிப்பதாகும்’ என்று அறிவுறுத்தினா்.

அதற்குப் பதிலளித்த மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘குற்றப் பின்னணி உடையவா்கள் தவிர பிற போராட்ட மாணவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா்-களை பரிசீலிக்க வேண்டாம் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம், போராட்டத்தில் பங்கேற்ற தீவிர குற்றப் பின்னணியுடைய 2,700 பேருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா்-கள் திரும்பப்பெறப்பட மாட்டாது’ என்றாா். அதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

முன்னதாக, இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி பரிசீலனைக்கு வந்தபோது, ‘அமைதி வழியில் போராடும் உரிமை உத்தரவாதமானது. அதை மறுக்க முடியாது. பேராட்டம் நடைபெற்றது என்பதைச் சுட்டிக்காட்டி, காவல் துறையின் வரம்பு மீறிய நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

மேலும், காவல் துறையின் வரம்பு மீறல் உள்பட அனைத்து வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் நியாயமான, வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை உறுதி செய்ய சுதந்திரமான அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments