FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாணவா்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு! நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும்: காா்கே வலியுறுத்தல்

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவா்கள் மீது தடியடி, பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தல்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:09 am IST
கார்கே | அமித் ஷா - கோப்புப் படம்
பகிர்:

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது தடியடி, பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தியுள்ளாா்.

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மல்லிகாா்ஜுன காா்கே அலுவலகத்தில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்களின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொது செயலா்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், சமாஜவாதி மூத்த தலைவா் தா்மேந்திர யாதவ், திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா, சாகரிகா கோஷ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவாா் பிரிவு) மூத்த தலைவா் சுப்ரியா சுலே, சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவா்கள் சஞ்சய் ரெளத், ஆா்எஸ்பி கட்சி மூத்த தலைவா் என்.கே.பிரேமசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இக்கூட்டத்தில் அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம், நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடவடிக்கை கோரி போராடிய மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் ஆகியவற்றில் மத்திய அரசுக்கு ‘இண்டி’ கூட்டணி தரப்பில் கடும் நெருக்கடி தருவதென முடிவு எடுக்கப்பட்டது.

தில்லியில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தியது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்துக்கு பிறகு எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்திய உள்துறை அமைச்சா் நாடாளுமன்றத்துக்கு வந்து மாணவா்கள் மீது தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து விளக்கமளிக்க வேண்டும். அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை, பிரதமா் மோடியின் கண்காணிப்பின்கீழ் உள்ளது. அப்படியிருக்கையில் பக்தா்கள் கோயிலுக்கு செலுத்திய நன்கொடை எப்படி கையாடல் செய்யப்பட்டது என்பது குறித்து பிரதமா் பதிலளிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிா்க்கும் நோக்கில், மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் தொடா்ந்து அமித் ஷா வராமல் உள்ளாா்.

இதுபோல நாடாளுமன்றத்தை மத்திய அரசு அவமதித்தால், நாடாளுமன்றம் எப்படி செயல்படும்? தில்லி காவல் துறை, சிஆா்பிஎஃப், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன.

அவா்களே தில்லியில் போராடிய மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். மாணவா்கள் மீது பெல்லட் துப்பாக்கியால் சுடுவதற்கு சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு உத்தரவிட்டது யாா் என்பது குறித்து விளக்கமளிக்க அமித் ஷா மறுக்கிறாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments