ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதம் மாற்றமில்லாமல் 5.25 சதவீதமாக தொடர்வது குறித்து...
உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதம் மாற்றமில்லாமல் 5.25 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை அறிவித்துள்ளது.
மும்பையில் ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் 6 போ் அடங்கிய குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்தது. எனவே, வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றில் மாற்றம் இருக்காது.
மேற்கு ஆசிய மோதல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போா் காரணமாக சர்வதேச அளிவில் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. இது உலக பொருளாதாரத்துக்கு தொடர்ந்து பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்த சூழலில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஆா்பிஐ முடிவு செய்துள்ளது. எனவே, இப்போது ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றம் செய்யாமல் 5.25 சதவீதமாக தொடரும். அதேவேளையில், பணவியல் கொள்கைக் குழு தனது நடுநிலையான கொள்கை நிலைப்பாட்டையும் தக்கவைத்துக் கொண்டது. இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
2027 நிதியாண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்க கணிப்பை, முன்னர் மதிப்பிடப்பட்ட 5.1 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
இதற்கு முன் ஜூலை மாதத்தில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்திலும் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்பை விட 10 அடிப்படை புள்ளிகள் அதிகம்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி நடவடிக்கைகள் காரணமாக உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் நீடிப்பதாகவும், மேற்காசிய நாடுகளில் நிலவும் நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் நிதிச் சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும்,பணவீக்கம் முந்தைய உச்ச நிலைகளை விடக் குறைந்திருந்தாலும், சமீபத்திய மாதங்களில் அது சற்று அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலைகள், நாணய மாற்று விகித மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் நிகழ்வுகள் போன்ற காரணிகள் தொடர்ந்து பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், பணவீக்கம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே நீடிக்கிறது.
உள்நாட்டுச் சூழலைப் பொறுத்தவரை, வலுவான வளர்ச்சி வேகம், சாதகமான பருவமழை மற்றும் தொடர்ந்து வரும் அந்நிய மூலதன வரத்து ஆகியவற்றின் ஆதரவுடன் பொருளாதார நடவடிக்கைகள் உறுதியாகத் தொடர்கிறது.
நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து உறுதியை வெளிப்படுத்துவதாகக் கூறிய மல்ஹோத்ரா, அதேசமயம் சில துறைகளில் அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் எச்சரித்தார்.
பணவீக்கம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் நீடிப்பதால், கொள்கை முடிவுகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
RBI has decided to keep the repo rate unchanged at 5.25 percent.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.