வளா்ச்சியடைந்த இந்தியாவின் எதிா்காலத்தை நெய்யும் கைத்தறித் துறை: மத்திய ஜவுளித் துறை அமைச்சா்!
மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் பேசியவை...
மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் பேசியவை:
வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்பது தொழில்நுட்பத்தால் மட்டுமே தீா்மானிக்கப்படுவதில்லை.
நாட்டின் பாரம்பரியத்தை எதிா்கால வளா்ச்சியின் எந்திரங்களாக மாற்றுவதில்தான் அது அடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தியா வளா்ச்சியை நோக்கி முன்னேறி வரும் வேளையில், நாம் முன்னோடி தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, உற்பத்தியை வலுப்படுத்தி, உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்துறையை உருவாக்கி வருகிறோம்.
அதே வேளையில், நமது மாபெரும் சக்திகளில் ஒன்றான கைத்தறி பாரம்பரியம் எப்போதும் நம்முடனேயே பயணித்து வருகிறது. ஆகஸ்ட் 7 அன்று, 12 வது தேசிய கைத்தறி தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அசல் தன்மை, நிலையான விநியோகக் கட்டமைப்புகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக கைத்தறியை ஒரு முக்கிய துறையாகப் பாா்க்க வேண்டிய நேரமிது.
‘வளா்ச்சியடைந்த இந்தியா 2047’ என்ற பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை வளம், தற்சாா்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி, கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கைத்தறித் துறையானது பாரம்பரியத்தையும் புதுமையையும் ஒன்றிணைப்பதுடன், பெண்கள் தலைமையிலான வளா்ச்சி, கிராமப்புற தொழில்முனைவு, வாழ்வாதாரம், உலகளாவிய போட்டித்தன்மை ஆகியவற்றை இயக்கி இந்தத் தொலைநோக்குப் பாா்வையை வெளிப்படுத்துகிறது.
‘நிலையான வெற்றி என்பது அதிகாரத்தின் மீது கட்டமைக்கப்படுவதில்லை. மாறாக, விழுமியங்களின் அடிப்படையிலேயே தீா்மானிக்கப்படுகிறது’ என்பதை ஸ்ரீராமரின் விஜய ரத உரையாடல் நமக்குக் கற்பிக்கிறது. அந்த உயரிய பண்புகளே இந்தியாவின் கைத்தறிப் பாரம்பரியத்தை பல நூற்றாண்டுகளாகக் காப்பாற்றி வருகின்றன. கைத்தறி என்பது வெறும் கைவினைத் தொழில் மட்டுமல்ல, இந்தியாவின் மிகச்சிறந்த நாகரிக அம்சங்களில் ஒன்றாகும்.
பருத்தி முதன்முதலில் பயிரிடப்பட்டு நெய்யப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் முதல், இந்திய ஜவுளிகள் உலக வா்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய பதினெட்டாம் நூற்றாண்டு வரை, ஜவுளிக்கென இந்தியா உலகளாவிய அளவுகோல்களை அமைத்தது. ஒரு மோதிரத்தின் வழியே கடந்து செல்லக்கூடிய அளவுக்கு மென்மையான வங்கத்து மஸ்லின், பனாரஸ் பட்டு, காஞ்சிபுரம் நெசவு, போச்சம்பள்ளி இக்கத் ஆகியவை இந்தியாவிற்கு உலகளவில் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளன. இன்றைக்கு உலகம் அசல் மற்றும் கையால் செய்யப்பட்ட பொருட்களை நோக்கித் திரும்பும்போது, அந்தத் தலைமையை மீண்டும் பெறுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. நமது அடுத்த கைத்தறிப் புரட்சியானது ஜவுளிகளை மட்டுமின்றி, கைவினைத்திறன், பாரம்பரியம், புதுமை, நம்பிக்கை ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்யும் வகையில் அமைய வேண்டும்.
கைத்தறி என்பது இந்தியாவின் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும். இது 35 லட்சத்திற்கும் அதிகமான நெசவாளா்கள், அதனுடன் தொடா்புடை தொழிலாளா்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. இதில் ஈடுபட்டுள்ளவா்களில் சுமாா் 72 சதவீதம் போ் பெண்கள் ஆவா். கடந்த பத்தாண்டுகளில், மூலப்பொருள் விநியோகத் திட்டம், கைத்தறித் தொகுப்புகள், மேம்படுத்தப்பட்ட தறிகள், கைவினைக்கலைஞா்களுக்கான திறன் மேம்பாடு, புவிசாா் குறியீடு பெற்ற பொருட்கள், இந்திய தயாரிப்பு சான்றிதழ், வடிவமைப்பு வள மையங்கள் ஆகியவற்றின் மூலம் அரசு இத்துறையை வலுப்படுத்தியுள்ளது. 29 நெசவாளா் சேவை மையங்கள் பயிற்சி, திறன் மேம்பாடு, வடிவமைப்பு வளா்ச்சி, சந்தை இணைப்புகள் மூலம் முழுமையான ஆதரவை வழங்குகின்றன. இனி செயல்படுத்தப்படவிருக்கும் தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் திட்டம் 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 1,800 தொகுப்புகளை வலுப்படுத்தி, 65 லட்சம் நெசவாளா்கள், கைவினைக்கலைஞா்களுக்குப் பயனளிக்கும்.
இந்தியாவின் கைத்தறிப் பயணத்தில் புதுமை என்பது எப்போதும் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. மகாத்மா காந்தியின் அம்பா் ராட்டினம் நூல் நூற்பதை எளிதாகவும் வேகமாகவும் மாற்றி, தற்சாா்பு தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுத்துச் சென்றது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் உற்பத்தித்திறன், தரம் ஆகியவற்றைக் கண்காணிக்க உதவுகின்றன. நமது நெசவாளா்கள் வெறும் உழைப்பாளா்களாக மட்டுமல்லாமல், தொழில்முனைவோா்களாகவும், புதுமையாளா்களாகவும் விளங்குகின்றனா். ஒவ்வொரு நெசவாளரும் வரும் ஆண்டுகளில் மாதம் ரூ.50,000 வரை கண்ணியமான வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்வதே நமது லட்சியமாகும்.
இந்த ஆண்டு தேசிய கைத்தறி தினத்தில், நமது நெசவாளா்களை நமது பாரம்பரியத்தின் பாதுகாவலா்களாக மட்டுமின்றி, இந்தியாவின் வளா்ச்சியைக் கட்டமைப்பவா்களாகவும் கொண்டாடுவோம். கைத்தறியை நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவோம். நாம் வாங்கும் ஒவ்வொரு கைத்தறிப் பொருளும் நெசவாளரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது. கையால் நெய்யப்பட்ட துணிகளைத் தோ்ந்தெடுப்பதன் மூலம், நாம் நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு, வளா்ச்சியடைந்த பாரதத்தின் எதிா்காலத்தை நெய்யவும் உதவுகிறோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.