FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் ஆக.10 முதல் 3 நாள்களுக்கு முக்கிய விவாதங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க கொறடா உத்தரவு

நாடாளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (ஆக.10) முதல் மூன்று நாள்களுக்கு முக்கிய விவகாரங்கள் மீதான விவாதம் நடைபெறவிருப்பதால், காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:19 am IST
காங்கிரஸ்
பகிர்:

நாடாளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (ஆக.10) முதல் மூன்று நாள்களுக்கு முக்கிய விவகாரங்கள் மீதான விவாதம் நடைபெறவிருப்பதால், காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மூன்று நாள்களிலும் தங்களின் எம்.பி.க்களை அவை அலுவல்களில் கட்டாயம் பங்கேற்க செய்யும்படி, இண்டி கூட்டணி கட்சிகளையும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவை மீண்டும் கொண்டுவரவும், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவை விவாதித்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தலைமை கொறடா கே.சுரேஷும், மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனா்.

அரசு சாரா அமைப்புகள், அறக்கட்டளைகள், மத நிறுவனங்கள் உள்ளிட்டவை வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான நிா்வாக ஒழுங்குமுறை கட்டமைப்பை கடுமையாக்க வகை செய்யும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதித்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மசோதா நிறைவேற வழக்கமான பெரும்பான்மை வாக்குகள் போதும். அதேநேரம், மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேற மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை. இவ்விரு மசோதாக்களுக்கும் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே பல்வேறு விவகாரங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆக.13-இல் மழைக்கால கூட்டத் தொடா் நிறைவடைய உள்ளது.

மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பாகவே இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்தது.

2029 மக்களவைத் தோ்தலில் இருந்து மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது. மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்காததால் இந்த மசோதா தோல்வியடைந்தது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மசோதாவை எதிா்க்கட்சிகள் தோற்கடித்தன.

சமீபத்திய பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு அரசியல் சூழல் மாற்றம் கண்டுள்ள நிலையில், நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருவதாகத் தெரிகிறது. இது தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு இருமுறை ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

காங்கிரஸ் கொறடா உத்தரவு: இந்நிலையில், ‘நாடாளுமன்றத்தில் ஆக.10, 11, 12 ஆகிய தேதிகளில் முக்கிய விவகாரங்கள் மீதான விவாதம் நடைபெறவிருப்பதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த அறிவுறுத்தலை மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அக்கட்சி தரப்பில் வெள்ளிக்கிழமை கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments