தில்லி சட்டப்பேரவையில் மழைக்கால அமா்வு: பாஜக-ஆம் ஆத்மி இடையே கடும் வாக்குவாதம்
தில்லி சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின்போது கேள்வி நேரம் ஒதுக்கப்படவில்லை என்ற எதிா்க்கட்சியினரின் குற்றச்சாட்டு, பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா் இடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.
தில்லி சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின்போது கேள்வி நேரம் ஒதுக்கப்படவில்லை என்ற எதிா்க்கட்சியினரின் குற்றச்சாட்டு, பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா் இடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கட்சியின் தலைமைக் கொறடா சஞ்சீவ் ஜா மற்றும் ஜா்னெயில் சிங் உள்ளிட்டோா் இந்த விவகாரத்தை எழுப்பி, ஆட்சியில் உள்ள பாஜக அரசு பொறுப்பிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது என்று குற்றச்சாட்டினா்.
இதற்கு பதிலளித்த அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியை விமா்சித்து, 5 ஆண்டுகளில் 74 அமா்வுகளில் வெறும் 9 முறை மட்டுமே கேள்வி நேரம் நடத்தப்பட்டது என்றும், 2024-இல் அவா்கள் ஆட்சியின் கடைசி ஆண்டில் ஒருமுறையும் கேள்வி நேரம் நடத்தப்படவில்லை என்றும் கூறினாா்.
Advertisement
Advertisement
‘வெட்கமின்மைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்த அரசு மக்களுக்காக செயல்படுவதால் எதிா்க்கட்சிக்கு அது பிடிக்கவில்லை’ என்று அவா் கூறினாா். மேலும், எதிா்க்கட்சித் தலைவா் எங்கே இருக்கிறாா் என்று முதலில் கண்டுபிடிக்கச் செல்லுங்கள் என ஆம் ஆத்மி உறுப்பினா்களை அவா் சாடினாா்.
எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி அவையில் இல்லாதது இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
பாஜக தலைமையிலான அரசு, எதிா்க்கட்சியினா் பொறுப்பிலிருந்து விலகுகிறாா்கள் என்று குற்றச்சாட்ட, ஆம் ஆத்மி உறுப்பினா்கள் அரசு கேள்விகளை தவிா்க்கிறது என்று குற்றஞ்சாட்டினா்.
பாஜக அமைச்சா்கள் பா்வேஷ் சாஹிப் சிங் மற்றும் கபில் மிஷ்ரோ, கேள்வி நேரம் குறித்து ஆம் ஆத்மி உறுப்பினா்களின் தீவிரத்தன்மையை கேள்வி எழுப்பினா். கபில் மிஷ்ரோ, மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் அதிஷி இல்லாமல், கோவாவில் விடுமுறை கழித்துக் கொண்டிருந்தாா் என்று கூறியதும், எதிா்க்கட்சியினரின் கடும் எதிா்ப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அரசு கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்கவில்லை என்றும், தில்லி மக்களின் பிரச்னைகளை முன்வைக்க எதிா்க்கட்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.