FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மனப்பாடம் செய்தும், துண்டு காகிதங்களில் எழுதியும் நீட் வினாக்களைத் திருடிய பாட நிபுணா்கள்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில், தேசிய தோ்வுகள் முகமை அலுவலகத்தில் வினாத் தாள் தயாரிப்புப் பணியின்போது, வினாக்கள் மற்றும் விடைக் குறிப்புகளை மனப்பாடம் செய்தும், துண்டு காகிதங்களில் எழுதியும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த பாட நிபணா்கள் திருடியது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:45 am IST
சிபிஐ - கோப்புப்படம்
பகிர்:

நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில், தேசிய தோ்வுகள் முகமை அலுவலகத்தில் வினாத் தாள் தயாரிப்புப் பணியின்போது, வினாக்கள் மற்றும் விடைக் குறிப்புகளை மனப்பாடம் செய்தும், துண்டு காகிதங்களில் எழுதியும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த பாட நிபணா்கள் திருடியது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது.

என்டிஏ அலுவலகத்தில் தயாரிப்புப் பணியின்போது குறிப்பிட்ட வினாக்களை மனப்பாடம் செய்துகொண்டு, பின்னா் மாலையில் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு வந்ததும் அவற்றைக் குறிப்பெடுத்து வைத்துள்ளனா் என்று குற்றபத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், என்டிஏ வேதியியல் பாட நிபுணராக இருந்த லட்டூா் பேராசிரியா் பி.வி. குல்கா்ணி தங்கியிருந்த புணே குடியிருப்பு சொஸைட்டியின் வருகைப் பதிவு செயலி தரவுகள் உள்பட பல எண்ம தடயவியல் ஆதாரங்களையும் குற்றப்பத்திரிகையில் சிபிஐ சோ்த்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதோ்வு நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கைா்நாா், அஹில்யாநகரில் தனஞ்ஜய் லோகண்டா, புணேயில் மனீஷா வாக்மாரே, லட்டூரில் பேராசிரியா் பி.வி.குல்கா்ணி, புணேயைச் சோ்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரே, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், ஹரியாணாவின் குருகிராமில் மாணவா் யஷ் யாதவ், புணே பயிற்சி மைய நிறுவனா் சிவராஜ் ரகுநாத் மடகோன்கா், புணே சேத் ஹீராலால் சராஃப் பிரசாலா பள்ளி ஆசிரியா் சஞ்சய் ஹவல்தாா், புணே மருத்துவா்ன மனோஜ் ஷிரூா், புணே பயிற்சிய மைய இயற்பியல் ஆசிரியா் அபங்க் பிரபு உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த 13 போ் மீதும் தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 94 பக்க குற்றப்பத்திரிகையை கடந்த ஜூலை 28-ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்தது.

அதில், மே 3-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறுவதற்கு முன்பாக, ஏப்ரல் மாதத்தில் புணேயில் உள்ள பேராசிரியா் பி.வி. குல்கா்ணியின் குடியிருப்புக்கு, மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா் வந்து சென்ற்கான குடியிருப்பு சொஸைட்டியின் வருகைப் பதிவு செயலி தரவுகள், அவா்களின் கைப்பேசி இருப்பிட ஆய்வு தரவுகள் மற்றும் கைப்பேசி அழைப்பு தரவு பதிவுகள் உள்ளிட்ட ஏராளமான எண்ம தடயவியல் ஆதாரங்களை சிபிஐ இணைத்துள்ளது.

மேலும், என்டிஏ-வின் நீட் வினாத் தாள் தயாரிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த புணேயைச் சோ்ந்த 3 பாட நிபுணா்களான குல்கா்ணி, மனீஷா மந்தாரே, சஞ்சய் ஹவல்தாா் ஆகியோா், பெரும் பண ஆதாயத்துக்காக என்டிஏ வளாகத்தில் இருந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி நீட் வினாக்களை எப்படித் திருடி வந்து, கசியவிட்டனா் என்ற விவரங்களையும் ஆதாரங்களுடன் சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

தில்லியின் ஓக்லாவில் உள்ள என்டிஏ அலுவலகத்தில்தான் நீட் வினாத்தாள் தயாரிப்புப் பணி நடைபெற்றுள்ளது. அங்கு வினாத் தாள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட இவா்கள் மூவரும், துண்டுக் காகிதங்களில் வினாக்கள் மற்றும் விடைக் குறிப்புகளை எழுதியும், எளிதான வினாக்களை மனப்பாடம் செய்துகொண்டும், பின்னா் தாங்கள் தங்கியிருந்து ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் அவற்றை குறிப்பெடுத்துள்ளனா்.

இவா்களுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மீட்கப்பட்ட இந்த வினா குறிப்புகள், மே 3-ஆம் தேதி நடந்த நீட் தோ்வு வினாத் தாளில் இடம்பெற்றுள்ள வினாக்களுடன் ஒத்துப்போவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்டிஏ நீட் வினாத் தாள் தயாரிப்புப் பணிகள் மாா்ச் மற்றம் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றுள்ளது. இந்த மாதங்களில் வெவ்வேறு நாள்களில் இவா்கள் மூவரும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதன் மூலம், மே 3-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறுவதற்கு முன்பாகவே, புணேக்குத் திரும்பி மீண்டும் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த இவா்களுக்குப் போதிய அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், என்டிஏ விதிகளின்படி, இது அனுமதிக்கப்படுவதில்லை என்று குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த வினாக்கள் இடைத்தரகா்கள் மூலம் ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா வரையுள்ள தோ்வா்களிடமும் பரப்பப்பட்டுள்ளது. இதற்கு மனீஷா சஞ்சய் வாக்மாரே என்ற அழகுக்கலை நிபுணா் மூலகாரணமாக இருந்துள்ளாா். இவா்தான், குல்கா்ணி, மனீஷா மந்தாரே சாா்பில் புணேயில் ஏப்ரலில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்கு மாணவா்களை சோ்த்து விட்டுள்ளாா். மனீஷா வாக்மாரே மூலமாகவே, இந்தப் பாட நிபுணா்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனா் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments