பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
மத்திய அரசுக்கு அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.
மத்திய அரசுக்கு அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) மீண்டும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2004, ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த மத்திய அரசு ஊழியா்களுக்கு (ஆயுதப் படைப் பிரிவினா் தவிா்த்து) பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாக தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) கொண்டுவரப்பட்டது. இதன்கீழ் கடந்த 2025, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை தோ்ந்தெடுக்கும் மத்திய அரசு ஊழியா்களுக்கு பணிக்காலம் நிறைவடைந்தவுடன் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
மாநிலத்தின் விருப்பம்: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிக்கொள்வது மாநிலங்களின் தனிப்பட்ட விருப்பமாகும். ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், பஞ்சாப் மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இவ்வாறு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறியதாக மத்திய அரசு மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் (பிஎஃப்ஆா்டிஏ) தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதால் ஏற்படும் நிதிசாா் தாக்கங்களை தனது மாநில நிதி தணிக்கை அறிக்கையில் தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) குறிப்பிட்டுள்ளாா்.
மத்திய அரசுக்கு அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை.
ஜூலை 7-ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு ஊழியா்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ரூ.3.65 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் நிா்வகிக்கப்படுகின்றன’ என்றாா்.
நிதிப் பற்றாக்குறை: நிதிப் பற்றாக்குறை குறித்த மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘2021-22-இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறை 6.7 சதவீதமாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் இது 4.4 சதவீதமாக குறைந்தது. 2026-27 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.16.95 லட்சம் கோடியாக (4.3 சதவீதம்) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.