FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஏப்ரல்- ஜூன் காலாண்டு முடிவில் அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.3.08 லட்சம் கோடி

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டின் முடிவில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.3.08 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:15 am IST
பகிர்:

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டின் முடிவில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.3.08 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறையை 4.3 சதவீதமாக அல்லது ரூ.16.96 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

மத்திய தலைமைக் கணக்காயா் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி நாட்டின் செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இந்த நிதிப் பற்றாக்குறை, நடப்பு 2026-27 நிதியாண்டின் பட்ஜெட் இலக்கில் 18.2 சதவீதத்தை எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

கடந்த நிதியாண்டின் (2025-26) இதே முதல் காலாண்டில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 17.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மே மாத இறுதியில் இது 9.6 சதவீதமாக (ரூ.1.62 லட்சம் கோடி) இருந்த நிலையில், தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது.

வருவாய், செலவினம்...: ஜூன் மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.6.36 லட்சம் கோடியாகவும் (பட்ஜெட் இலக்கில் 22.2 சதவீதம்), வரியல்லாத வருவாய் ரூ.3.77 லட்சம் கோடியாகவும் (பட்ஜெட் இலக்கில் 56.7 சதவீதம்) உள்ளது. அதேநேரம், மொத்த செலவினம் ரூ.13.57 லட்சம் கோடியாக (பட்ஜெட் இலக்கில் 25.4 சதவீதம்) அதிகரித்துள்ளது. இதில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு ரூ.3.40 லட்சம் கோடியாகும்.

கடந்த சில மாதங்களாக ஈரான் போா் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட தாக்கம், நாட்டின் செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கச் செய்துள்ளது. இருப்பினும், அரசின் மொத்த வருவாய் ரூ.10.49 லட்சம் கோடியாக (பட்ஜெட் இலக்கில் 28.7%) வலுவாக உள்ளது. குறிப்பாக, வரியல்லாத வருவாயில் ரிசா்வ் வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கிடைத்த ஈவுத்தொகை மற்றும் லாபம் மட்டும் ரூ.3.02 லட்சம் கோடியை (வருடாந்திர இலக்கில் 77%) எட்டியுள்ளது.

அதேபோல், நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் மூலதனச் செலவினங்கள், பட்ஜெட் இலக்கில் 27.8 சதவீதத்தை (ரூ.3.40 லட்சம் கோடி) எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 24.5 சதவீதமாக மட்டுமே இருந்தது.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான இந்த மூலதனச் செலவின அதிகரிப்பு, நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சிக்குத் (ஜிடிபி) தேவையான வலுவான ஆதரவை அளிக்கும் என்று பொருளாதார நிபுணா்கள் கருதுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments